ஈஸ்வரபட்டர் ஒளியான உணர்வுகளையே நாம் பெறுதல் வேண்டும்…! ஏன்…?

Eaganthanilais

ஈஸ்வரபட்டர் ஒளியான உணர்வுகளையே நாம் பெறுதல் வேண்டும்…! ஏன்…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.

அவருடைய நிலைகளைப் பிறர் பார்க்கும் போது
1.தன்னைப் பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.
2.ஆனால் அந்தப் பைத்தியக்கார நிலையில்
3.அவருக்குள் “எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது…? என்பது நமக்குத் தெரியாது.

அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்…. ரசமணி செய்கிறேன்…! என்று மந்திரங்கள்… தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் சிலர் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலை விட்டுச் சென்றார்.
1.அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.
2.அதன் வழியில் தீமையை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்.

ஆனால் குருநாதர் காட்டிய அந்த மெய் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த அருள் ஒளி கிடைக்கும்.
1.அவரின் அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் மெய் வழி காணும் நிலைகள் கிடைக்கும்.
2.நாம் இந்த உடலில் இருக்கும்போது அந்த அருளைப் பெற்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.கணவன் மனைவியும் இதைப் போல் எண்ணுதல் வேண்டும்.

அன்று அகஸ்தியன் காட்டிய நிலைகள் துருவத்தில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தை அடைவோம்.

நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு)

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய அருளாசி (ஆசீர்வாதம்)

Spiritual wife.jpg

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய அருளாசி (ஆசீர்வாதம்)

புதிதாகத் திருமணமான கணவன் மனைவி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

திருமண நாளில் உங்களுக்கு ஆசீர்வதித்தார்கள் அல்லவா…!
1.அந்த அனைவரின் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு
2.கணவனுக்கோ மனைவிக்கோ இந்தக் குறைபாடுகள் வந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாதபடி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்… நாங்கள் தெளிந்த மணம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று மனைவி பால் உள்ள குறைகளை கணவன் இப்படி எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கணவன் பால் இத்தகைய குறைகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கணவன் பொருளறிந்து செயல்படும் சக்தியும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

என்னை அரவணைக்கும் அந்த அருள் ஞானம் என் கணவர் பெறவேண்டும்… அந்த அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதன் என்ற வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிறு குறைகள் வரத்தான் செய்யும்
2.அந்தக் குறைகளை உடனடியாக நீக்கிப் பழக வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே எந்தக் குறைகளைக் கண்டாலும் முதலில் தன் தாய் தந்தையரை எண்ணி உங்கள் திருமண நாளை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கணவர்/மனைவி பொருளறிந்து செயல்படும் அருள் சக்தியும் மலரைப் போல் மணம் பெறும் சக்தி பெற்று அருள் ஞானம் பெறும் அந்த அருளாசி எனக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… “எங்கள் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறவேண்டும்…” என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

கணவன் வெளியிலே எங்கே சென்றாலும் மனைவியிடம் சொல்லி
1.உன்னுடைய அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
2.எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
3.அந்த அருள் சக்தி உன்னிடம் தான் இருக்கின்றது…
4.எனக்கு அந்த அருளாசி கொடு…! என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.

அதே போல மனைவியும் கணவனை எண்ணி என் அன்னை தந்தையரின் அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவர் பெறவேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் அவர் பார்ப்போருக்கெல்லாம் நல்ல நிலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் பொழுதும் மனைவி தன் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் அவர் பார்வையில் அந்தப் பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் அந்தச் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

எங்கே வெளியில் சென்றாலும் கணவன் மனைவியிடம் சொல்லி
1.என் காரியம் சித்தியாக வேண்டும்
2.உன் அருள் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.
3.ஏனென்றால் இருவரும் வேறல்ல… சக்தி இல்லையேல் சிவமில்லை… சிவம் இல்லையேல் சக்தியில்லை….!

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்பொழுதுமே அன்னை தந்தையரின் அருளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே பேரின்பம் கிடைக்கும்.

1.சாதாரணமாக… “மனைவி தான்” என்று எண்ணிவிடக் கூடாது.
2.அருள் தெய்வம் என்ற எண்ணத்திலேயே நாம் வருதல் வேண்டும்.
3.மகாலட்சுமி என்று கூட நீங்கள் எண்ணலாம் – சர்வத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

பெண்களுடைய வாக்கை என்றுமே ஆண்கள் தொடர்ந்தால் எதை வாழ்த்தி அனுப்புகின்றார்களோ அந்த வாக்கின் பிரகாரம் அந்தக் காரியங்கள் நல்லதாகும்.

கணவன் மனைவி திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாக ஆனது போல
1.என்றுமே இந்த வாழ்க்கையில் எண்ணினால்
2.என்றுமே பிரியாத நிலைகள் கொண்டு உங்களுக்கு இனிப் பிறப்பே இல்லை.

இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இந்த வாழ்க்கையில் எப்பொழுது நீங்கள் பேரின்பம் பெறுகின்றீர்களோ அந்த அருள் வாழ்வு என்றுமே இருக்கும். அடுத்து உடல் இல்லை. இதே உடலின் உணர்வுகள் ஒளியாகிப் பேரின்பமாக வாழ முடியும்.

மனிதனின் ஞான வளர்ச்சிக்குச் செயலாற்றும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual forces of human

மனிதனின் ஞான வளர்ச்சிக்குச் செயலாற்றும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான் மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.