மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்ததன் முக்கிய நோக்கம் என்ன…?

Guru Tapovanam

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்ததன் முக்கிய நோக்கம் என்ன…?

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக வணங்கச் சொன்னார். அந்தக் கடவுளால் அவன் அமைத்துக் கொண்ட கோட்டை தான் உடல் என்று அந்த உடல்களை “ஈசன் வீற்றிருக்கும் கோவில்…” என்று மதிக்கச் சொன்னார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த உடலான ஆலயத்திற்குள் அரும் பெரும் சக்தியாக உலகைப் படைத்திடும் சக்தியாக அதாவது தெய்வங்களாக ஒவ்வொரு உணர்வுகளும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னார்.

அங்கே நீ வரம் பெறும் நிலையாக
1.ஒவ்வொரு மனிதனுக்குள் அறியாது விளைந்த தீயதுகளை மறந்து விட்டு
2.அந்த உடலை வளர்த்த உயர்ந்த உணர்வின் எண்ணங்களை நீ எண்ணி
3.அது உயர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீ எண்ணுவேயென்றால்
4.அந்த உயர்ந்த நிலையின் சக்தியை நீ பெறுகின்றாய் என்று குருநாதர் தெளிவாக எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு கோயிலும் (உடல்கள்) பரிசுத்தமாக வேண்டும். அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் ஈசன் நல்ல உணர்வுகளை அங்கே படைக்கச் செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் தியானித்து வருகின்றேன்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும்
1.அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!”

அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று
1.நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும்
2.மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும்
3.அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து விட்டு
3.அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
4.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

சில சந்தர்ப்பங்களில் உங்கள் வீட்டிலிருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும் இங்கே வந்து அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டால் அதன் பின் உங்கள் வீட்டிலிருந்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கம் வந்து விடும்.

அந்தப் பழக்கம் வந்து விட்டால் “நம்மை நாமே காத்திடும் சக்தியாக…” அது வரும். அதனின் வளர்ச்சியில் எத்தகைய நஞ்சு கொண்ட உணர்வுகள் இங்கே பூமியிலே படர்ந்தாலும் அது நம்மைத் தாக்காத வண்ணம் நம்மைக் காத்து கொள்ளும் ஆற்றலை நிச்சயம் எல்லோரும் பெற முடியும்.

ஆகையால் சாமியார் காப்பாற்றுவார் ஜோதிடம் காப்பாற்றும் ஜாதகம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் என்ற நிலையை விடுத்து உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு மெய் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பேரொளியாக மாற்றச் செய்யவே இந்தத் தியான மண்டபம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை நாம் பெற்று அவரின் துணையால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.இந்த மனித உடலிலே வந்த தீயதை நீக்கி
2,மெய் ஒளியின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலையை அடையும் ஆற்றலை இந்தச் சரீரத்தில் வளர்த்து
4.என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நாம் நமக்குள் வளர்ப்போம். நலம் பெறுவோம்… வளம் பெறுவோம்…!

“ஜோதி நிலை…” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

blue flame soul

“ஜோதி நிலை…” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உன் நிலைக்குப் பகர்கின்றேன். எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளாய்.

இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் ஜோதி நிலை என்னப்பா…? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா…?

ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா…? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா…? (தியானத்தில் காட்சியாகத் தெரிவது ஜோதி நிலை அல்ல)

குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் “ஜோதி நிலை…!”

ஜோதி நிலையின் பொருள் உனக்கு பகர்வதற்குப் புதிதல்ல. உன் நிலையிலேயே அஜ்ஜோதி நிலையை ஒளிரச் செய்யலாம். சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை உன் நிலையில் பெற்றிடலாம்.

அதற்காக உன் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.

மன நிலையில் உள்ள சோர்வை உன் நினைவில் மறக்கச் செய்து உன் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)

1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் நீ எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது நீ ஈர்ப்பதே உன் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்…!

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.

இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.

மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்…!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.

அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.