வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தியானம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சி முறைகள்

Soul serene cleaning

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தியானம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சி முறைகள் 

சாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராவண்ணம் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

உதாரணமாக
1.இரும்புக்குள் இருக்கும் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல்
2.அதைப் புடம் போட்டுப் பஸ்பமாக்கி
3.அதை ஆற்றல்மிக்க ஆக்கச் சக்தியாக மாற்றிப் பயன்படுத்துகின்றோம்.

அதைப் போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகள் உருவாக்காதபடி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த மாமகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி விஷமான சக்திகளைப் புடமிட்டு அந்த உணர்வின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். நமக்கு முன்னாடி இருக்கின்றது.

அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்தவுடனே புடம் போட்டு எடுத்தது போன்றே உங்களையும் உங்கள் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்துகின்றது.

ஒரு ஆன்டென்னாவைச் சரியான முறையில் வைத்தபின் வெகு தொலைவில் இருந்து வரும் டி.வி. அலைகளையும் மற்ற அதைப் போன்ற அலைகளையும் அது கவர்ந்து தெளிவாக உணர்த்துகின்றது. அதைப் போல
1.உங்கள் நினைவாற்றல் அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கும் போதெல்லாம்
2.அந்த அருள் சக்தியை நீங்கள் கவர்ந்து
3.அந்த நன்மையின் சக்தியை என்றும் நிலைத்திருக்கச் செய்ய முடியும்.

நாம் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசி விட்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஒரு நிமிடம் தியானியுங்கள்.
2.பின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்களை மூடி ஒரு நிமிடம் தியானியுங்கள்.
3.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி கவர்ந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.
4.இப்படித் திரும்பத் திரும்பச் செய்தால் இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி.

(1) வெளியில் செல்லும் பொழுது:-
நீங்கள் வீட்டை விட்டுச் செல்லும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து விட்டு வெளியிலே செல்லுங்கள். எந்த காரியத்திற்காக யாரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறீர்களோ அவரை எண்ணி
1.எங்கள் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்.
2.எங்கள் சொல் இனிமை பெற வேண்டும்.
3.எங்களைப் பார்க்கும் போது அவர் நல்லது செய்து தரக்கூடிய எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
4.இப்படி எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

(2) கடைக்கு வியாபாரத்திற்குச் செல்லும் பொழுது:-
நீங்கள் கடையில் வியாபாரத்திற்குப் போகும் முன் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் உடல்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கடைக்குப் போனபின் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்கள் கடையில் உள்ள சரக்குகள் அனைத்தையும் பார்த்து இதைப் பயன்படுத்துவோர் அனைவரும்
1.மகரிஷியின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு வியாபாரத்தைத் தொடங்குங்கள்.

(3) தொழிலுக்குச் செல்லும் பொழுது:-
தொழிலுக்குப் போனாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டுப் புறப்படுங்கள். அங்கே அமர்ந்து தொழில் செய்யப் போகும் போது ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை எண்ணி
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.என் பார்வையால் அவர்கள் மன பலமும் உடல் நலமும் பெற வேண்டும்.
3.தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாக எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும்.
5.எங்கள் செயல் அவர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே மாதிரி எங்கள் பார்வை மேலதிகாரிக்கு நல்லதாக இருக்க வேண்டும். எங்கள் செயல் அவர் போற்றும் நிலைக்கு வர வேண்டும். எங்கள் சொல் அவருக்கு இனிமையாக இருக்க வேண்டும். அவர்கள் எங்களைப் பார்க்கும் போது நல்ல செயல்கள் செய்து தரும் நிலைகள் வர வேண்டும் என்று எண்ணுங்கள்.

நாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இதை மாதிரி எண்ணிவிட்டுத் தொழில் செய்யுங்கள்.

(4) நோயாளிகளைப் பார்க்கும் பொழுது:-
நோயாளிகளைப் பார்த்தால் உடனே அடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய்கள் நீங்கும். நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று இந்த வாக்கைச் சொல்லுங்கள்.

(5) குழந்தைகளுக்கு:-
உங்கள் குழந்தைகளைப் பார்க்கப்படும் போது அவர்கள் மேல் வெறுப்பு வந்தால் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற வேண்டும். அவர்கள் பெறுவார்கள்.
1.அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்.
2.கல்வியில் அவர்கள் உயர்வார்கள்.
3.எங்கள் பார்வை அவர்களை உயர்த்த வேண்டும் என்று இப்படி உங்கள் குழந்தைகளை எண்ணிச் செயல்படுத்துங்கள்.

அந்த உணர்வுடன் குழந்தைகளுடன் பேச முற்படுங்கள். நல்லதாகும்.

(6) சமையல் செய்யும்போது… பரிமாறும்போது… சாப்பிடும் பொழுது:-
பெண்கள் சமையல் செய்யும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் தொடங்குங்கள். நாங்கள் சமைக்கும் இந்த ஆகாரத்தைச் சாப்பிடும் அனைவரும் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் சமையல் செய்யுங்கள்.

ஆகாரம் பரிமாறும் போதும் நாங்கள் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவருக்கும் மன வளம் உடல் நலம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டுப் பரிமாறுங்கள்.

சாப்பிடும் போதும் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.நாங்கள் சாப்பிடும் ஆகாரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
2.அது எங்கள் உடலில் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்ற எண்ணத்துடன் சாப்பிடுங்கள்.

(7) இரவிலே படுக்கும்போது:-
இரவிலே படுக்கப்போகும் போது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். எதையெல்லாம் நல்லவைகளாக நிறைவேற வேண்டும் என்று எண்ணினீர்களோ
1.உங்கள் உணர்வின் ஓட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சப்தரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இருக்க வேண்டும். அந்த உணர்வின் சக்தி எங்களுக்குள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடனே படுங்கள். ஆனந்தமான தூக்கமாக அமையும். காலையில் எழும் பொழுதும் அந்த ஆனந்தம் இருக்கும்.

(8) காலையில் எழும் பொழுது:-
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்கள் பேச்சைக் கேட்போர் உணர்வுகளில் மெய் ஒளியாகப் படர வேண்டும். நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி எழுந்து கொள்ளுங்கள்.

(9) வர வேண்டிய பாக்கிப் பணம் திரும்ப வருவதற்கு:-
உங்களிடம் வாங்கிச் சென்றவர் ஒருவர் பாக்கி பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
1.பின் அவர்கள் வியாபாரம் செழித்து வர வேண்டும்.
2.அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்.
3.எங்கள் பணத்தைச் சீக்கிரம் திருப்பித் தரும் சக்தி அவர் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு பணம் சீக்கிரமே வந்து சேரும். வராது என்று எண்ணியிருந்தால் கூட வந்து சேரும். அனுபவத்தில் பார்க்கலாம்.

(10) ஒருவர் மேல் உள்ள வெறுப்பை அகற்ற:-
ஒருவரை நாம் எண்ணும் போது கோபமோ வெறுப்போ வந்தால் அந்த வெறுப்பான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

யார் உங்கள் மேல் வெறுப்பு வருகின்றதோ எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். வெறுப்பு மாறி ஒன்றி வாழும் இயக்கமாக மாறும்.

(11) நோயை நீக்குவதற்கு:-
உங்கள் உடலிலே எத்தகைய நோய் இருந்தாலும் அந்த நோயைப் பற்றிய வேதனைகளை சஞ்சலங்களை மறந்திடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டும். எங்கள் நோய்கள் அனைத்தும் பறந்திட வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.அது எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.உடலுக்குள் அங்கங்கே கண்ணின் நினைவைச் செலுத்தி
3.நோய் நீங்க வேண்டும். நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அது நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது. நாங்கள் நலம் பெற்று வருகின்றோம்.
1.மகரிஷிகளின் அருள்வட்டத்தில் எங்கள் எண்ணங்கள் சுழல்கின்றது.
2.எங்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெறுவோம்…! மகிழ்ச்சி பெறுவோம்…! என்ற எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

(12) வெளியிலிருந்து மீண்டும் வீட்டுக்குள் வரும் பொழுது
நாம் வெளியிலே எங்கே சுற்றி விட்டுக்கு வரும் பொழுது எத்தனையோ எண்ணங்கள் கொண்டு தான் வருகின்றோம். வீட்டிற்கு வந்த பின் இதைப் போல ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீட்டிலே படர வேண்டும். எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
1.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் சக்திகள் படர வேண்டும்.
2.வீட்டுக்கு வருகின்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு
3.அதற்கப்புறம் மற்ற விஷயங்களைப் பேசுங்கள்.

இதைப் போல அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே சுழலச் செய்யுங்கள்.

நீங்கள் எண்ணிக் கொடுப்பதை எல்லாவற்றையுமே உங்கள் உயிர் படைக்கின்றது… இயக்குகின்றது… உடலாக்குகின்றது…. விளைய வைக்கின்றது…! அந்த உணர்வைத்தான் தனக்குள் (உயிராத்மாவாக) இணைத்துக் கொள்கின்றது.

1.இந்த உடலை விட்டு நாம் எப்போது போவோம்…?
2.அது எந்த நேரம் என்று அது எப்படி…? என்று தெரியாது.

ஆனால் நாம் இந்த உடலில் இருக்கும் போதே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வந்தால் எந்த நேரத்தில் இந்த. உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தாலும் அந்த நினைவுடன் நாம் அங்கே செல்கின்றோம். இது நிச்சயம்…!

ஒளிச் சரீரமாக நம்மை அங்கே நிலைக்கச் செய்கின்றது. இந்த நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி இதைப் போல நீங்கள் எண்ணிச் செயல்படுத்துங்கள்.

Leave a Reply