முன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்…!

Image

eternal heaven

முன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் “தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்…!”

 

நமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வதே ஞானிகள் காட்டிய சாஸ்திரம்.

ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதற்கு முன் செய்யத் தவறிவிட்டோம். அதனால் நம் மூதாதையர்களான உயிரான்மாக்கள் இன்னொரு உடலுக்குள் போயிருந்தாலும் நாம் வலு கொண்டு தியானித்தால் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

அந்த உடலை விட்டு முன்னோர்களின் உயிரான்மா எந்த நிமிடம் வெளியிலே வந்தாலும் நாம் தியானத்தின் மூலமாகப் பாய்ச்சும் அந்தச் சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்களை இந்தப் புவி ஈர்ப்பிலிருந்து விடுபடச் செய்து அங்கே அந்த ஒளிக் கடலிலே இணைக்கச் செய்யும்.

ஏனென்றால் நம் முன்னோர்களின் உணர்வுகள் தான் நம் உடலாக இருக்கின்றது. அதன் துணை கொண்டு எளிதில் அவர்களை விண் செலுத்தலாம்.

முன்னோர்களுக்கு இன்றைய வழக்கத்தில் நாம் என்ன செய்கின்றோம்…?

இருட்டான காலமான அமாவாசையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம். அமாவாசை அன்றைக்கு விரதமிருந்து பின் அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்குப் பிடித்தமான உணவைப் படைப்பதும் அவர்கள் உடுத்திய துணிகளை வைத்து வேண்டுவதும் அதைத்தான் செய்கின்றோம்.

இப்படிச் செய்தால் அவர்களை நாம் மீண்டும் ஒரு பிறவிக்குத் தான் அழைக்கின்றோம். அவர்களை மோட்சம் பெறச் செய்வதல்ல…! இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறோம்.

(அமாவாசை அன்றைக்கு ஒரு நாள் கறியும் சாப்பிட மாட்டோம். அமாவாசைக்கு மறு நாள் இரண்டு பங்காகச் சாப்பிடுவோம்…!)

ஆனால் இதை எல்லாம் சொன்னாலும் கேட்கவா போகின்றீர்கள்…!

என்னமோ சாமி சொல்வது உண்மையாகத்தான் தெரிகின்றது என்று தெளிந்திடும் நிலை வந்தாலும் அமாவாசை அன்றைக்கு இதைச் செய்யவில்லை என்றால் “ஏதாவது குற்றமாகிவிடுமோ…!” என்ற எண்ணம் தான் வருகிறது.

அமாவாசை வந்தவுடன்… முன்னோர்களுக்குச் சாமி கும்பிடவில்லை என்றால் “டேய்.…! நம் மூதாதையர்கள் செய்தது எல்லாம் மறந்து விட்டாயாடா…! பெரியவர்களை நீ மறந்து விட்டயாடா…! என்று சொன்னால் பழையபடி அந்தச் சாங்கியத்தைத் தான் செய்யத் தொடங்குவார்கள்.

அதாவது நம்முடைய வழக்கத்தில் மிளகாயைச் சாப்பிட்டுப் பழகினால் அந்த மிளகாய் தான் அவருக்கு ருசியாக இருக்கும். ஒருவர் இனிப்பைச் சாப்பிட்டால் அவருக்கு அந்த இனிப்பு தான் ருசியாக இருக்கும்.

இனிப்பைச் சாப்பிடுபவர் மிளகாய் சாப்பிடுகிறவரைப் பார்த்தவுடனே இப்படிச் சாப்பிடுகின்றார் பார் காரத்தை…! என்று சொல்வார்.

அந்தக் காரத்தை சாப்பிடுகிறவர் இனிப்பு சாப்பிடுவதைப் பார்த்தால் பிசாசு மாறி இனிப்பைச் சாப்பிடுகின்றான். வாந்தி வருவது போல இருக்கிறது என்பார்.

ஆக அவரவர் உணர்வுக்கேற்ற எதிர் நிலையான மறைகள் வரப்போகும் போது இப்படி எதிர்மறையாகத் தான் இயக்குகின்றது. இதைப் போன்று தான்
1.அன்றைய அரசனால் காட்டப்பட்ட சாஸ்திர விதிகளில் சிக்கி
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்யாதபடி
3.ஐதீகம் என்ற முறைகளில் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு நாளும் ஒரு சாங்கியத்தைச் செய்து விட்டு
4.அதனுடன் திருப்தி அடைந்து கொள்கிறோம்

அதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று மகரிஷிகளின் எண்ண அலைகளை முதலில் நமக்குள் வலு கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்த பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து நேரே அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…!

இவ்வாறு தினசரி நாம் எண்ணுதல் வேண்டும்.

மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் எளிதில் அதைப் பெற முடியும்

Arul Gnanigal

மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் பதிவாக்க வேண்டிய முறையும்… பதிவாக்க வேண்டியதன் அவசியமும்…!

எத்தனையோ கோயிலுக்குப் போகின்றோம். உதாரணமாகத் திருப்பதிக்கு போனால் நான்கு நாட்கள் வரிசையில் நின்று காத்திருந்தாலும் அவனைப் போய்ப் பார்த்து அர்ச்சனை செய்து விட்டு வந்தால் தான் “நல்லது” என்று செய்கிறோம்.

நான்கு நாளாகச் சரியான சாப்பாடு இல்லை என்றாலும் மற்ற வசதிகள் நாம் நினைப்பது போல் இல்லை என்றாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு “சாமியைப் பார்க்க வேண்டும்…!’ என்று காத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் யாம் உங்களுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வுகள் நீங்கள் அனைவரும் பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்களுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உபதேசித்து நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறப் பழகும் நிலையாகச் சிறிது நேரம் தியானிக்க வேண்டும் என்றால் “தியானம் செய்ய எங்களுக்கு நேரம் இல்லை…!” என்று ஓடும் நிலையே வருகிறது.

ஆனால் அங்கே திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்றால் நேரத்தை எல்லாம் ஒதுக்கி விட்டு அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அதைப் போன்று தான் மற்ற நேரத்தை ஒதுக்கி விட்டு…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
2.நேரத்தைக் கூட்டி நீங்கள் வந்தீர்கள் என்றால் இது உங்களுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.

ஏதோ வந்தோம்…! பார்த்தோம்…! ஆசீர்வாதம் வாங்கிவிட்டுப் போகிறோம் என்று சொன்னால் நிலைத்திருக்கும் அந்தச் சக்தியைப் பெறாதபடி நீங்களே தடைப்படுத்திக் கொள்கிறீர்கள்…! என்று தான் அர்த்தம்.

எழுத்துக்களை எழுதும் பொழுது பொறுமை கொண்டு எழுதுதல் வேண்டும். எழுதும் வேகத்தைக் கூட்டினால் பொருள் தெரியாது. நீட்டமாகச் செல்லும். அதனுடைய கருத்தின் நிலை அறியாது கோடாகத் தான் இருக்கும்.

அதைப் போன்று தான் இந்த வாழ்க்கையில் நாம் போகும் வேகத்தில் என் தொழிலைப் பார்க்க வேண்டும்… அதைக் கவனிக்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்..! என்ற பல எண்ணங்களை எண்ணி அந்த ஏக்கத்தில் இருந்தால் யாம் உபதேசிக்கும் ஞானிகளின் வித்துக்கள் உங்களுக்குள் ஆழமாகப் பதியாது.

ஆழமாகப் பதியவில்லை என்றால் மீண்டும் நீங்கள் நினைவின் ஆற்றல் கொண்டு எண்ணினாலும் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெற முடியாத நிலைகள் ஆகிவிடும்.

ஆனால் அதே சமயத்தில் ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படிக்கும் பொழுது
1.ஒரு நிலை கொண்டு இதை எப்படியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்து கொண்டால்
2.அந்தப் பதிந்த உணர்வின் வலுவால்
3.நீங்கள் எண்ணும் போதெல்லாம் அது மீண்டும் குருவாக இருந்து
4.உங்களுக்குள் நல் வழி காட்டும் குருவாக அது இயக்கும்.

உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும். பொருள் கண்டு உணர்ந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும். அருள் ஞானம் பெறவேண்டும் அருள் வழி வாழ வேண்டும். மலரைப் போன்ற மணம் நீங்கள் பெறவேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும். மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

உங்களுக்குள் எது எது ஆழமாகப் பதிவாகின்றதோ அது தான் உங்களை இயக்கும். அதன் வழி தான் உங்கள் வாழ்க்கையும் அமையும்.

ஆகவே
1.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால்
2.தியானிக்கும் பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்
3.பின் அது உங்களை ஞானப் பாதையில் தன்னாலே அழைத்துச் செல்லும்.