இந்த மனித வாழ்க்கை (உடல்) சதமில்லை என்றால் சதமானது எது…?

Astral powers of human soul

இந்த மனித வாழ்க்கை (உடல்) சதமில்லை என்றால் சதமானது எது…?

இந்த மனித உடலில் நாம் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? வாழப் போகின்றோம்…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு நெல் அந்தக் குறுகிய காலத்திலேயே வளர்ந்து விடுகின்றது.
1.நெல் விளைந்து விடுகின்றது.
2.ஆனால் அந்தச் செடியோ பட்டு (காய்ந்து) விடுகின்றது.

மரங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரு குறித்த காலத்தில் விளைகின்றது. தன் இன வித்துக்களைப் பெருக்கி விட்டு அதுவும் பட்டுவிடுகின்றது.

இதைப் போன்று தான் மற்ற உயிரினங்களும் அதனுடய ஆயுள் காலம் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் பின் அந்தச் சரீரத்தில் வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப அந்த உடலை விட்டே பிரிகின்றது.

அந்தச் சரீரத்தில் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அடுத்த உடலைப் பெறுகின்றது.
1.அதைப் போன்று தான் நமது உடல் “இது சதமல்ல…!”
2.சதமான (நிலையான) உடலை நாம் தேட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்த உணர்வை நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்தத் தீமைகள் நம்மை அணுகாது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி நாம் இதைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்,

அப்படிக் கூட்டினால் அடுத்து ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருக்கலாம். இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய இன்னலையும் நீக்கிடலாம். ஆகவே மனித சரீரத்தைப் பற்றி நாம் எதுவுமே எண்ண வேண்டாம்.

எத்தகைய சக்திகளை நாம் பெற்றாலும்
1.மலர்களோ மற்ற மரம் செடிகளோ உயிரினங்களோ பட்டுவிடுவது போல் தான் இந்த மனித உடலும் ஒரு நாள் மடிவது திண்ணம்.
2.ஆனால் நாம் என்றும் அழியாத நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றியே நாம் வாழ வேண்டும்.

தீயிலே குதித்து விட்டால் உடல் கருகிவிடுகின்றது. உயிர் கருகுவதில்லை. இந்த உடலில் வேகும் பொழுது எந்த அலறல்கள் இருந்ததோ அந்த உணர்வினை வளர்த்துக் கொண்டு இன்னொரு உடலுக்குள் சென்ற பின் ஐய்யய்யோ.. எரிகிறதே.., எரிகிறதே…! என்ற உணர்வைத்தான் அந்த உடலில் உருவாக்குகின்றது.

ஆகவே இந்த உடலில் நாம் சேர்க்கும் உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உடலில் நல்ல நிலையிலிருக்கும் பொழுதே நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து இதிலே விளைய வைத்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட அழியாத ஒளிச் சரீரத்தைப் பெறவேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் வந்தாலும்
2.எத்தகைய கஷ்டம் வந்தாலும்
3.பிறரால் துயரங்கள் வந்தாலும்
4.எத்தனை வெறுக்கும் நிலைகள் இருந்தாலும்
5.நாம் அந்த மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றி
6.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி
7.அந்த அருள் ஒளி உணர்வுடனே வாழ்வோம் வளர்வோம் என்று நாம் அனைவரும் தியானிப்போம்.

அழியாத ஒளிச் சரீரம் பெறுவோம். சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் இணைவோம்.

 

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

Image

Power and wisdom

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

1.புற உலகில் உள்ள நிலைகளை நாம் எண்ணிப் பார்க்காது
2.புற உலகிலிருந்து நம்மைத் தாக்கும் சாபமோ… பாவமோ… கோபமோ…
3.மற்ற பழித்துப் பேசும் நிலையோ… இழுக்கான நிலைகள் பேசும் நிலைகளிலோ நாம் சிக்காது…
4.அவ்வப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து
5.நம் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் நம்மைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களைச் “சிக்கல்…!” என்று சொல்லாது அதிலிருந்து விடுபட ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

இந்தப் பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழகி விட்டால் உங்கள் வாழ்க்கையில் உயர்வான நிலைகள் கிடைக்க ஏதுவாக இருக்கும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே
1.சங்கடம் என்ற எண்ணத்தை உங்கள் எண்ணத்திலிருந்து அறவே நீக்கிடல் வேண்டும்.
2.குடும்பத்தில் கஷ்டம் என்ற வார்த்தையே உங்கள் வாயில் வராதபடி அது தடுக்க வேண்டும்.
3.யார் எதைச் சொன்னாலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.எத்தகைய நோயாக இருப்பினும் “எனக்கு நோய் இருக்கிறது…!” என்று சொல்ல வேண்டாம்.
5.மகரிஷிகளின் அருள் சக்திகளை நான் பெற்று “என் நோயை நீக்குவேன்… நான் நலமடைவேன்…!” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் எண்ணி வந்தாலே போதுமானது. கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்பது போல் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நலம் பெறுவீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் ஒளியைப் பெற்று அவர் சொன்ன முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால் நாமும் அவரைப் போன்ற ஒளி நிலை பெறலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டு அகன்று விண்ணுலகம் சென்றார். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இன்றும் ஒளியின் சரீரமாக ஏகாந்தமாக நிலை கொண்டுள்ளார்.

அவர் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி ஆத்ம சுத்தி என்ற நிலையைச் செய்து மகரிஷிகளின் அருள் ஒளியைப் பற்றுடன் பற்றிப் பிறவா நிலை என்ற பெரு நிலை அடையலாம்.

அதே சமயம் இந்த வாழ்க்கையில் வந்த சகல தீமைகளிலிருந்தும் விடுபட்டு நமது வாழ்க்கையில் எது வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறனும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் நிலைகளும் நோய்கள் வராது தடுக்கும் நிலைகளும் நிச்சயம் நாம் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!