“படித்து” ஞானம் பெறவில்லை – குரு சொன்னதைப் “பதித்து” ஞானம் பெற்றவன்…!

Graduation and divine

“படித்து” ஞானம் பெறவில்லை – குரு சொன்னதைப் “பதித்து” ஞானம் பெற்றவன்…!

 

நான் (ஞானகுரு) படித்து வந்தவன் அல்ல.
1.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
2.பதிந்த நிலைகளை எடுத்து வளர்த்துக் கொண்டவன்
3.எடுத்துக் கொண்ட அந்த உண்மைகளை அறிந்து உணர்த்துபவன்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக அதைத்தான் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அந்த உண்மைகளை நீங்களும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அவைகளை நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி என்ற உணர்வைப் பெற முடியும்.

உங்கள் பார்வையால் பிறருடைய தீமைகளையும் பிணிகளையும் போக்க வேண்டுமே தவிர
1.ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிலையைப் பார்த்து
2.என்னை இன்னுமா நீ சோதிக்கின்றாய்…! என்று சொல்வது போல்
3.உங்களைச் சோதனைக்கு ஆளாக்குவதற்கல்ல.

அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்திமானாக நீங்கள் மாற வேண்டும். இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும். (அல்லது அடக்க வேண்டும்.)

உங்கள் உடலுக்குள் மட்டும் தீமைகளை அகற்றுவதல்ல… இந்தக் காற்று மண்டலத்திலுள்ள நச்சுத் தன்மைகளையும் அகற்ற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் “தீமைகளை நீக்கும் வல்லவர்களாக…” ஆகிவிட்டால் இந்தப் பூமியில் பரவிக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை உங்கள் மூச்சலைகள் நிச்சயம் அடக்கும். நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

காற்று மண்டலத்தில் மாசுபடும் உணர்வுகளை மாற்றிவிட்டால் மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற அந்த உணர்வுகளுக்கு
3.அங்கே சென்று ஒளியின் உணர்வுகளாக அங்கே மீண்டும் அது பெருகும்.

இவைகளை எல்லாம் உங்கள் மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் இந்த உடலில் வாழ்வது என்பது சிறிது காலமே…!
1.அதற்குள் நாம் எடுப்பது….
2.எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்தியை
3.உங்களுக்குள் சேர்ப்பிக்கின்றோம்.

இந்தக் குறுகிய காலத்தில் நாம் பேரின்பப் பெரு நிலையைப் பெற்று என்றுமே ஏகாந்த நிலை அடையும் அந்தப் பருவத்தைப் பெறவேண்டும் என்று தான் உங்களுக்கு இதைச் சொல்வது.

“மனிதர்களைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…? அல்லது “மகரிஷிகளைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…?

divine-chracter-of-sages

“மனிதர்களைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…? அல்லது “மகரிஷிகளைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…?

 

இன்றைய சகஜ வாழ்க்கையில் ஒருவரை நாம் எப்படிப் பார்க்கிறோம்…? எப்படி நினைக்கின்றோம்…? எப்படி அறிகிறோம்…? எப்படி விசாரிக்கின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

1.யார் இவர்…? ஆணா பெண்ணா…? என்ன வயது…?
2.படித்தவரா படிக்காதவரா…? திருமணமானவரா ஆகாதவரா…?
3.எந்த ஊர்…? நல்லவரா கெட்டவரா…?
4.வசதியானவரா.., வசதி இல்லாதவரா…?
4.பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார்… அல்லது பார்க்கவே பிடிக்கவில்லை…! என்று இத்தனையும் பார்ப்போம்.

அதற்கப்புறம் அவருடன் பேசிப் பழகும் பொழுது நம்முடன் ஒத்துப் போனால் நல்லவன் என்போம். இவனை நம்பலாம்… அன்பானவன்… பண்பானவன்… இரக்கமானவன்…! என்று நினைப்போம்.

நம்மிடம் எதிர்த்துப் பேசினால் உடனே அவனை ஆகாதவன் என்போம். மோசமான ஆள்… ஏமாற்றுபவன்… கோபக்காரன்… கிறுக்கன் மாதிரி இருக்கிறான்…! என்றெல்லாம் நினைப்போம்.

நம் மனதிற்குள் இத்தனையும் ஓடும். உதாரணத்திற்கு இதையெல்லாம் சொல்கிறேன்.

இதில் என்னென்ன விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றோமோ அதற்குத்தக்க நம்முடைய அத்தனை செயல்களும் மாறும், சொல்களும் மாறும். அவருடன் பழகுவதும் மாறும். மாறிக் கொண்டேயிருக்கும்

இப்படி நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நாம் மீண்டும் மீண்டும் பதிவு செய்தால் கடைசியில் அதனால் நமக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
1.அவர்களைப் பற்றிய உணர்ச்சிகள் தான் நமக்குள் வருமே தவிர
2.நம் உணர்வை அங்கே செலுத்தவே முடியாது.
3.அதாவது அவர்களிடமிருந்து நாம் வாங்கத்தான் செய்வோம்.

இதையே மகரிஷிள் உணர்வின் பதிவு கொண்டு ஒருவரைப் பார்க்கிறோம் என்றால் அல்லது நம் பார்வையில் வந்து ஒரு மனிதன் மோதினால்
1.இந்த உயிர் கடவுள்…!
2.ஈசன் வீற்றிருக்கு இந்த உடல் ஒரு ஆலயம்
3.மனிதனை உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே தெய்வங்களாக இருக்கிறது…
4.அந்தத் தெய்வ குணங்களுக்கு நல்ல உணர்வை நாம் அபிஷேகம் செய்வோம்…!
5.அந்த உயிருக்கு அபிஷேகம் செய்ய நாம் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்
6.அருள் மகரிஷிகளின் அருளாற்றலை அங்கே பாய்ச்சுவோம்
7.அவரை நம் பார்வையால் மெய் ஞானியாக ஆக்குவோம் என்று
8.இப்படிப்பட்ட நல் உணர்வுகளை நாம் பெற்று அவருக்குப் பாய்ச்சுவோம்.

இது விண்ணிலிருந்து எடுத்து அந்த உணர்வலைகளை உயிர் வழியாக அவருக்குப் பாய்ச்சும் முறை. அவர்களிடமிருந்து நாம் எதையும் கவரவில்லை அல்லது பெறவில்லை.

நாம் தான் அவருக்குக் கொடுக்கிறோம். கொடுக்கும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம். வாங்கும் நிலையில்லை. இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளிடமிருந்து
2.அவர்கள் பெற்ற சக்தியை நாம் ஏங்கிப் பெறுவதாக இருக்க வேண்டும்
3..அவ்வாறும் பெற்றதை மனிதர்களிடம் கொடுக்கும்படியாக இருக்க வேண்டும்.

மாறாக மனிதர்களைப் பற்றுடன் பற்றி அவர்கள் உணர்வுகளை நாம் வாங்கினால் மகரிஷிகளிடமிருந்து வாங்கும்படி வராது. போதும்… வேண்டாம்…! என்ற நிலை ஆகிவிடும்.

அதனால் தான் இராமலிங்க அடிகள்
1.நான் யாரிடமும் (மனிதர்களிடம்) யாசகம் கேட்க மாட்டேன்…! என்று சொன்னார்.
2.அதே சமயத்தில் நான் யாருக்கும் (எந்த மனிதனுக்கும்) இல்லை என்று சொல்லக் கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

அதனால் தான் மனிதர்களைப் பற்றிய பதிவுகள் வேண்டாம். மகரிஷிகளைப் பற்றிய பதிவு வேண்டும் என்று சொல்வது.
1.மனிதனாக இருக்க வேண்டும் என்றால்
2.இந்தப் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால்
3.மனிதர்கள் பற்றிய பதிவுகளை எடுத்து வளர்த்துக் கொள்ளலாம்.

இல்லை…! இந்தப் பூமியில் நான் மறுபடி உடல் பெறக் கூடாது. விண்ணுக்குப் போக வேண்டும் என்றால் மகரிஷிகளின் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

இது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

தியானத்தில் விஷ்ணு தனுசைப் பயன்படுத்தும் முறை

vishnu dhanush

தியானத்தில் விஷ்ணு தனுசைப் பயன்படுத்தும் முறை

 

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் சந்தித்த தீமைகளை எல்லாம் நீக்கி நீக்கி அவ்வாறு வளர்ந்து வந்து தான் தீமைகளை நீக்கும் இந்த மனித உடலைப் பெற்றோம் – “பரசுராமன்…!”

சமப்படுத்தும் உணர்வுகள் இந்த உடலில் சேரும் பொழுது இதற்குப் பெயர் சிவ தனுசு. இந்த உணர்வுகளால் நல்லது செய்யக் கூடிய நிலை வரும்.

நாம் சாப்பிடும் உணவில் மறைந்துள்ள நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகிறது. நல்ல குணங்களை உடலாக மாற்றுகிறது.

இருந்தாலும் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை கண் வழி நாம் கவர நேர்கிறது.

கவர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றச் செய்கிறது. உணர்வின் தன்மை உடலாகச் சேருகிறது. அது உடலுக்குள் சென்றவுடன் அவன் உடலுக்குள் செய்த தீங்கின் உணர்வுகள் நமக்குள் சிவ தனுசாக மாறுகின்றது.

1.அவன் தீமை செய்கின்றான் என்ற அந்த உணர்வின் தன்மை நம்மைத் தாக்கி
2.நம்முடைய சமப்படுத்தும் உணர்வை மாற்றுகிறது.
3.இராமாயணத்தை நன்றாக படித்துப் பாருங்கள் தெளிவாகத் தெரியும்.
4.அப்பொழுது பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் சண்டை வருகிறது.

பரசுராமன் சிவ தனுசை எடுக்கின்றான். சீதாராமன் விஷ்ணு தனுசை எடுக்கிறான். விஷ்ணு தனுசு என்றால் என்ன…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி அவன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சீதா. அந்த உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டும் துருவ நட்சத்திரமாக ஆனது.
1.தீமைகளை வெல்லும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்த உணர்வை நமக்குள் எடுக்கும்போது அது விஷ்ணு. தனுசாகின்றது.

சூரியன் ஒளியாக இருப்பவன். அவன் நிலை விஷ்ணு. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.
1அந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்து
2.விஷ்ணுவான அந்த ஒளி உணர்வை நாம் எண்ணும் போது
3.இந்த தனுசாக நாம் மாற்ற முடியும். இது விஷ்ணு தனுசு.

இராமாயணத்தை நன்றாக உள்ளே புகுந்து படித்துப் பாருங்கள். நன்றாகத் தெளிவாகத் தெரியும். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…?

ஒரு நோயாளியை நாம் பார்க்கிறோம். அவன் உடலில் விளைந்தது சிவ தனுசு. நோயாளியின் உணர்வை நுகர்ந்ததும் நமக்குள் என்ன செய்கிறது…?

நம் நல்ல மனமும் இதுவும் இரண்டும் போர் செய்ய ஆரம்பிக்கிறது. அவன் உணர்வை நமக்குள் வளர்த்து இது வெற்றி பெறும். எது…? நாம் சமப்படுத்த எண்ணுகிறோம். அந்த உணர்வின் தன்மை நல்ல குணத்தை எல்லாம் அது சமப்படுத்துகிறது.

சமப்படுத்திய பிறகு இதே விஷத்தின் தன்மை வருகிறது. அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. இந்த விஷத்தின் தன்மை மீண்டும் நுகர்ந்து அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வலிமையாகின்றது.

இந்த மாதிரி உணர்வை வளர்த்தவர்கள் எல்லாம் யாராவது வேதனைப்பட்டாலோ அல்லது சங்கடப்பட்டாலோ அவர்களைப் பார்த்தவுடன் தேடிப் போய் உபகாரம் செய்வார்கள்.

1.அந்த உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது.
2.அப்பொழுது அது சிவ தனுசாக மாறுகிறது.
3.காக்கும் உணர்வுகளை அது செயல்படுத்துகிறது.
4.ஆனாலும் அந்த உடலிலிருந்த வேதனைகளும் சங்கடங்களும் இந்த உடலில் அது வளர்ச்சி அடையப் போகிறது.
(இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்)

மற்றவர்களுக்கு உதவி செய்தவர்கள் நிலைகளை எல்லாம் கடைசியில் நீங்கள் பார்க்கலாம்.
1.நாம் எல்லோருக்கும் நான் தருமத்தைச் செய்தேன்… நல்லதைத் தான் செய்தேன்.
2.ஆனால் இப்போது நரக வேதனைப்படுகிறேன் என்று சொல்வார்கள்.
3.ஆண்டவன் என்னை இவ்வாறு செய்கிறான்… ஏனோ என்னைச் சோதிக்கின்றான்…! என்று சொல்வார்கள்.

நாம் எதை உற்றுப் பார்த்துக் கவர்ந்தோமோ அது உடலின் தன்மையாக விளைகிறது. ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசித்தது எல்லாம் உடலாக உருவாகிக் கொண்டேயுள்ளது.
1.இதை ஆள்வது யார்…? நம் உயிர் தான் அந்த ஆண்டவன்.
2.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கியது யார்…? நம் உயிரான ஈசன் தான்.

எதன் உணர்வை எடுத்தோமோ மீண்டும் எண்ணும் போது
1.அந்த உணர்வின் செயலாக
2.அந்த குணத்தின் செயலாக
3.அந்த உணர்வின் தன்மையாக நாம் செயல்படும் போது
4.எந்தக் குணத்தை நாம் எடுத்தோமோ அதுவே குருவாக இயக்கும்.
5.உயிர் என்ற உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது உயிரே குருவாகின்றது.

உடலுக்குள் இருக்கும் அனைத்தும் குருவாக இருந்தாலும் ஒவ்வொரு குணமும் ஒவ்வொன்றும் அதன் செயலாக்கங்களில் இருக்கும் போது
1.அந்தந்த உணர்வுகளின் குணமே குருவாகிறது… செயல் தெய்வமாகிறது.
2.உணர்வு இறையாகிறது… இறையின் செயலாகும் போது தெய்வமாகிறது.
3.உணர்வின் தன்மை உடலாகும் போது சிவமாகிறது.

சாஸ்திரங்களில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

ஆகவே எது நடந்தாலும் என்ன குறை இருந்தாலும் “ஈஸ்வரா…”என்று அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவருக்கு/ என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும். அவர்கள் இரத்தம் நாளங்களில் கலக்க வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று தினமும் காலையிலும் இரவு படுக்கச் செல்லும் போதும் இவ்வாறு எண்ணுங்கள்.

காலையில் எழுந்தவுடன் துருவ தியானம் முடிந்தவுடன் கணவன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்றும் மனைவி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் எண்ண வேண்டும். கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல இவ்வாறு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை. உண்மையான தியானம் இது தான். இருவருடைய உணர்வும் கலந்தால் அந்த அருள் உணர்வுகள் வலுப்பெறும். இணைந்து வாழும் உணர்வுகள் வலுவாக்கப்படும்போது அந்த வலுவின் தன்மை கொண்டு தீமை என்ற உணர்வுகள் வராது தடுக்கும்.

எது நடந்தாலும் இது போல எண்ணிக் கொள்ளுங்கள். அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தார். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை (விஷ்ணு தனுசை) எடுத்தேன். உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேன்.

நீங்களும் “தியானத்தின் மூலம்…” அதைப் பெறவேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன். விஷ்ணு தனுசை எடுத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை வெல்லுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை உருவாக்குங்கள்.