ஓ…ம் ஈஸ்வரா…! என்று நமக்குள் இயக்கச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி (BOOSTING SPIRITUAL ENERGY)

om

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நமக்குள் இயக்கச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி (BOOSTING SPIRITUAL ENERGY)

உதாரணமாக நம் குழந்தை அது அறியாதபடி தவறிக் கீழே விழுந்து விட்டது. அதனால் அது அவஸ்தைப்படுகிறது. மருத்துவரிடம் சென்று மருந்தைக் கொடுத்துவிட்டோம்.

ஆனாலும்ல் நாம் குழந்தையை நினைத்து அடிக்கடி வேதனைப்படுகின்றோம் அல்லவா…? இதை யார் சுத்தப்படுத்துவது…?

இப்படிக் கஷ்டம் வந்துவிட்டது என்றால் உடனே கோவிலுக்குச் செல்கிறோம். சென்று நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நினைக்கின்றோம்.

இருபது ரூபாயோ ஐம்பது ரூபாயோ கொடுத்து ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்வதைப் பார்த்து நாம் சந்தோஷப்படுகின்றோம்.
1.ரூபாயைப் பூசாரிக்குக் கொடுத்தவுடன் நம்மை முதலில் கூப்பிட்டு விபூதி பிரசாதம் சாமிக்குப் போட்ட மலர் மற்ற எல்லாம் கொடுத்துவிடுவார்.
2.ஆனால் காசைக் கொடுக்கவில்லை என்றாலோ குறைவாகக் கொடுத்தாலோ தட்டே இந்தப் பக்கம் திரும்பாது.
3.இப்படித் தான் நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
4.ஆண்டவனுக்குக் காசு கொடுத்தால் தான் அவன் வாக்கே இங்கு வரும்.

ஆனால் அந்த நிமிடத்தில் உங்களை ஆளுகிறவன் யார்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் உயிர் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றது.

ஆனால் குழந்தையை எண்ணி “இப்படி ஆகி விட்டதே…!” என்று பாசத்தில் எண்ணும் பொழுது வேதனையை உணரச் செய்கிறது. வேதனையை உணரக்கூடிய நிலை இருந்தாலும் நம் உயிரான ஈசனுக்கு வேதனையாகின்றது.

இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டவுடனே உடலுக்குள் இருக்கக்கூடிய சக்திகள் எல்லாம் நெளிய ஆரம்பித்துவிடும். உடலான சிவம் என்ன செய்கின்றது…?

ஆஹ்ஹஹ்ஹா…! என்று அப்புறம் தன்னாலே பயத்தால் நடுங்க ஆரம்பித்துவிடும். நீங்கள் ஆடவில்லை என்றாலும் கூட சிவன் என்ன செய்கிறான்.
1.நர்த்தனம் ஆட ஆரம்பித்துவிடும். கை கால் எல்லாம் நடுங்கும்.
2.ஏனென்றால் நம் உடல் சிவம். இதைத்தான் சிவ நடனமாகக் காட்டியிருப்பார்கள் ஞானிகள்.
3.வாசுகி…! நீ சுவாசிக்கக்கூடிய இந்த உணர்வு
4.அது உனக்குள் அந்தச் சக்தியாக இருந்து இந்த உடலை ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாகக் கொடுத்து இருக்கின்றார்கள்…
6.நாம் யார் படித்திருக்கிறோம்…? அதை யாரும் படித்துக் கொள்வதும் இல்லை… தெரிந்து கொள்வதும் இல்லை…!

ஞானிகள் காட்டிய உண்மைகளைச் சொன்னால் என்ன இவர் கோவிலுக்குச் சென்று தேங்காய் பழம் வைத்துக் கும்பிடக் கூடாது என்று சொல்கிறார்…! இதற்கு முன்னாடி செய்ததெல்லாம் தப்பா…? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

குழந்தை கீழே விழுந்து விட்டது என்றால் பதறிப் போய் வேதனைப்படுகின்றோம். உடல் நடுக்கமாகின்றது. இதை மாற்ற அடுத்த நிமிடம் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரை நீங்கள் நினையுங்கள்.
2.உங்களை ஆள்கிற ஆண்டவன் அவன் தான்.
3.ஓ…ம்…! என்று சுவாசிக்கும் பொழுது கரண்ட் (ஆற்றல்) அதிகமாகின்றது.
4.அப்போது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
5.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.
6.அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த மகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்கள். ஈஸ்வரா என்று சுவாசிக்கின்றீர்கள். உங்கள் உயிரான ஈசனுக்கு அப்பொழுது என்ன நடக்கின்றது…?

அந்த மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி அந்த உணர்வை எடுத்தார்களோ அந்த மணம் புருவ மத்தியில் பட்டவுடனே ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சி வரும்.
1.முதலில் குழந்தையைக் காத்து விடுகின்றோம்.
2.அதே சமயத்தில் நாம் பட்ட வேதனைகளையும் தூய்மைப்படுத்துகின்றோம்.
3.குழந்தைக்கு அடுத்து நீ இப்படிச் செய்யப்பா… நீ பார்த்து நடந்து கொள்…! என்று நல்ல உணர்வுகளையும் ஊட்ட முடியும்..!

இப்படிப்பட்ட நல்ல உணர்வை எடுக்கத்தான்… அதை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வதற்காகத்தான்… மற்றவர்களுக்கும் அந்த நல்லதைக் கொடுக்கத்தான்… கோவில்களையே ஞானிகள் உருவாக்கினார்கள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் வழி நடந்தால் அந்த மெய்யான நிலைகளை அடையலாம்.

Leave a Reply