அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய அர்ச்சனை

souls-cleaning.jpg

அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய அர்ச்சனை

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து “இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதை நுகர்ந்தறிந்து அவருக்கு உதவி செய்தாலும் அவன் உடலில் வந்த நோயின் விளைவுகள் இங்கே காற்றிலே உண்டு. நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

மீண்டும் அவனை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நமக்கும் நோயாகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

நோயாளியைப் பார்த்து உதவி செய்தோம். மற்றவர்கள் வேதனைப்படுகின்றார்கள் என்று பார்த்து அதை அறிந்து கொள்கின்றோம். அப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு எல்லம் நாம் உதவி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். (அந்த வேதனைகளை நாம் துடைப்பதில்லை)

1.ஆனால் அவர்கள் உடலிலுள்ள வேதனைகளைத் தெரிந்து கொண்ட பின்
2.இப்படி ஒரு பத்துப் பேருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் அறிந்து உதவி செய்தால்
3.உதவி செய்தவருக்கே அந்த நோய் வருகிறது.

உதவி செய்தவருக்கு நோய் வந்த நிலையில் கடைசியில் என்ன சொல்வார்.
1.நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்
2.என்னை ஆண்டவன் சோதிக்கின்றார்..! என்பார்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. நாம் எண்ணியதை எல்லாம் உடலாக்குகின்றது. அதைத்தான் நம் உயிர் ஆண்டவனாக இருந்து ஆள்கின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

1.ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான்…! என்ற நிலையில் சாங்கியங்களைச் செய்து… அர்ச்சனை செய்து…
2.அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்…! என்றால் அது அல்ல அர்ச்சனை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.உயிரிலே படுகின்றது… அபிஷேகம் நடக்கின்றது.
2.அந்த உணர்ச்சியின் ஒலி அலைகள் உடலிலே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி எடுத்த உணர்வுகள் அந்த உணர்ச்சியின் அலைகளாக நமக்குள் சேர்கின்றது.
4.இது தான் உண்மையான அர்ச்சனை.

மனிதனின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஞானிகள் கற்பித்த இந்த உணர்வுகளை நாம் எப்படிப் பழகுதல் வேண்டும்…?

நம் பூமியின் வடதுருவப் பகுதியில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலன் கவர்கின்றது. அலைகளாக மாற்றி வருவதை நம் பூமி துருவத்தின் வழி கவர்கின்றது. நமக்கு முன்னாடி இங்கே வருகின்றது.

அவ்வாறு வரும் அந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்து நம் உடலிலே சேர்க்க வேண்டும். ஆகவே அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்.. எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்தி அதை பல முறை தியானிக்க வேண்டும்.

அப்பொழுது அந்த அகஸ்தியன் எதைக் கண்டானோ அதை எல்லாம் நாம் நுகர்கின்றோம். இப்படி அந்த அருள் சக்திகளை அதிகாலையில் பெற்றுப் பழகிக் கொண்டால்
1.அதற்குப் பின் எப்பொழுது வேண்டும் என்றாலும்
2.அதை எடுத்து நல்லதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

Leave a Reply