பிறர் புகழ வேண்டும் என்ற ஆசையிலேயே நாம் செயல்பட்டால் நல்லவைகள் மறைந்துவிடும்..!

arul-guru-gnanaguru.jpg

பிறர் புகழ வேண்டும் என்ற ஆசையிலேயே நாம் செயல்பட்டால் நல்லவைகள் மறைந்துவிடும்..! 

குழந்தை பாக்கியம் இல்லை என்று எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு… குழந்தை கிடைத்த பின் பெருமையும் பட்டு.. அதன் பின் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…?

எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூப்பிட்டார்கள். கலசம் வைக்க வேண்டும் என்றார்கள். வைத்துக் கொடுத்தேன். அதற்கப்புறம் வாருங்கள் என்று சொன்னேன்.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இந்தப் பக்கம் வரவே இல்லை. அப்பொழுது எம்முடைய உபதேசம் எல்லாம் என்ன ஆகிறது…?

உங்கள் எண்ணங்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள்… எதை… எப்படிப் பதிவாக்குகிறது..? பதிவின் நிலைகள் எப்படி உங்களை இயக்குகிறது…? அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் இந்த நிலைகள் “நான் செய்தேன்…!” என்று நீங்கள் எண்ண வேண்டாம்…!”
1.சாமி செய்தார்… என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கிறது…?
2.உங்கள் எண்ணத்தால் தான் அது உருவானது
3.உங்கள் எண்ணத்தின் உணர்வு கொண்டு உங்கள் உயிர் என்ன செய்கிறது..? என்று சொல்கிறோம்.
4.அதற்குண்டான ஒரு நல்ல கருவை… ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
5.அந்த ஞானத்தின் தொடர் கொண்டு நீங்கள் வளர்ந்து அதே வரிசையில் வரவேண்டும் அல்லவா…?

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது
2.நமக்குள் அந்த இணக்கங்கள் வந்து நல்வழியை உயர்த்தும்.

இதைத்தான் குருநாதர் “ஈஸ்வரபட்டர்” எமக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்…! என்று நான் நினைத்தேன் என்றால்
1.தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும்.
2.நல்லவைகள் மறைந்து கொண்டு தான் இருக்கும்.

ஆகவே அனுபவரீதியில் இதைக் கொண்டு வருவதற்குத்தான் இதை எல்லாம் தெளிவாகவே சொல்லிக் கொண்டு வருகின்றோம். சிறிது பேராவது இதை உணர்ந்து கொண்டால் தெளிவாகும்.

நம் குடும்பத்தில் ஒருவருக்கு நோயாகின்றது. அவரைப் பாசத்துடன் உற்றுப் பார்க்கின்றோம். அவரிடமிருந்து வேதனைப்படும் சொல்கள் வெளி வருகின்றது.

வேதனையான சொல்களைக் கேட்டு அவர்கள் கஷ்டங்களை நாம் நுகர்ந்தால் அந்த நோய் நமக்கும் வந்துவிடுகிறது. அந்தச் சொல்கள் ஒன்று தான்,

அதே போல் நீங்கள் அருள் ஒளி பெற்று உங்களால் நன்றாக ஆகும் பொழுது
1.நல்லதாக ஆனது…! என்ற இதே சொல்லை நீங்கள் சொன்னீர்கள் என்றால்
2.உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் தீமைகள் நீங்கும்.

ஞானிகள் கொடுத்த அரும்பெரும் சக்திகளை நான் விளம்பரம் செய்யாததன் நோக்கங்களே அது தான்..! ஏனென்றால்
1.ஆசையை ஊட்டிவிட்டோம்.. என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதைக் குறிக்கோளாக எண்ணி ஆசைப்பட்டு வருகின்றார்களோ அதுவே நிலைக்கின்றது.
3.அதன் நிலைக்கே வந்தவுடனே… அது கிடைத்த பின் தன்னைப் பாதுகாக்கும் சக்தி இழக்கின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதா…? ஆசைப்பட்டுத் தேடி வந்தது கிடைத்ததும் தங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் அருள் ஞானிகளின் அருள் சக்திகளை வளர்ப்பதில்லை.
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதும் இல்லை.

ஆரம்பத்திலிருந்து எத்தனையோ பேரை யாம் (ஞானகுரு) சந்தித்திருக்கின்றோம். அவர்களின் ஆசையின் உணர்வுகள் எப்படிப் போனது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் திரும்பவும் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

நான் (ஞானகுரு) அந்த அருள் ஞானிகள் பெற்ற அழியாச் சொத்தைத்தான் எனக்குள் தேடி வைத்திருக்கின்றேன். அதிலிருந்து ஞானத்தின் உணர்வுகளைத்தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்குக் கோடிப் பணம் வாங்கித் தருகிறேன்.. உங்கள் நோயை எல்லாம் நீக்கித் தருவேன்… உங்கள் குறைகளை எல்லாம் நான் நீக்குவேன்…! என்று சொல்ல வரவில்லை.

1.அருள் ஞானத்தைப் பெற்றால்
2.உங்களைத் தேடி எல்லாமே வரும்.
உடலுக்குப் பின் ஒளியின் சரீரமாகி அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் நீங்கள் ஐக்கியமாகலாம்…!

Leave a Reply