அருணகிரிநாதர் திருஞான சம்பந்தரின் உணர்வைத் தன் சகோதரி மூலமாகப் பெற்றுத்தான் ஞானியாக ஆனார்

Arunagirinadhar gnani

அருணகிரிநாதர் திருஞான சம்பந்தரின் உணர்வைத் தன் சகோதரி மூலமாகப் பெற்றுத்தான் ஞானியாக ஆனார்

 

திருஞானசம்பந்தரின் உணர்வினை அருணகிரிநாதரின் சகோதரி அது எடுத்துப் பெற்றுக் கொள்கின்றது.

தன்னுடைய சகோதரன் தவறான பாதைகளிலே போனாலும் அவனுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…
1.அவன் நல்ல பாதையில் நடக்க வேண்டும்
2.நல் வழியில் வாழ வேண்டும்
3.நல்ல உணர்வு பெற வேண்டும்.
4.பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்திக்கும் திறன் பெற வேண்டும் என்று அவன் சகோதரி செயல்படுகிறது.

ஒவ்வொரு சமயமும் அந்தத் திருஞானசம்பந்தருடைய உணர்வுகளை எடுத்து எடுத்து அந்தப் பாட நிலைகளை அருணகிரிக்குள் இணைக்கிறது.

திருஞானசம்பந்தரின் நல் ஒழுக்கங்களையும் அவர் விஷத்தை மாற்றிய நிலைகளையும் அவர் பார்வையில் தீமைகள் போனதையும் அவர் செயலாக்கங்களையும் அருண்கிரியின் சகோதரி எண்ணுகின்றது.

திருஞானசம்பந்தரை எண்ணித் தன்னுடைய சகோதரனின் உணர்வுகள் இப்படி வர வேண்டும் என்று எண்ணுகின்றது. சகோதரன் மேல் உள்ள பாசத்தால் அது எடுக்கும் போது அவன் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று அவனைப் பற்றியும் மற்ற ஞானிகளைப் பற்றிப் படித்த உணர்வுகளையும் தனக்குள் அதிகமாக நுகர்கின்றது. அந்த ஞானிகளின் உணர்வுகள் அணுக்களாக அருணகிரியின் சகோதரி உடலில் விளைகிறது.

தன்னுடைய சகோதரன் திருந்த வேண்டும் என்று முயற்சி செய்கிறது. இருந்தாலும்
1.அவன் இவர் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.
2.ஆனாலும் சகோதரியோ “அவன் திருந்த வேண்டும்…!” என்றே எண்ணுகின்றது.
3.இதை நீங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சகோதரி சொல்வதைக் கேட்காமல் என்ன செய்கிறான்…?

தாசியுடைய வீட்டிற்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் அப்படி மகிழ்ந்து வாழ்ந்த உணர்வுகளையும் பெருமையின் உணர்வுகளையும் தான் அவன் எடுத்துக் கொள்கின்றான். சகோதரி அவனுக்கு நல்லதைச் சொல்லும் போதெல்லாம் கசந்த உணர்வே அவனுக்கு வருகிறது.

நம் வீட்டில் தாயோ தந்தையோ அப்படி இருக்க வேண்டும்… இந்த மாதிரி இருக்கிறது… அவர்களைப் பார் இவர்களைப் பார் என்று புத்திமதி சொன்னால் பிள்ளை என்ன செய்வான்…?

பிள்ளை அவனின் இச்சையை வைத்துக் கொண்டு தாய் ஏனோ ஒரு பைத்தியமாக இருக்கிறது என்பான். தாய் சொல்லும் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. குடும்பத்தில் பெரியோர்கள் சொல்லும் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. மாறான உணர்வுகள் தான் குழந்தைகளுக்குள் வளருகிறது.

அதைப் போல் தான் அருணகிரியும் என்ன செய்கிறான்…? கடைசி வரையிலும் அவன் ஆசை தீரவில்லை. சகோதரி சொல்வதைக் கேட்காமல் தன்னுடைய இச்சையின் வழியிலேயே செல்கிறான்.

இருக்கிற செல்வம் எல்லாம் கரைந்தது. அடுத்து ஒன்றும் இல்லை… என்ற நிலை வரும் பொழுது “எப்படியாவது நீ எனக்குப் பணம் கொடுத்தே ஆக வேண்டும்…” என்று தன்னுடைய சகோதரியைக் கட்டாயப்படுத்துகின்றான்.

அப்பொழுது தான் அந்தச் சகோதரி சொல்கிறது. உனக்கு திருஞானசம்பந்தரின் உணர்வுகளை எல்லாம் சொன்னேன். மற்ற ஞானிகளின் நல்ல வழியையும் காட்டினேன்.

எத்தனை சுகத்தை நீ அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ உன் ஆசைக்கு என் உடலையே நீ பெற்றுக் கொள்…! என்று சகோதரி சொல்கிறது.
1.அவனுக்கு எவ்வளவு சொல்லியும்…
2.அவனால் அடக்க முடியவில்லையே…! என்ற உணர்வின் தன்மை மேல் மூச்சாகி
3.சகோதரி உடலை விட்டுப் பிரிகிறது.

அப்போது சகோதரி உடலை விட்டுப் பிரிந்தவுடனே அவனுக்குள் உண்மையை உணரும் பருவம் எப்படி வருகிறது…?

அருணகிரி தனக்குள் தான் செய்த தவறின் உணர்வுகள் இயக்கி உண்மையை உணர்த்தும் நிலையில் ஜீவன் பெறுகிறது. ஜீவன் பெற்றாலும் அவனுக்கு ஆதரவில்லை,

1.இது வரை தனக்கு ஆதரவாக இருந்தது.
2.ஆனால் இப்பொழுது அந்த ஒரு ஜீவனும் போய்விட்டதே என்று சகோதரியை எண்ணி ஏங்கும் பொழுது
3.அந்தச் சகோதரியின் ஆன்மா அவன் உடலுக்குள் போகிறது.
(ஏனென்றால் அந்த உணர்வின் இயக்க நிலைகள்)

இனி இந்த உடல் எதற்கு…? தவறான வாழ்க்கை வாழ்ந்து விட்டோம். “இனி அடுத்த ஜென்மமாவது நமக்கு நல்லவைகளாக இருக்கட்டும்…!” என்ற ஒரே உணர்வுடன் தன் உடலை மாய்க்க வேண்டும் என்று விரும்புகின்றான்.

“அவன் சாக வேண்டும்…!” என்று நினைக்கின்றான். இருந்தாலும் சகோதரியினுடைய உணர்வுகள் அங்கே சேர்க்கப்படும் போது அந்த உணர்வுகள் அவனைச் சாக விடாது தடுக்கின்றது.

அப்படித் தடுக்கப்படும் போது இவனை அறியாமலேயே நல்ல உணர்வுகளை உள் நின்றே சகோதரி கவர்கின்றது. கவர்ந்து கொண்ட பின்
1.அந்தத் திருஞானசம்பந்தர் தாய் கருவில் பெற்ற சக்தியால் எதைக் கண்டுணர்ந்தாரோ
2.அந்தக் கருவின் மூலத்தையே அருணகிரிநாதர் தனக்குள் அறியும் தன்மை வருகின்றது.

திருஞானாம்பந்தரின் தாய் விஷத்தை முறிக்கும் தன்மையை அது எண்ணிய உணர்வுகள் இவனுக்குள் வருகிறது. அத்தகைய உணர்வுகள் வளர்ந்த பின்
“நாத விந்துகள் ஆதி நமோ நமோ
வேத மந்திர சொரூபாய நமோ நமோ வெகு கோடி…!” என்ற பாடலையே பாடுகின்றான்,

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் தன்மை எதுவோ அது நம் உடலுக்குள் சேரும்
2.எந்த உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதற்குத் தக்கவாறு தான் நம் இயக்கம் என்று அழகாகப் பாடியிருக்கிறார்.

நாம் அவர் பாடிய அந்தப் பாடலைப் “பஜனையாகத்தான்” பாடிக் கொண்டிருக்கின்றோமே தவிர அந்தப் பாடலுக்குள் உண்டான மூலத்தை நாம் அறியவில்லை.

அருணகிரிநாதர் மிகவும் தவறானவர். இருந்தாலும் கடைசியில் ஒன்றி வாழ்ந்த அந்தச் சகோதரியின் உணர்வுகள் அவர் உடலுக்குள் போய் அந்தச் சகோதரி எதை எண்ணினாளோ அதை நிலைநாட்டுகின்றது.
1.அந்தத் தாய் எந்த மெய் ஞானி உணர்வை எண்ணி ஏங்கியதோ
2.அதை அங்கே வழி நடத்தி அருணகிரியை ஞானியாக மாற்றுகின்றது.

அருணகிரிநாதர் பெற்ற உணர்வின் மாற்றங்களும்… அருள் உணர்வுகளும்… நம் குணங்களில் எதை எதை எல்லாம் நாம் எப்படி மாற்ற வேண்டும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதறாகத்தான் இதைச் சொல்கிறோம்.

Leave a Reply