மலைப்பாம்பிடமிருந்தும் புலியிடம் இருந்து நேரடியாகத் தப்பி வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

Venugopalaswamigal

மலைப்பாம்பிடமிருந்தும் புலியிடம் இருந்து நேரடியாகத் தப்பி வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

 

மங்களூர் பக்கத்தில் ஒரு மலை உள்ளது. அந்த மலைக்கு நானும் (ஞானகுரு) குமாரபாளையம் சென்னகிருஷ்ணன் டாக்டர் அவருடைய இரண்டு பசங்களும் மங்களூர் நாராயணசாமியும் அவர் கடையில் வேலை செய்யும் ஒருவரும் போனோம். அது பெரிய காடு.

ஆனால் போவதற்கு முன்னாடியே அங்கே புலி குட்டி போட்டிருக்கிறது… ஆகையினால் இப்போது போனால் உங்களைத் தாக்கும் என்று சொன்னார்கள்.

பரவாயில்லை… நாம் போகலாம்…! என்று நான் (ஞானகுரு) சொன்னேன். சரி என்று சொல்லி போனோம். குகை மாதிரி ஒரு இடம் அது திறந்தவெளியாக இருந்தது. எல்லோரும் அங்கே படுத்திருக்கின்றனர்.

திடீரெனெ மேலிருந்து மலைப் பாம்பு ஒன்று “சொத்…!” என்று விழுந்தது. நான் விழித்துக் கொண்டேன். மற்ற எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தக் குகையில் ஏற்கனவே ஒரு சாமியார் இருக்கிறார். ஆனால் அவரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்.

பாம்பைக் கண்டதும் அங்கிருந்த நாய் லொள்…! என்று குரைக்க ஆரம்பித்து விட்டது. இந்தப் பக்கம் வர விடாமலேயே தடுக்கிறது. ஏனென்றால் அந்தப் பாம்பு ஆளையே விழுங்கிவிடும். அந்த அளவுக்கு அவ்வளவு பெரியது.

நான் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

பாம்பு நாங்கள் இருக்கும் இடத்தில் அருகில் வராதபடி குரைத்துக் கொண்டே கடிக்கப் போகிற மாதிரி பாம்பை ஆட்டம் காட்டிக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பாம்பு சீறிப் பாயும் வேகத்தைப் பார்த்தால் பயங்கரமாக இருந்தது. கூட வந்திருந்த டாக்டர் பையன்கள் இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடன் குலை நடுங்கிப் போனார்கள்.

அங்கு படுத்திருந்த சாமியார் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தார். என்ன சாமி…! பாம்பு வந்திருக்கிறது. நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்.

1.வேடிக்கை பார்க்காமல் என்ன செய்வது…?
2.அது சாப்பாட்டிற்கு அது வருகிறது….
3.சக்தி பெறுவதற்கு நாம் இங்கே வந்திருக்கிறோம்….
4.ஏதாவது ஒன்று நடக்கட்டும்…! என்று சொன்னேன்.

என்னங்க…? இப்படி விளையாட்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்…! என்று அந்தச் சாமியார் கேட்கிறார்.

கொஞ்ச நேரம் பார்க்கலாம்… பாம்பு என்ன தான் செய்கிறது என்று…! நாம் தான் விழித்துக் கொண்டோமே… பாம்பு யாரையும் சாப்பிடாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம்…! என்று சொன்னேன்.

கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த நாய் விடுவேனா…! என்று சுற்றுகிறது. ஒரு மணி நேரம். இருக்கும்.

அப்புறம் என்ன செய்தோம்…? இரண்டு பேராகச் சேர்ந்து ஒரு பெரிய கவட்டையைக் கொண்டு வந்து பாம்பின் தலைப் பக்கம் போட்டு அதே சமயத்தில் வாலைப் பிடித்து அப்படியே உருட்டி விட்டு… உருட்டி விட்டு… ஓரு பெரிய பள்ளத்தாக்குப் பக்கமாகப் பார்த்து அப்படியே உருட்டி விட்டோம்.

அந்தப் பாம்பு மிகவும் பெரியது. கவட்டையை வைத்து தலைப் பக்கம் சீறிப் பாயாதபடி போட்டு வாலையும் பிடித்து அவ்வாறு தள்ளி விட்டோம். வாலைப் பிடிக்கவில்லை இல்லை என்றால் அப்படியே ஆளைச் சுருட்டிவிடும்.

ஆனால் இந்த நாய் குரைத்த சத்தம் கேட்டு குட்டி போட்டிருந்த புலி அங்கே வருகிறது. அந்த வாசனையை மோந்து பார்த்து கீக்….கீக்…கீக் என்று கத்திய உடனே அந்தச் சாமியாரும் புரிந்து கொண்டான்.

இந்தப் புலி தான் இப்போது வருகிறது. நாய் வாசனைக்கு நிச்சயம் வரும். இந்த நாய் இப்பொழுது சத்தம் போட்டுத் தூங்கிக் கொண்டு இருந்த புலியை எழுப்பி விட்டு விட்டது. நம் எல்லோருக்கும் ஆபத்தைக் கொண்டு வந்து விட்டது என்று சொல்கிறார்.

ஒன்றுமில்லையப்பா…! நீ பேசாமல் இரு…! என்று நான் சொன்னேன்.

அங்கே இரும்புக் கூண்டு ஒன்று செய்து வைத்திருக்கிறார்கள். அதற்குள் அந்தச் சாமியார் போய் விட்டார். அந்த நாயும் அங்கிருக்கும் ரூம் மாதிரி ஒன்றுக்குள் போய் கதவைச் சாத்துகிறது. அதனின் விவரம் அப்படி இருக்கிறது.

நாங்கள் கொஞ்ச நேரம் அப்படியே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருநாதர் சொன்னபடி வாசனையை மாற்றிய உடனே
2.நாய் இருக்கிற பக்கமே புலி மோந்து கொண்டு போகிறது.
3.நாய் இருக்கும் பக்கம் போய் அப்படியே கொஞ்ச நேரம் கழித்துப் போய் விட்டது.
4.இவையெல்லாம் மோப்பத்தால் அறியக் கூடிய நிலைகள். அனுபவ ரீதியில் வந்தது.

ஏனென்றால் புலி எதனின் நோக்கத்தோடு வந்தது…? நாயின் மணத்தை நுகர்ந்து தான் அது வந்தது. அது நாயைத் தான் தேடிப் போகிறது. அவர்கள் கூண்டுக்குள் போய் விட்டார்கள் நாங்கள் இங்கே வந்து விட்டோம்.

ஒன்றின் மணத்தை நுகர்ந்து விட்டால் புலி போன்றவை எல்லாம் அதன் மேல் தான் குறியாக வரும். அந்த நாய் சத்தமில்லாமல் பேசாமல் அப்படியே சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டது.

ஆனால் அந்தச் சாமியார் புலியைப் பார்த்ததிலிருந்து…
1.எல்லோரும் கூண்டுக்குள் வந்து விடுங்கள்
2.மூடி விட்டால் புலி நம்மை ஒன்றும் செய்ய முடியாது…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அந்தப் புலி ஒன்றும் செய்யாது. கதவை ஏன் மூடுவானேன்…? பேசாமல் இருங்கள்…! என்று நான் சொன்னேன்.

நீங்கள் என்னங்க…? இப்படி விளையாடுகிறீர்கள். நம்மைக் கொன்று விட்டால் என்ன செய்வது என்கிறார்…?

புலி ஒன்றும் நம்மைக் கொல்லாது. நாயின் வாசனையை நுகர்ந்து புலி வந்ததால் நாயைத்தான் தாக்கும். உன்னைத் தாக்காது என்று சொன்னேன்.

“என்னமோ செய்யுங்கள்…! போங்கள்…! என்றார்.

இந்த அளவிற்குச் சில உண்மை நிலைகள். இது எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தெரிந்து கொண்டது.

எதைக் குறிக்கோளாக வைக்கிறதோ நாயும் அதைத்தான் நுகருகிறது புலியும் நாயை நுகருகிறது. புலி நாயைத் தாக்கினாலோ நாயின் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்று புலியாகத்தான் பிறக்கும்.

இயற்கையின் சில நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித் தெரிய வைக்கிறார். அதைத்தான் ஒவ்வொன்றாக உங்களுக்கு உணர்த்திக் கொண்டு வருகின்றோம்,

Leave a Reply