நம்முடைய முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் – ஏன்…! எப்படி…?

big heaven

நம்முடைய முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் – ஏன்…! எப்படி…?

நம் மூதாதையர்களுடைய உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுத் தியானத்தின் மூலமாக உந்தித் தள்ளும் போது உங்கள் மூதாதையர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வு தான் உங்கள் உடலாக உருவாகி உள்ளது. அதை எண்ணி நீங்கள் செயல்படுத்தப் போகும் போது
1.முன்னோர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில்
2.உங்களை அறியாது அவர்களுக்கு ஒரு நன்மையைச் செய்கின்றீர்கள்.

“சிறு துளி பெரு வெள்ளம்…” போல் நாம் அனைவரும் ஒன்று சேர்த்து மூதாதையருடைய உயிராத்மாக்கள் விண் செல்ல வேண்டும் என்று எண்ணும் போது
1.அவர்கள் சூட்சம நிலைகள் பெற்றவர்கள் – அதாவது எடையற்றவர்கள்
2.அதனால் (எடை இல்லாததால்) நம் உணர்வால் சப்தரிஷி மண்டலத்திற்குள் அவர்களை எளிதில் உந்தித் தள்ள முடியும்.

மழை பெய்து அது வெள்ளமாகப் பாயும் போது எதுவாக இருந்தாலும் செத்தை குப்பை எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு கடலில் சேர்க்கின்றது.

அதைப்போல நம் எல்லோருடைய எண்ணங்களையும் குவித்து ஏக காலத்தில் மூதாதையருடைய உயிராத்மாக்கள் விண் செல்ல வேண்டும் என்று உந்திச் செலுத்தும் போது
1.அலுங்காமல் ஒரு ரிமோட் கண்ட்ரோல் போல்
2.அவர்களை அங்கே விண்ணிலே சேர்த்து விடுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த எந்த மனிதனும் உடனடியாக அடுத்த உடலுக்குள் அதிகமாகப் போவதில்லை. அப்படியே உடலுக்குள் போனாலும் அந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் வெளியிலே வருகின்றது.

ஏனென்றால் இன்னொரு மனித உடலுக்குள் போய் அங்கே வியாதியை உருவாக்கி அந்த உடலும் இறந்து வெளியிலே வந்தாலும்
1.முதலில் இறந்தவரின் உயிராத்மா இந்த (இரண்டாவது) உடலில் வளர்த்த உணர்விற்குத் தக்கவாறு
2.அடுத்த உடலின் ஈர்ப்புக்குள் போவதற்கு வெகு நாளாகும்.

அப்படி வெளியிலே வந்த பின் அவர்கள் அடுத்த உடலைப் பெறுவதற்குள் அவர்களுடைய தொடர்பு கொண்ட நாம் இதைப் போன்று தியானித்து விட்டு அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் அவர்கள் பிறவியே இல்லாத நிலைகள் பெறுகின்றனர்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்படிப்பவர்கள் உங்கள் குடும்பத்தில் யாராவது மூதாதையர்கள் இறந்து விட்டால் அவர்கள் அடுத்த உடலுக்குள் அவர்கள் போவதற்கு முன்னாடி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளி இணைத்து விடுங்கள்.

இது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாகின்றது…!

Leave a Reply