நல்ல தங்காள் கிணறு…!” – நடந்த நிகழ்ச்சி

நல்ல தங்காள் கிணறு…!” – நடந்த நிகழ்ச்சி

ஒரு சமயம் பழனியில் தாய் தந்தையுடன் ஏழு பேர் சேர்ந்து கிணற்றில் விழுந்து செத்துப் போனார்கள். அதனால் அந்தக் கிணற்றுப் பக்கமாகப் போவதற்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.

குருநாதர் என்ன செய்தார்…? என்னை இங்கே வாடா…! என்று கூப்பிட்டார். நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! என்று சொல்லிக் குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.

அந்தக் குளத்திற்கு அருகில் உள்ள இந்தக் கிணற்றுக்கு என்னைப் போகச் சொன்னார். நான் இங்கே இருந்து கொள்கிறேன்டா…! நீ (ஞானகுரு) அந்தக் கிணற்றில ஒரு கல்லைக் கொண்டு போட்டு விட்டு வாடா என்கிறார்.

நான் எப்படி அங்கே போக முடியும்…?

ஏற்கனவே நிறையப் பேர் விழுந்து அதிலே இறந்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே போய் எத்தனையோ பேர் பயத்தாலே நெஞ்சு வலித்தது என்று செத்துப் போயிருக்கின்றார்கள்.

இந்த எண்ணம் எல்லாம் எனக்குள் ஏற்கனவே பதிவாகி இருக்கின்றது. என்னை இராத்திரியில் ஒரு மணிக்குக் கல்லைக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் போடச் சொன்னால் எப்படி இருக்கும்…?

கல்லைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டேன். போடா…..! என்கிறார் குருநாதர். சாமி…! என்றேன் நான். முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா என்கிறார் குருநாதர்.

அங்கே நான் போகப் போகப் போகப் போகப் போகப் போக அந்த உருவம் முதலில் வெள்ளையாகத் தெரிகின்றது. பிறகு அந்த அம்மா கூட்டிக் கொண்டு வந்தது எல்லாமே அப்படியே தெரிகின்றது.

அங்கே கிணற்றில் விழுந்தது எல்லாம் தெரிகின்றது. “ஜல…ஜல…!” என்ற நினைப்பு அந்த எண்ணங்கள் அப்படியே குவித்து வருகிறது. அடுக்கடுக்காக அத்தனை உருவங்களும் தெரிகிறது.

இதைப் பார்த்தவுடனே எனக்கு என்னாகிப் போனது…? நான் சாப்பிட்ட ஆகாரம் ஜீரணிக்கவில்லை. பூராம் வயிற்றோட்டமாகப் போய் வேஷ்டியெல்லாம் அசிங்கமாகிவிட்டது. அவ்வளவு தைரியம் எனக்கு…!

இந்த அளவுக்கு ஆனவுடனே தலையிலிருக்கும் கல் தன்னாலே கிடு…கிடு…! என்று நடுங்கிக் கீழே வருகின்றது. விழுந்துவிட்டது. கல் விழுந்தவுடனே குருநாதர் என்ன செய்து விட்டார்…?

டேய்…டேய்…டேய்…! என்னைக் காப்பாற்றுடா…. என்று சப்தம் போடுகின்றார். அந்த உருவம் இங்கே குருநாதரைச் சுற்றிக் கொண்டு அவர் மண்ணையைப் பிடிக்கின்ற மாதிரி (மூச்சுத் திணறல்) கழுத்தைப் பிடித்ததும் அலறுகின்றார்.

அட… இதென்னடா வம்பாகப் போய்விட்டது…? இவரே இப்படி இருக்கிறார் என்று சொன்னால் எப்படி…? நீ என்னைக் காப்பாற்றுடா… என்று குருநாதர் சொன்னதும் எனக்கு பயம் இன்னும் அதிகமாகி விட்டது. சரி…. அவ்வளவு தான் போலிருக்கின்றது.

ஏனென்றால் என்னுடைய மனைவி இறக்கும் தருவாயிலிருந்து குருநாதர் காப்பாற்றினார். பின் நான் சொல்வதை நம்புகிறாயா..? நான் சொல்வதைக் காப்பாற்றுவாயா..? இதிலிருந்து மாறமாட்டாய் அல்லவா என்று ஏற்கனவே வாக்கை வாங்கிக் கொண்டார்.

மனைவி இப்பொழுது தான் நன்றாக உள்ளது. சிறிய குழந்தைகளாக இருக்கின்றது. சரி இனி நமக்கு அவ்வளவு தான்…! இப்பொழுது வயிற்றோட்டம் போய்விட்டது. நாளைக்கு ஆள் இருக்கின்றனோ… இல்லயோ…? என்று இந்த எண்ணம் தான் எனக்குள் ஓடுகின்றது.

என் எண்ணம் இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் போது குருநாதர் நான் சொன்னதைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாய் அல்லவா. என்னைக் காப்பாற்றுடா…! என்கிறார்.

அவரிடம் நெருங்கிப் போகிறேன்…! நடுக்கம் தான் வருகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. திடீரென்று குருநாதர் என்னிடம் “அதைக் கொன்று விடுவேன்…. என்று சொல்லுடா…! என்றார்

கொன்று விடுவேன்…! என்று சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரத்தில் என்னாகிப் போகின்றது…? அந்த உருவம் “பட்…!” என்று விலகி விடுகின்றது… மறைந்து விட்டது…!

1.நீ என்னிடமே பெரிய வேலை பார்க்கிறாய்.
2.உன்னிடம் என்னென்னமோ சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றாய்.
3.அந்த ஆவியைப் போகச் செய்து விட்டாய்…!
4.வேஷ்டியெல்லாம் கழித்துவிட்டாய் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன்.
5.நீ திருடன்டா……!” என்கிறார் குருநாதர்.

சாமி…! நீங்கள் தானே அதைச் சொல்லச் சொன்னீர்கள்…! போகச் சொல்லிச் சொன்னதே நீங்கள் தானே என்று சொன்னேன். அதோடு விட்டாரா குருநாதர்…!

நீ இந்த வேஷ்டிய எடுத்துக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் இறங்கிக் கழுவித் துவைத்துச் சுத்தப்படுத்திவிட்டு வாடா என்கிறார்..! எப்படி இருக்கும்..,?

ஏனென்றால் அந்தக் கிணறு உடை கிணறு. அதாவது காலை வைத்து இறங்கி உள்ளே போகப் படிக்கட்டுகள் இருக்கின்றது. திருடன்டா நீ…! போய் அலசி விட்டு வாடா போடா…! என்று சொல்கிறார் குருநாதர்.

இப்படி ஒவ்வொரு உணர்வுகளிலேயும் எனக்கு நேரடி அனுபவமாகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார்.

1.நீ பார்த்த நினைவால் அங்கே காற்றில் மறைந்து இருக்கக்கூடிய உணர்வுகள் அது எப்படிக் குவிகின்றது…?
2.அந்த நினைப்புக்கு அணைவாக அது எப்படி டி.வி.யில் சுவிட்சைப் போட்டவுடனே படம் தெரிவது போல் காற்றிலே பரவி இருக்கின்ற அலைகளைக் குவித்து உனக்குப் படமாக எப்படிக் காண்பிக்கின்றது…?
3.அங்கே கிணற்றுக்குள் விழுந்ததைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். இந்த உணர்வின் எண்ணம் வரப்போகும் போது அந்த அலைகள் படர்ந்திருப்பதை எப்படி குவிக்கின்றது…?
4.அது உன் உடலுக்குள் வந்தவுடனே மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் அந்த எண்ணங்கள் உனக்குள் அது இயக்கச் சக்தியாக எப்படி மாறுகின்றது…? என்று
5.இப்படி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்.

முதன் முதலில் என்னை ஒன்றுமே இல்லாமல் இப்படிப் பயப்படச் சொல்லி அந்த உணர்வுகளை எண்ணச் சொல்லி அது நடந்த நிகழ்ச்சிகளை இதே மாதிரிப் பார்த்து விட்டு வரச் சொல்கின்றார் குருநாதர்.

நாம் புலனறிவால் (கண் காது) நுகரும்போது சுவாசிக்கும் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகிறது…? உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது…? என்று காட்டினார்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா…!

Leave a Reply