ஞான வழியில் நாம் சென்று கொண்டிருந்தாலும்… சந்தர்ப்பத்தால் வரும் இடர்பாடுகளை “எப்படிக் கையாள வேண்டும்…?”

Spiritual wisdom

ஞான வழியில் நாம் சென்று கொண்டிருந்தாலும்… சந்தர்ப்பத்தால் வரும் இடர்பாடுகளை “எப்படிக் கையாள வேண்டும்…?”

காட்சி:-
ஒருவர் சாதம் உண்ணும் பொழுது அதிலே ஒரு கல் பட்டு உடம்பே சிலிர்க்கின்றது.

விளக்கம்:-
நாம் நல்ல நிலையில் நல்ல உணர்வும் எண்ணங்களும் கொண்டு வாழ்ந்து வந்து ஞானத்தின் வழித்தொடரைப் பெற்றாலும் அறுசுவையான உணவை உட்கொள்ளும் பொழுது அதனுடன் சேர்ந்து வந்த சிறு கல்லைப் போல அருள் வழியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது சில இடர்கள் வரத்தான் செய்யும்.

1.அந்த நிலையில் உணவுடன் வரும் கல்லுக்காக
2.நாம் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பதில்லை.
3.நம்மை எதிர்த்து வரும் அந்த ஏதிர் நிலையான உணர்வுக்கு நம்மையே நாம் அடிமைப்படுத்தாமல்
4.ஞானிகள் காட்டிய மெய் வழியிலேயே நாம் செயல்படுதல் வேண்டும்.

உதாரணமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் பலமான அஸ்திவாரம் வேண்டும். அதே போலத்தான் சுவரை எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அந்தந்த அளவிலே சேர்த்துக் கட்டினால் தான் அந்தச் சுவர் உறுதியாக நிற்கும்.

சுவர் எழுப்பும் பொழுது அதன் கலவையில் போடும் பொருள்களில் அளவு மாறுபட்டால் அந்தச் சுவருக்குப் பலமில்லை.
1.மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்
2.சிமெண்ட் அதிகமானால் வெடிக்கும் தன்மையும்
3.நீர் அதிகமானால் அதன் பக்குவ நிலை செயல்படாத நிலையும்
4.மனிதனால் உருவாக்கப்பட்ட சுவருக்கே அதன் கலவை மாறும் பொழுது அது நிற்பதில்லை.

ஆகவே நம் உடலிலுள்ள உணர்வின் எண்ணங்கள் சீராகவும் சமமாகவும் இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். உடல் நலமாக இருந்தால் அது எண்ணத்தின் “மையக் கோலாகி (வலுவாகி)” ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் வேதனை பேராசை அதிகமான உடல் இச்சைகள் லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலைகளில் அடிமைப்பட்டு வாழும் பொழுது
1.நாம் எடுக்கும் சுவாசமானது “கடினமாகி…!”
2.நம் உடலில் சேரும் (உணர்வின் எண்ணங்கள்) அமிலத் தன்மை கூடியும் குறைந்தும் விடுகின்றது

அதனால் உடலில் உள்ள சுரப்பிகளில் சுரக்கக்கூடிய அமிலங்களில் வித்தியாசமாகி (உப்புக்கள் சர்க்கரை கொழுப்பு) நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அதனால் பல நோய்களுக்கும் ஆளாகி விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளைச் சமப்படுத்தும் நிலைக்குத்தான் உங்களுக்குச் சரியான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உடல் உறுப்புகளுக்குள் பாய்ச்சி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து கொண்டே வந்தால் நம்முடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே ஒன்றி வாழும் தகுதி பெறுகின்றோம்.

“மந்திரம்… தந்திரம்… ஆவி….!” என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படுகின்றது – அதைப் போன்ற பயமான உணர்வுகளிலிருந்து விடுபடுங்கள்…!

Lightning power of rishis

“மந்திரம்… தந்திரம்… ஆவி….!” என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படுகின்றது – அதைப் போன்ற பயமான உணர்வுகளிலிருந்து விடுபடுங்கள்…!

நீங்கள் தவறு செய்யாமலே உங்களை அறியாது எத்தனையோ உணர்வுகள் தூண்டப்படுகின்றது. எத்தனையோ நிகழ்ச்சிகளை ரோட்டிலே பார்க்கின்றீர்கள்..! பத்திரிக்கைகளில் படிக்கின்றீர்கள். டி.வி.யில் பார்க்கின்றீர்கள்.

உதாரணமாக டி.வி.யில் பேய்களைப் பற்றியோ அல்லது அதிர்ச்சியூட்டக்கூடிய படங்களையோ காண்பிக்கின்றார்கள் என்றால் குழந்தைகள் அதை ஆர்வமாக வேடிக்கையாகப் பார்க்கும்.

அதிலே திடீரென்று மிகவும் பயமுறுத்தும் காட்சிகளைப் பார்த்துப் பதிவாக்கிக் கொண்ட பின் இரவிலே அந்தப் பயமான உணர்வுகள் இயக்கி மனதைப் பாதிக்கும் நிலை ஆகிவிடும். தூக்கம் வராது.

டி.வி.யில் படம் பார்க்கும் பொழுது “ஆ… ஊ…!” என்று சப்தம் கேட்டாலோ முதலிலே குழந்தை அதைப் பார்த்துச் சிரித்திருக்கும். ஆனால் இரவு வந்துவிட்டாலோ… “பயம் வந்துவிடும்…!”

அப்புறம் காலையில் எழுந்து இந்த உணர்வுடன் பள்ளிக்குச் சென்றாலோ படிப்பிலே மந்தமாகிப் போகும். வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கியது தான் மிச்சமாகிப் போகும்.

பையன் படிப்பில் இப்படி ஆகிவிட்டானே…! என்ன செய்யப் போகிறானோ…? என்று தாய் தந்தையர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதுகள் எல்லாம் விஞ்ஞான அறிவால் வரக்கூடிய விளைவுகள்…!

நான் (ஞானகுரு) சின்னப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கும் பொழுது ஒரு மந்திரவாதி பல வேலைகளைச் செய்து என் கையை முறித்துவிடுவேன்… காலை முறித்துவிடுவேன்…! என்று மிரட்டிக் கொண்டிருந்தான்.

பல பயங்கரமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். ஒரு மண்டை ஓட்டைத் தூக்கிக் கொண்டு நான் இருக்கும் இடத்தில் வைத்தான்.

இந்தச் சாமியார் (ஞானகுரு) எங்கே இருந்து வந்து இங்கே வந்து வேலை செய்கிறான். அவனை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் அங்கே இருக்கும் மக்களுக்கு எல்லாம் நல்லாகிப் போகும் என்று வெறும் விபூதியைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். காசும் வாங்கவில்லை.
1.ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சொல்லுங்கள்.
4.”உங்களுக்கு எல்லாம் நல்லதாகும்…!” என்று இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அங்கிருந்த மந்திரவாதிகளோ மக்களை ஏமாற்றி மந்திரத்தாலே பல இன்னல்களைக் கொடுத்து பின் அதை நிவர்த்தி செய்து அதன் மூலம் காசைச் சம்பாரித்தவர்கள்.

நன் வெறும் விபூதியைக் கொடுத்து மக்களை நல்லதாக்கியதும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இதை ஏற்கனவே குருநாதர் சொல்லி அனுப்பினார்.

உனக்குப் பல இடைஞ்சல்கள் செய்வார்கள்.. நீ மந்திரவாதிகளின் செயலை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாகும் என்று தான் அங்கே சின்னப்பநாயக்கன் பாளையத்திற்கு என்னை அனுப்பினார்.

மந்திரவாதிகளைப் பற்றியும் மந்திர உணர்வுகள் எப்படி இயக்கி வேலை செய்கிறது…? என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு வருடம் அங்கே இருந்தேன்.

1.ஒவ்வொரு சிரமங்களும் எப்படி வருகின்றது…?
2.மனிதன் எந்த நிலையில் கஷ்டப்படுகின்றான்…?
3.மனித உணர்வினால் விளைந்த உணர்வுகள் (ஏவல் செய்வினை) எப்படி இயக்குகின்றது…?
4.அந்த உயிரான்மாக்கள் (ஆவி) எப்படி அந்த வேலைகளைச் செய்கிறது…?
5.மந்திர தந்திரங்களிலிருந்து எப்படி நாம் விடுபடுவது…? என்று
6.இதையெல்லாம் அங்கே வைத்துக் காண்பித்தார் குருநாதர்.

கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதையெல்லாம் உங்களிடம் இலேசாகச் சொல்கிறேன். உங்களை அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

ஆகவே எப்பொழுதெல்லாம் கஷ்டம் என்று வருகிறதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலுக்குள் சேர்த்து அதை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இதை ஒரு பழக்கமாகப் பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
1.காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு பத்து நிமிடம்
2.இரவில் படுக்கப் போகும் முன் ஒரு பத்து நிமிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று
4.அவசியம் ஒரு பத்து நிமிடமாவது செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக அமையும். மன பலம் மன நலம் கிடைக்கும். உங்களுக்கு யார் இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்களுக்கும் “தக்க பதில் கிடைக்கும்…!”

செய்து பாருங்கள்…! உங்களை நீங்கள் நம்புங்கள்…!

உபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்

Astral divine powers

உபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்  

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் யாம் (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காகக்
1.கஷ்டப்படுபவர்களைப் பார்க்கச் சொன்னார்.
2.பல கஷ்டங்களை எனக்கு உண்டாக்கினார்.

நீ ஒன்றும் செய்யவில்லை. மற்றவருக்கு உதவி தான் செய்கிறாய்…!
1.ஆனால் கஷ்டம் உன்னிடம் எப்படி வருகின்றது..?
2.அது உனக்குள் எப்படிக் கஷ்டத்தை உண்டாக்குகின்றது…?

குருநாதர் சிரமப்படுபவர்களை இரக்கமாகப் பார் என்பார். பார்ப்பேன். அப்பொழுது அவர்கள் கஷ்டம் எல்லாம் எனக்குள் வந்துவிடும். சண்டை போடுபவர்களைப் பார்க்கச் சொல்வார். பார்ப்பேன். இரவுக்கெல்லாம் கெட்ட கனவாக வரும்.

திடீரென்று பல ஆக்ஸிடென்ட்டுகளைப் பார்க்கச் சொல்வார். ஒருவருக்கொருவர் அடிபட்டு இறந்திருப்பார்கள். அந்த ஆன்மாக்களை (ஆவி) குருநாதர் காண்பிப்பார்.

ஆற்றிலே விழுந்து தற்கொலையானது…! அடித்துக் கொன்றது…! பயந்து கொண்டு ஓடியது…! இதையெல்லாம் காண்பிக்கின்றார் குருநாதர். இதையெல்லாம் பார்த்த பின்
1.இரவிலே எங்கேயோ என்னை இழுத்துக் கொண்டு போகிற மாதிரி இருக்கின்றது.
2.அடிக்கிற மாதிரி இருக்கின்றது…
3.உதைக்கிற மாதிரி இருக்கின்றது…
4.அப்புறம் எப்படித் தூக்கம் எனக்கு வரும்..!

அப்பொழுது நீ நுகர்ந்த அந்தந்த உணர்வுகள் உன் உடலுக்குள் வந்து என்னென்ன செய்கிறது என்கிற வகையில் எனக்குத் தெரியச் செய்கிறார். பின்… “இதையெல்லாம் எப்படி மாற்றுவது…? என்று அதற்குண்டான உபயாங்களைக் காண்பிக்கின்றார். பல பல சக்திகளையும் கொடுக்கின்றார்.

அடுத்தாற்போல் அன்றைய மந்திரங்களைப் பற்றி அடுத்துச் சொல்கிறார்.
1.மந்திர ஒலிகளை அந்தக் காலங்களில் எப்படி உண்டாக்கினார்கள்…?
2.மந்திரங்களை எப்படி எடுத்து இயக்கினார்கள்…?
3.மந்திர சக்திகளை அரசர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்..?
4.அரசர்களால் செய்யப்பட்ட சில வினைகள் ஏவல் பில்லி சூனியம் இந்த உணர்வுகள் அது எப்படிச் சேர்கிறது…?
5.அதெல்லாம் எதிலிருந்து வருகின்றது…? அந்த உணர்வின் சக்தி எப்படி இருக்கின்றது..?
6.கூடு விட்டுக் கூடு எப்படிப் பாய்ந்தார்கள் என்று பூராவற்றையும் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் அந்தந்த நினைவைக் கொடுத்து என்னைக் குருநாதர் எண்ணச் செய்யும் பொழுது “எல்லாம் குவித்து வருகிறது…! அப்பொழுது என் உடலில் பல நிலைகளைச் செய்கிறது.

குருநாதரிடமிருந்து மிகவும் சிரமப்பட்டுத்தான் அறிந்து கொண்டேன். இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து தான் முழு அனுபவங்களையும் கொடுத்தார் (கஷ்டத்தைக் கொடுத்துத்தான்).

ஆகையினால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் யாம் கொடுக்கும் வாக்கு என்பது சாதாரணமானதல்ல.
1.ஒரு வார்த்தையைச் சொல்கிறோம் என்றால்
2.எத்தனையோ கஷ்டப்பட்டு அதை நல்லதாக விளைய வைத்துத்தான்
3.வாக்காக உங்களிடம் சொல்கிறோம்.
4.சும்மா வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை.

வாக்கு என்பது நல்ல வித்து. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைக்கு நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தவறு யாரும் செய்யவில்லை.

நல்லதை எண்ணிச் செயல்படுகின்றீர்கள். ஆனால் வேதனைப்படுகின்றீர்க்ள். சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களிடம் வந்துவிடுகின்றது.

இதையெல்லாம் நிவர்த்திக்க மக்களுக்கு நீ வழி காட்ட வேண்டும் என்று தான் குருநாதர் கட்டளையிட்டார்.

அதனால் தான் ஓய்வில்லாமல் உபதேசிக்கின்றேன். எது எனக்கு ஓய்வு…?
1.நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்… சந்தோஷமாக இருக்க வேண்டும்…! என்று
2.நான் நினைக்கும் பொழுது தான் எனக்கு ஓய்வு.
3.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
4.எப்படியும் உங்கள் துன்பம் நீங்க வேண்டும்.
5.துன்பங்கள் நீங்கி நீங்கள் விடும் மூச்செல்லாம் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.
6.நல்லதை எண்ணி ஏங்குவோருக்கு அந்த நல்லது நடக்க வேண்டும்.
7.இந்த வகையிலே நான் எண்ணிக் கொண்டேயிருக்கின்றேன்.
8.இந்தச் சொத்தைப் பெறுகின்றேன். வேறு ஒன்றும் இல்லை.

அதே போல் நீங்களும் உங்களுக்குள் நல்லதாக வேண்டும் என்று…. “கொஞ்சம் மனது வைத்து…. எண்ணினீர்கள்…..!” என்றால் நன்றாக இருக்கும்.