மன அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மனதை உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பமாக எப்படி மாற்ற வேண்டும்..?

Agathiyams

மன அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மனதை உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பமாக எப்படி மாற்ற வேண்டும்…? 

 

சகஜ வாழ்க்கையில் எல்லோரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் சந்தர்ப்பங்கள் எப்படி நம்மை இயக்குகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இளைய தலைமுறையினர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அடுத்தவர் ஏதாவது தன்னைப் பற்றிச் சிறிதளவு பிடிக்காமல் சொல்லிவிட்டாலும்.. :உடனே எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது..!” என்று வந்துவிடுகின்றார்கள்.

1.கேட்டால் வேலை பார்க்கிற இடத்திலே என்னைத் திட்டுகிறார்கள். வீட்டிலேயும் திட்டுகிறார்கள்.
2.நண்பர்களும் சரியாக என்னிடம் பேசுவதில்லை.
3.என்னை யாருக்குமே பிடிக்கவில்லை.
4.என் மனது சரியில்லை… நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்..! என்று மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பார்கள்.

என்ன நடந்தது…? எதனால் இப்படி ஆனார்கள்..? என்று சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையை வெறுக்கும்படியாக அதில் ஒன்றுமே இருக்காது.

ஒன்றுமே இல்லை என்றால் அது எப்படி…?

1.நம் கையில் ஒரு அழுக்கோ தூசியோ ஒட்டினால் அதற்காக யாராவது டென்ஷன் ஆவோமா…?
2.தினசரி உடல் அழுக்கு ஆகிறது உடுத்தியிருக்கும் உடை அழுக்காகின்றது குளிக்காமல் இருப்போமா..?
3.அல்லது துணியைப் துவைக்காமலோ துணியைப் போடாமலோ இருப்போமா..? இல்லை.

சோப்பைப் போட்டு நல்ல நீரில் குளித்தால் அழுக்குகள் எல்லாம் ஓடிப் போகுமா இல்லையா…! சோப்பைப் போட்டு நுரையை ஏற்றினால் துணியிலிருக்கும் அழுக்குப் போகுமா இல்லையா…!

புறத் தூய்மை எப்படிச் செய்கிறோமோ அதே மாதிரித்தான் நம் மனதிலும் நம் எண்ணத்திலும் ஒட்டிக் கொள்ளும் அழுக்கைச் சோப்பைப் போட்டுக் கழுவுவது போல கழுவ முடியும்.

எத்தனை தடவை அழுக்கானாலும் நம் மனதையும் எண்ணத்தையும் தங்கம் போல பளிச் என்று வைத்துக் கொள்ள முடியும். அதனால் தான் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்காகவும்… “மன உளைச்சல் பட வேண்டியதில்லை…!” என்று சொல்கிறோம்.

ஏனென்றால் நம்மைத் திட்டுகிறவர்கள் திட்டி முடிந்ததும் அதை விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் திட்டினார்கள்… திட்டினார்கள்…! என்று அதையே நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அங்கே தான் நாம் தவறு செய்கிறோம்.

1.கையில் எடுத்த ஒரு வேண்டாத பொருளை கீழே அப்படியே போட்டு விடுவது போல்
2.அவர்கள் திட்டியதை நாம் அனாதையாக்க வேண்டும்.
3.அதற்குப் பதிலாக நாம் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவசரமாக ஊருக்குப் போகும் பொழுது ரோட்டில் சண்டை போட்டால் அதைப் பார்ப்போமா…? இல்லை. பார்த்தால் ட்ரெயினைப் பிடிக்க முடியாது. எப்படிச் சண்டை போட்டாலும் ஏசினாலும் பேசினாலும் அதை நின்று பார்க்க மாட்டோம்.. கேட்கவும் மாட்டோம்.

அது போல் தான் வாழ்க்கையில் எத்தனையோ கெட்டது வந்தாலும் அதன் மேல் நினைவைச் செலுத்த வேண்டியதில்லை,

மனதை எப்படிக் கழுவுவது என்று பார்ப்போம்.
1.நம் கண் ஒன்றைப் பார்க்கிறது.
2.சப்தம் காதிலே படுகிறது.
3.உடனே நினைவு கண்ணுக்கு வந்த பின் இழுத்துச் சுவாசிக்கிறோம்.
4,சுவாசித்தது உயிரில் படுகிறது…!
5.உயிர் ஒரு நெருப்பு. நெருப்பில் எதைப் போடுகிறோமோ அந்த வாசனை தான் வரும்.
6.அதிலே நல்ல பொருளைப் போட்டால் நல்ல வாசனை தான் வரும்.

கோயிலில் சாமி சிலைக்குப் பால் பன்னீர் சந்தனம் தேன் மலர்கள் கனிகள் இதேல்லாம் அபிஷேகம் செய்ற மாதிரி நம் உயிருக்கு அபிஷேகம் செய்தால் நம் மனதும் எண்ணங்களும் தங்கம் போல் பளபளப்பாகிவிடும்.

நம் உடலில் பாலையோ பன்னீரையோ சந்தனைத்தையோ ஊற்றினால் சந்தோஷம் வருமா இல்லையா…? ஆனால் மிளகாயை அரைத்து ஊற்றினால் எரியுதே எரியுதே உஷ்..உஷ்… ஆ…ஆ… என்று தான் சொல்வோம்.

அது மாதிரித்தான் திட்டுகிறவர்களை நினைத்தாலோ வேண்டாததை நினைத்தாலோ எரிச்சல் தான் வரும். டென்சன் தான் ஆவோம். மனதும் கெடும் உடலும் கெடும்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் திரும்பத் திரும்ப இணைத்தால் “அமைதியும் சந்தோஷமும் தன்னாலே தேடி வரும்….!”

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணினாலே போதும்.

1.ஒரு இரண்டு மூன்று தடவை இப்படி எண்ணினாலே
2.SUDDEN BRAKE…! (பிரேக்) போட்ட மாதிரி மற்றவர்களைப் பற்றிய எண்ணமே மறந்து போகும்.
3.அடுத்து நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டு போகலாம்…!

மனது கெடும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்ற இந்தச் சோப்பைப் போட்டால் கெட்டதெல்லாம் நம்மை விட்டு விலகும்.

செய்து பாருங்கள்…! செய்த பின் மிகுந்த உற்சாகம் வருகிறதா இல்லையா என்று…?

Leave a Reply