ஆத்மீக வழியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Spiritual angel

ஆத்மீக வழியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

ஆத்மீகம் என்பது என்ன..?

ஆத்மீக வழிக்குச் செல்வதற்குப் பல நாள் பல பூஜைகள் செய்து… பல பாடல்களைப் பாடி… ஆண்டவன் திருப்பாதத்தை நமஸ்கரித்து வேண்டி… எண்ணத்தையும் செயலையும் அவ்வாண்டவனுக்கே அர்ப்பணித்து… ஆண்டவனின் அருள் ஒன்று பெற்றால் இவ்வுலகமே பெற்ற பூரிப்பு எனக்குக் கிடைக்கும்…!

அவ்வாண்டவனுக்குத் திருப்பணி நடத்துவதுவே… திகட்டாத இன்பம் என்றெல்லாம் நாம் நம்மில் பலரும் நல்லெண்ணம் கொண்டு வழி தெரிந்தும்… தெரியாமலும்…! நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற வழிதனை அவன் பாதம் பணிந்து நின்றே… பல விரதம் பல பூஜை செய்தே… செல்கின்றோம் ஆத்மீக வழி காண…!

1.ஆத்மீக வழியில் உள்ள ஆண்டவன் யாரப்பா..?
2.இந்நிலையில் பூஜிப்பவன் எல்லாம் ஆத்மீக வழியை அடைந்தவனா…?
3.அவன் எண்ணும் ஆண்டவன் யாரப்பா…?

இவ்வழி முறைகளைக் கொண்ட “ஆத்மீக வழிக்கு நான் சென்றுள்ளேன்…!” என்பவனின் எண்ணத்தில்
1.சிறிதளவு புகழ்ச்சிக்கு மகிழும் தன்மையும்
2.இகழ்ச்சிக்கு வருந்தும் தன்மையும் உண்டென்றாலும்
3.அவன் செல்லும் ஆத்மீக வழிக்குப் பயனேதும் இல்லையப்பா…!

நான் ஆண்டவனை வேண்டுகின்றேன் ஆத்மீக வழிக்குச் செல்வதற்குத்தான்…! ஏன் அந்த முருகன் வந்து எனக்கு வழிகாட்டக் கூடாதா…? என் தவறுக்கு – தவறுக்கு முன் தடுக்கும் வழியை அம்முருகன் செய்யக் கூடாதா…? நான் நினைப்பதுவும் செயல்படுத்துவதுவும் அவனே அல்லவா…! என்றே
1.அவ்வாண்டவனைப் “பிற ரூபத்திலேயே…..!”
2.நாம் ஆத்மீக வழியைக் கண்டுணரப் பார்க்கின்றோமப்பா.

ஆத்மீக வழியென்றால் என்ன…? ஆண்டவன் என்பதன் நிலையென்ன…? என்றெல்லாம் பல நிலைகளில் விளக்கியுள்ளேன்.
1.நம்முள் உள்ள ஆண்டவனை…
2.நாம் எண்ணும் சக்தி கொண்டு…
3.நாம் எண்ணும் வழிக்குத்தான்…
4.எவ்வெண்ணத்தில்… எச்சுவாச நிலையைப் பெறுகின்றோமோ…
5.அந்நிலை கொண்டேதான் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும் வந்தடைகிறது. (இது முக்கியம்)

முன் ஜென்மத்தில் நாம் விட்ட சப்த அலைகளும் நாம் இஜ்ஜென்மத்தில் வாழும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்ட சுவாசத்தின் முன் ஜென்மத்தின் சப்த அலைகளும் இஜ்ஜென்மத்தின் சப்த அலைகளும் கலந்தேதான் நாம் சுவாசம் எடுக்கின்றோம்.

இக்காற்றினிலே பரிசுத்தமான காற்று… நிர்மலமான காற்று… என்ற நிலை இல்லையப்பா. இக்காற்றில் கலந்துள்ள சப்த அலைகளில் பலர் எடுத்த பலர் எடுத்த என்னும் பொழுது இப்பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டுள்ள
1.ஜீவனுடன் உள்ள எல்லா சப்த அலைகளும்
2.ஜீவனில்லா இயந்திரங்களின் சப்த அலைகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளன.

நாம் எடுக்கும் சுவாச நிலைகொண்டு நம்மைச் சுற்றியுள்ள நாம் பிறவி எடுத்த இப்பிறவி மட்டுமல்ல அணுவாக உதித்த காலம் முதற் கொண்டு நாம் விட்ட சப்த அலைகளும் அனைத்துமே நம்மைச் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

நம்மில் கலந்துள்ள இச்சப்த அலைகளில் இஜ்ஜென்மத்தில் நம் எண்ணமும் செயலும் நல்லவைகளாக இருந்திருந்தாலும் முன் ஜென்மத்தின் நன்மை தீமைகள் நம்மைச் சுற்றிக் கொண்டுள்ளதினால் அதனின் இயக்கமும் வரும்.

எண்ணத்திலிருந்து வருவதுதான் குணம். பல ஜென்மங்களின் தொடர்பு கொண்டுதான் நாம் இன்று வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் எப்படி நன்மை தீமை இருந்தன என்கின்றீர்…? என்பீர்கள்…! முன் ஜென்மத்தின் குறையினால் தான் ஜென்மத்தில் மீண்டும் உடல் பெற்று இங்கே வந்துள்ளோம்.

நாம் வாழும் வாழ்க்கையில்
1.நாம் ஆத்மீக வழிக்குச் சென்றிட
2.ஜெபம் செய்து ஆண்டவனின் திருப்பணி செய்து வாழ்வது மட்டும் வழியல்ல…! என்று உணர்தல் வேண்டும்.
3.ஆத்மீக வழிக்குச் செல்லும் வழிமுறையை நல் வழியாக அமைத்துச் சென்றிட வேண்டும்.

இக்காற்றினால் கலந்துள்ள நன்மை தீமை கொண்ட சப்த அலைகளில்… “நல்லதையே…!” நம் சப்த அலைகளில் ஈர்க்கும் சுவாச நிலைபெற்ற அந்த ஜெப நிலையை நாம் அடையும் பக்குவத் தன்மைக்கு வர வேண்டும்.

இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் மன நிலையை அடிபணிய விடாமல் நம் எண்ணமும் சுவாசமும் நம்முள் உள்ள அவ்வாண்டவனைக் கண்டுணர்ந்து
1.நம்மை ஆட்டுவிக்கும் அச்சக்தி நம்முள் உள்ள பொழுது அச்சக்தியை ஆண்டவனாக்கி
2.தீய வாழ்க்கையை விட்டகற்றி
3.கோபத்திற்கும் பகைக்கும் போற்றலுக்கும் நம்மை நாம் அடிபணிய வைத்திடாமல்
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஆத்ம சுத்தி)
5.அன்பு கொண்டு அறத்துடன் வாழ்பவன் ஒவ்வொருவனுமே
6.ஆத்மீக வழிக்குச் சென்ற ஆண்டவன் ஆகின்றான் என்றுணர்தல் வேண்டும்.

ஆகவே ஆத்மீக வழியின் வழியறிந்து அன்பென்னும் சத்தியத்திற்கு அன்பு காட்டி அன்புடனே அருள் கொண்டு வாழ்ந்திடுங்கள்.

இவ்வுலகினில் மட்டுமல்லாமல் இவ்வுலகுடன் தொடர்பு கொண்ட எல்லா உலகிலும் (அகண்ட அண்டத்திலும்) உள்ள நிலையை அறிந்து கொள்ள முடியும்.
1.அவரவர்கள் எந்த எண்ணத்தை எண்ணுகின்றார்களோ
2.அந்த நிலையிலிருந்து அமைவதுதான் அவரவர்களின் நிலையெல்லாம்.

நம் உடலுக்கு நாமெடுக்கும் ஆகாரம் கொண்டுதான் அவ்வுடல் நிலை உள்ளது. இவ்வுடல் என்னும் கூட்டைப் பாதுகாத்திடவே பரிபக்குவ நிலை பல செய்கின்றோம். அதைப் போல
1.இவ்வுடலுடன் கலந்துள்ள
2.இவ்வுடலையே நடத்திச் செல்லும் ஆண்டவன் என்னும் ஆத்மாவுக்கு
3.ஆத்மீக வழி என்ற அன்பு கொண்ட அன்னமிட்டே வளர்த்திடுங்கள்.

மனதை அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Bowing and praying

மனதை அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும். நாம் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நாம் உண்ணும் உணவு நல்ல மணமாகவும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது.

அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு “அமிழ்தமாக… அரும் பெரும் சுவை கூடியதாக… நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது…!”

ஆனால் நாம் நமக்குள் பல கலக்கங்கள் பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச் சங்கடத்துடன் உள்ள பொழுது நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று அதிலுள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகின்றது. நோய் வரக் காரணமாகின்றது.
1.ஒன்று போல் உணவை எல்லோரும் உண்டாலும்
2.அவரவர்கள் நம் மன நிலையைப் பொறுத்துத்தான் உடல் அவ்வாகாரத்தை எடுத்து நம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.

அதைப் போன்று தான் ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டுதான் இவ்வுயிர் இவ்வுடலை இயக்கி வாழ்கின்றோம்.

எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ
1.ஏனென்றால் எந்த ஒரு சமையலையும் செய்யும் பொழுது
2.அதன் பதம் அறிந்து செய்தால்தான் அது முழுமை அடைகிறது.

அதைப் போலத்தான் இவ்வுடல் என்னும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதம் அறிந்து
2.சந்தோஷ நிலை – கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு
3.இவ்வுடலையே பக்குவப்படுத்தி பதம் அறிந்து
4.நாம் நம் உயிராத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.

நம்மில் நம்மைச் சுற்றி இருக்கும் பல அணுக்களின் உந்தலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…!”

1.நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ
2.அதைக் கொண்டுதான் நன்மையும் தீமையும் அமைகின்றது என்பதனை உணர்ந்து
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.

இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து நமக்கு முன் உபதேசித்த பல மெய் ஞானிகளின் அருள் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் பக்குவ நிலையில்.

1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல
2.இவ்வுலகனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல.
3.அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே ஒரே சொந்தம் தான்.

நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்ததுதான் எல்லாமே. அந்த எல்லாவற்றிலும் கலந்துள்ளவர் தாம் நாமுமே.

“நான்…!” என்ற தனி நிலை இல்லாத நாம் இவ்வுருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம்.

நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.