ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசங்களைக் கேட்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்…?

Gnana upadesh

ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசங்களைக் கேட்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்…?

 

கேள்வி:-
தியானம் செய்ய முடியாத நாட்களில் ஞானகுருவின் உபதேசங்களை அதிகமாக கேட்கலாமா…?

பதில்:-
உபதேசத்தை நமக்குள் மிகவும் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஞானகுருவின் ஒலி உபதேசங்கள் அவசியம் இருக்க வேண்டும்.

1.அடிக்கடி அதைக் கேட்டுப் கேட்டுப் பதிவாக்கி அந்த உணர்வினைச் சுவாசித்தால்
2.அதுவே சரியான தியானமாகின்றது.
3.மீண்டும் மீண்டும் ஞானகுருவின் உபதேசங்களைக் கேட்கும் பொழுது
4.தியானத்தின் பலன் எதுவோ அதை விடப் பத்து மடங்கு இருபது மடங்கு அந்த தியானத்தின் பலன் கிட்டுகின்றது.
5.புரியாத தெரியாத எத்தனையோ பல விஷயங்களுக்கு விடை கிடைக்கின்றது.
6.நம்முடைய வாழ்க்கைப் பாதை தங்கு தடையில்லாது செல்ல ஏதுவாகிறது.

அதே போல் உபதேசத்தைக் கூர்மையாகக் கேட்பதன் மூலம் நம் நினைவுகள் ஞானிகளின் பால் செல்கிறது. விண்ணிலே இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு கொள்ள முடிகிறது.

எந்தெந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஞானகுரு உபதேசம் கொடுக்கின்றாரோ அந்தந்த மகரிஷிகளின் பேராற்றல்களை நம்மை அறியாமலே நமக்குள் பெறக்கூடிய தகுதியும் கிடைக்கின்றது.

உபதேசத்தைக் கேட்கக் கேட்க அதற்குள் இருந்து புதுப் புது மெய் உணர்வுகளாக நாம் அறியக் கூடிய தன்மைக்கும் மெய் ஞானத்தின் உண்மைகளை அறியும் சீரிய சிந்தனை சக்திகளும் அதீதமாகப் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சாமிகளுக்கு அடியும் உதையும் கொடுத்து
1.அதன் பின் குருநாதரை சாமிகள் அதிகமாக எண்ணும் பொழுது
2.அவருக்குள் விளைந்த மெய் உணர்வுகளை உபதேச வாயிலாக வெளிப்படுத்தும் பொழுது
3.அதைக் கண் வழியாகக் கவர்ந்து சாமிகள் தனக்குள் அந்தச் சக்தியைப் பரிபூரணமாகப் பெற்றார்கள்,

ஆகவே நாமும் அவர் வழியில் உபதேசங்களை நேரடியாகக் கேட்பதுபோல் கேட்டு அவ்வாறு எண்ணிப் பதிவாக்கினால் குருநாதரைப் போன்றே மெய் ஞானியாக ஆக முடியும்.

1.தியானம் சிறிது நேரம் செய்தாலும்
2.ஒலி உபதேசங்களை அதிகமாகக் கேட்கும் பழக்கம் வந்துவிட்டால்
3.நமக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அதீதமாக வளர்வதை நிச்சயம் உணரலாம்.

அது மட்டுமல்லாமல் வாழ்க்கையில் வரும் எத்தகைய சிக்கல்களிலிருந்தும் விடுபட முடியும். உடலிலும் எந்த உபாதைகளும் வராது தடுக்க முடியும். தொழிலும் மற்ற எல்லாமே சீராக அமையும்.

என்னுடைய அனுபவம் இது தான்…!

மனிதனுக்குள் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்… பார்க்கலாம்… உணரலாம்…!

solar system - sages'

மனிதனுக்குள் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்… பார்க்கலாம்… உணரலாம்…!

 

அண்டத்தில் உள்ளது இந்தப் பிண்டத்தில் (மனித உடலில்) உள்ளது என்று சொல்கிறோம். அண்டத்தில் இருக்கிற சக்திகள் நம் உடலில் எவ்வாறு இயங்கி கொண்டு இருக்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்டம் என்பது அகண்ட அண்டம். அதிலே பிரபஞ்சம் என்பது ஒரு சூரியக் குடும்பம். 27 நட்சத்திரங்களும் நவக் கோள்களும் அதனுடைய உபகோள்களும் சேர்ந்து ஒரு சூரியக் குடும்பமாகின்றது.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலையை விரித்துத் தனக்குத் தேவையான உணவை எப்படி எடுக்கிறதோ அது போல் சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் வலை வலையாகப் பால்வெளி மண்டலங்களைத் தனக்கென்று அமைத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்களின் சுழழும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள் நூலாம்படை போல் அது விரிவடைகிறது. விரிவடையும் போது இந்த மொத்தச் சூரிய பிரபஞ்சமும் சுற்றும் நிலையில் அதிலே மற்ற அகண்ட அண்டத்திலே வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைத்துப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகிறது.

1.கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கிறது. அடுத்து ரேவதி நட்சத்திரம் இருக்கிறது.
2.27 நட்சத்திரங்களும் இப்படி வரிசையில் பல மைல் தூரம் வித்தியாசத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும்.
3.வித்தியாசத்தில் இருக்கிறது என்றால் சூரியனுடைய சுழற்சி வேகத்தில் வரும் போது அது பின் தங்கி வரும்.
4.இரண்டாவது நட்சத்திரம் அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.
5.மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வருகிறது.
6.சூரியனை ஒட்டி இருக்கும் கோள்களும் இதைப் போன்று தான். ஒன்றன் பின் ஒன்றாகத் தன்னுடைய சுழற்சியில் பின் தங்கி வரும்.

பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்கள் விரித்த வலையில் ஒட்டி கொள்கிறது. நட்சத்திரம் சுழற்சி ஆகும் போது (RICE MILL போல்) பால்வெளி மண்டலமாகிறது… தூசிகளாக மாறுகின்றது.

அதற்கு அடுத்தது இன்னொரு நட்சத்திரம் எதிர்த்து இருக்கும். இது இடைமறித்து வரும் போது இதற்கும் அதற்கும் மோதலாகி இரண்டு கலவைகள். இப்படி 27 நட்சத்திரக் கலவைகள் மாறி மாறித் தூசிகளாக வருவது தான் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது.

நட்சத்திரங்களின் மோதலில் வெளி வரும் இந்தத் தூசிகளை இடைமறித்து முதலில் வரக்கூடியதை கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை மட்டும் எடுத்து கொள்கின்றது. வரக்கூடிய கரும் புகைகளை ராகுக் கோள் எடுத்துக் கொள்கிறது.

ஆவியாக வெளிப்படுவதைச் சனிக் கோள் எடுத்து நீராக மாற்றுகிறது. 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கங்களை வியாழன் கோள் எடுத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்கள் மோதும் பொழுது வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது. மோதலில் உண்டாகும் நாதங்களை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கிறது.

இதையெல்லாம் கலவையாகிச் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கோளுக்குள் செல்லும் பொழுது அதனின் அதீத வெப்பத்தால் உலோகங்களாக மாற்றிக் கொள்கிறது.

அந்தந்தக் கோள்கள் உணவாக எடுத்து அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பல கலவையாகின்றது. ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத் தன்மையின் உணர்வுகள் கலவையாகின்றது.

இந்தக் கலவையின் தன்மைகள் வரப்படப்போகும் போது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் போது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட்டு அதெல்லாம் சூரியனுக்கு வரும் போது அந்த விஷத்தை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறது. விஷத்தைப் பிரித்து ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.

1.முதலில் அமிலமாக இருந்தது தான் நட்சத்திரங்கள்.
2.அதிலிருந்து வரப்படும் போது இதனுடைய உணர்வுகள் மாற்றமாகி மாற்றமாகி
3.சூரியன் அதைப் பாதரசமாக மாற்றும் நிலை வரும்.
4.அப்பொழுது அது முழுமையான விந்தாக இந்த உலகையே உருவாக்குவதற்கான மூலமாக ஆகின்றது.

பாதரசம் மிகவும் எடை கூடியது. எடை கூடிய நிலைகளாக வரப்போகும் போது மற்றதைத் தள்ளுகின்றது. அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகள் நட்சத்திரங்கள் கோள்களில் கலவையான பின் அதைச் சூரியன் இழுத்துக் கவரும் பொழுது மோதலாகின்றது.

சூரியனுக்கு வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த மோதலினால் தான் வெப்பமாகின்றது. ஆனால் சூரியன் மிகவும் குளிர்ச்சியானது. சூரியனுக்குப் பல ஆயிரம் மைலுக்கு அந்த பக்கம் தான் இந்த மோதல் நடக்கிறது.

வெப்பமாகும் பொழுது கெட்டதைப் பூராம் தூக்கி எறிந்து விடுகிறது. நல்லதைப் பாதரசமாக மாற்றிக் கொள்கிறது. இது மெய் ஞானப்பாடம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டினார். அந்தப் பாதரசத்தினுடைய நிலைகளை எடுத்துக் காட்டி
1.அது மற்ற பொருளுடன் சேர்க்கும் போது திடப்பொருளாக எப்படி ஆகிறது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்தவுடனே ஆவியாகப் பிரிந்து எப்படிப் போகிறது?
3.ஆவியாகப் போன பிற்பாடு பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்றும்
4.அதன் துணை கொண்டு உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கவும்
5.மற்றொன்றை எடுத்துச் செல்லவும் மற்றொன்றோடு இணைத்து வாழச் செய்யும் நிலையாகவும்
6.சூரியன் எப்படிச் செயல்படுகிறது…? என்று காட்டினார்..

அப்படிப் பாதரசமாக மாறவில்லை என்றால் உலகம் இல்லை. ஆகையினால் தான் இதை “நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…! என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

ஆதியிலே நாத விந்துகள் என்ற உணர்வின் தன்மை வரப்படும் போது தான் இது எல்லாமே உருவானது.
1.அந்த உணர்வின் இசையின் ஒலிகள் எப்படி உருவானது…?
2.ஒவ்வொன்றும் அந்த உணர்வின் ஒலியாக
3.நமக்குள் சுருதியின் இயக்கமாக
4.அந்த உணர்வின் ஒலியாக
5.அந்த உடலின் ரூபமாக மாறுகின்றது..! என்று இதற்குள் இவ்வளவு கருத்து இருக்கிறது.

27 நட்சத்திரங்களின் கலவைகள் உணர்வின் இயக்கங்களாகவும் நவக் கோள்களின் கலவைகள் உடல் உறுப்புகளாகவும் நமக்குள் அமைந்துள்ளது. உயிர் சூரியனாக இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கின்றது.

தியானத்தில் அமரும் பொழுது இதை எல்லாம் இணைத்துப் பார்த்தீர்கள் என்றால் அண்டத்தையே நீங்கள் பார்க்கலாம். ஆர்வத்துடன் கேட்டு இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் உங்களை அங்கேயே அழைத்துக் கொண்டு போகும். நிச்சயம் உணரலாம்…!