நமக்குள் தினசரி நடக்கும் போராட்டம்

Gita upadesam Kannan

நமக்குள் தினசரி நடக்கும் போராட்டம்

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் அது மகாபாரதப் போர் என்று வியாசகர் காட்டியுள்ளார்.

சூரியனிலிருந்து வரக்கூடியது
1.வெப்பம்
2.காந்தம்
3.விஷம்.
அது மூன்று என்றாலும் உதாரணமாக புலியை ஒரு மாடு சந்திக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். புலியின் உணர்வை அது எடுத்துக் கொண்டால் அதன் வலிமையை எடுத்துக் கொள்கின்றது.

கண்ணன் (கண்கள்) அந்த உணர்வைப் பார்த்து வலிமையைக் கொடுத்து அர்ச்சுனனுக்கு தாக்கும் உணர்ச்சிகளைக் கொடுக்கின்றது. அதுதான் “அர்ச்சுனன்…!”

அந்த வலிமையை எடுத்துக்கொண்டால் அதனுடைய இயக்க உணர்ச்சிகள் – “நகுலன்…” இந்த மூன்றுக்குள் (வெப்பம் காந்தம் விஷம்) இது வருகின்றது நகுலன்.

இந்த உணர்ச்சிகள் ஒரு உடலுக்குள் சேர்த்து அதன் உணர்வை உருவாக்க இந்த உணர்ச்சியின் அமைப்புகள் அமைகின்றது, அதுதான் “சகாதேவன்…!”

இந்தப் புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் அது உருவாக்கி விட்டால் பீமன். புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் சேர்ந்து விட்டால் பீமன்.

அப்பொழுது அந்த வலிமை கொண்டு அந்த உடலில் மற்றவைகளை அடக்கும் சக்தி பெறுகின்றது. மிக வலிமையானது “பீமன்…”

வலிமையாகிவிட்டதென்றால் அதன் வழி இயக்கச் சக்தியாக அடுத்த உடலை உருவாக்கி அதன் வழி சாந்தமாக இயக்கும் தன்மை வருகின்றது “தர்மன்…!”

உடலிலே உருவாக்கிய உணர்வுகள் எல்லாம் கௌரவர்கள். எந்தெந்த உணர்வுகள் கொண்டு அந்த உடல்களை வளர்த்துக்கொண்டதோ அந்த உடலைக் காக்கும் அந்த கௌரவப் பிரச்சினைகள் வரும், அந்த உணர்வின் தன்மை தான் காக்கின்றது.

கௌரவர்கள் நூறு பேர். நூறு விதமான குணங்கள் ஒவ்வொரு நிலைகளிலேயும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒற்றுமையுடன் அவர்கள் இருப்பார்கள்.

எல்லாம் சேர்ந்து உடலுக்குள் ஒற்றுமையாக இருக்கும்போது பஞ்ச பாண்டவர்கள் நாம் நல்லவைகளை நுகர்ந்து நல்லவைகளைச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையில் செயல்படுகின்றோம்.

அப்பொழுது இந்த நூறு பேரும் உடலுக்குள் இருக்கும் அந்த நூறு விதமான உணர்வுகள் அந்த நல்ல உணர்வுகளை உள்ளே விடாது தடுக்கின்றது. நம் உடலிலே வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரித்தால் அது கௌரவர்கள்.

1.எப்படியும் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
2.உள்ளுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கௌரவர்கள்
3.அவர்களுடைய அழுத்தத்தால் விடுவதில்லை.

காரணம் நமது கண் கண்ணனாக இருப்பினும் நமது உயிர் கண்ணனின் சகோதரி திரௌபதை.

இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஆசையில் நல்லதைச் செய்ய வேண்டும் என்று இந்த உடலில் உள்ள ஆறாவது அறிவால் மாற்றி அமைக்க வேண்டும் என்று எண்ணினாலும்
1.உடலுக்குள் முன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது கௌரவர்கள்.
2.உடலில் நோயாக இருந்தால் அதுவும் கௌரவர்கள்.
3.ஆசை கொண்டு பொருளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதுவும் கௌரவர்கள் தான்.

நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். “இப்படிப் பண்ணுகிறானே..” என்ற கோபம் வந்து உயிரிலே படுகின்றது, குரு.

இந்தச் க்ஷேத்திரத்தில் அவன் செய்த தவறின் உணர்வு போர் முறையாக நடக்கின்றது. அதனின் உணர்வு கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ இந்தக் கண் என்ன செய்கின்றது..? வழி… காட்டுகின்றது.

அவனிடம் போய் “நீ எப்படி இப்படிச் செய்யலாம்..?” என்று இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று கேட்கும் நிலைகளுக்கு வழி காட்டுகின்றது. அப்பொழுது இங்கே போர் நடக்கின்றது.

ஆனால் நடந்தாலும் நாம் இதில் தப்புவதற்கு வழி இல்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்தவுடன் உடலுக்குள் போய் என்ன செய்கின்றது…? அவன் செய்த வேதனைப்படும் உணர்வுகள் அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்கி விடுகின்றான்.

நம் இரத்தத்தில் போனவுடன் என்ன செய்கின்றது? நகுலன். அவனின் வேகமான உணர்ச்சிகள் என்ன செய்கின்றது…? ஒரு மிளகாயை வாயில் போட்டவுடன் “ஆ..!” என்று நம்மை அலறச் செய்கின்றது. நகுலன், விரிந்து உள்ளுக்குள் போகின்றது.

சகாதேவன் அதிலுள்ள காந்தம் இரண்டற இணைக்கின்றது. இணைத்தவுடன் என்ன செய்கின்றது…? அதன் பின் கோபமான உணர்வு வரும்போது பீமன். நமக்குக் கோபம் வந்துவிடுகின்றது. பயங்கரமான கோபம் வருகின்றது.

அப்படிப் பீமனாகும் பொழுது அடிக்கடி கோபம் வந்து வலுவாகும் போது நமக்குள் இரத்தக் கொதிப்பாகின்றது.
1.எப்படி ஒரு வேப்பமரத்திற்குப் பக்கம் ரோஜாப்பூவின் மணத்தை விடுவதில்லையோ
2.இதைப்போல நல்ல சுவாசத்தையும் நல்ல உணர்வுகளையும் உள்ளே விடாதபடி
3.இதைத் தடுத்து விடுகின்றது எதிர் நிலை…!

ஆனால் திரௌபதை (உயிர்) என்ன செய்கின்றது?

பஞ்ச பாண்டவர்கள் அதாவது ஐந்து புலனறிவை இயக்கி நீங்கள் நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணிணாலும் உள்ளுக்குள் (உடலுக்குள்) உள்ள கௌரவர்கள் இதை அவமதிக்கின்றனர். திரௌபதை (உயிர்) அப்பொழுது படாத துயர்படுகின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தோம் என்றால் “எனக்கு ஒரே மனக் கலக்கமாக இருக்கின்றது.. அப்படி இருக்கின்றது.. என் வீட்டுக்காரர் இப்படிச் செய்கின்றார்…! என் பையன் இப்படிச் செய்கின்றான்..!” என்று இந்தப் போர் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

நல்லவைகளைச் செயல்படுத்துவதற்காக உடலுக்குள் எப்படிப் போர் முறைகள் நடக்கிறது…? என்பதனைத் தெளிவாக்கத்தான் மகாபாரதப் போரைக் காட்டினார் வியாசகர்.

நம் சாஸ்திரங்களில் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதில் தவறு எதுவும் இல்லை. நாம் புரிந்து கொண்டோமா…?

கிரேதா… திரேதா… துவாபரகா.. கலி… கல்கி யுகங்கள்

Kalki Aavtar 2017

கிரேதா… திரேதா… துவாபரகா.. கலி… கல்கி யுகங்கள் 

தாவர இனங்கள் அனைத்தும் கிரேதா யுகம் தான். ஒரு உயிரணு தோன்றினாலும் அது எதை எதை எல்லாம் கவர்ந்ததோ அதுவும் கிரேதா யுகம் தான். எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிர் மனிதனாக வளர்த்தாலும் அதுவும் “கிரேதா யுகம் தான்…!” (கிரேதா என்றால் கிரகிக்கும் நிலை)

உயிரால் வளர்க்கப்பட்டு இந்த உடல் உருவான பின் தாவர இனச் சத்தின் மணங்கள் உயிரிலே பட்டு எண்ணங்களாக இயக்கப்படும் பொழுது அது “திரேதா யுகம்…!”

திரேதா யுகத்தில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோமோ
1.அந்தச் சத்தின் தன்மை கொண்டு உடல் இயக்கப்படுகின்றது.
2.ஆகவே நம் உடல் திரேதா யுகம். (திரேதா என்றால் ஒரு உடலுக்குள் எண்ணங்கள் இயக்கும் நிலை)

இந்த உடல் வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்த்த உணர்வுகளை நுகரப்படும் போது இது நல்லது இது தீமை என்ற உணர்ச்சிகளை நமக்குள் தோற்றுவிப்பது நமது உயிரே.

தீமை என்ற உணர்வை உணர்ந்தபின்
1.நம் உடலில் உள்ள அணுக்கள் இந்தத் தீமையில் இருந்து தப்புவதற்கு
2.அதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
3.அது “துவாபரகா யுகம்…!” (உடலுக்குள் தன்னைக் காக்கும் உணர்ச்சிகள் தோன்றுவது துவாபரகா)

அதைத் துவாரகா யுகம் என்றும் சொல்வார்கள். இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகள் கண்களாகத் தோன்றுகின்றது. அதன் வழி இந்த உடலைக் காக்கும் சக்தி வருகின்றது.

இருப்பினும் இந்த உடலுக்குள் நாம் சுவாசிக்கும் சாந்தம் ஞானம் விவேகம் என்ற உணர்வுகள் கொண்டு நாம் இயக்கி வந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளையும் நுகர நேர்கின்றது.

அத்தகைய குணங்கள் நம் உடலுக்குள் சென்று நன்மை செய்யும் குணங்களை அந்த உணர்வுகளை அழித்து விடுகின்றது.
1.அதாவது தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.
2.இது தான் கலி யுகம் என்பது.

இப்படி ஒவ்வொரு உயிரும் பல உடல்களைப் பெற்று ஒன்றை ஒன்று வென்றிடும் நிலையில் எதன் வலு பெற்றதோ அதன் உணர்வின் தன்மை பெற்ற பின் கலி யுகம் தான்.

ஒரு வேதனைப்படும் மனிதனைப் பார்த்து அவன் வேதனையை நாம் நீக்க விரும்பினாலும் அந்த வேதனை என்ற விஷத் தன்மைகள் நம் இரத்தத்தில் கலக்கப்பட்டு நாம் சிந்தித்துச் செயல்படும் நல்ல அணுக்களை அது வீழ்ச்சியடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் நம் உடல் உறுப்புகளில் வேதனை என்ற விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது
1.உடல் நலிகின்றது.
2.உணர்வுகள் நலிகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலும் குறைகின்றது.
4.இதைப்போன்று ஏற்படும் போதும் கலி என்ற நிலைகள் அடைகின்றது.

இப்படி உருமாற்றமாகும் விஷத்தின் வலிமையிலிருந்து வென்று இந்தக் கலியை கடந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானது. அது கல்கி யுகம்.

தாய் கருவில் விஷத்தை அடக்கும் நுண்ணிய அணுவின் தன்மையைப் பெற்ற இந்த அகஸ்தியன் தனது வளர்ச்சியில் வலு கொண்ட உணர்வுகள் கொண்டு தீமைகளை அகற்றினான்.

திருமணமான பின் கணவனும் மனைவியும் இருபாலரும் சேர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றார்கள்.

நமது துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து தாவர இயலாக மாற்றினாலும் அதனின் வளர்ச்சியில் உயிர் இனங்களைத் தோற்றுவித்து உடலை வளர்க்க இச்சைப்பட்டு எத்தனையோ கோடி உணர்வுகளைக் கடந்து மனிதனாக உருவாக்கியது.

அப்படி மனிதனான நிலையில் அகஸ்தியன் அதே துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வரும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றினான்.

ஒரு பாம்பு தன் உடலில் உள்ள விஷத்தை மற்றோர் உடல் மேல் பாய்ச்சி அந்த உடலைச் செயலற்றதாக்கி அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மையான பின் அதை இரையாக எடுத்து விழுங்குகின்றது.

விஷம் கொண்ட பாம்பினங்கள் அனைத்தும் இவ்வாறு தான் தன் உணவினை எடுக்கின்றது. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு விதமான விஷத் தன்மை உண்டு.

இதை எல்லாவற்றையும் கலந்து பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மைகளைப் பெருக்கப்படும் போது எல்லா விஷத்தையும் ஒன்றாக்கி நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனான பின் பற்பலவிதமான விஷத்தை அகற்றி அந்த ஒளியென்ற உணர்வினை ஒவ்வொரு அறிவாகத் தெளிந்து கொண்டவன் அகஸ்தியன்.

1.எந்தத் துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் விண்ணிலிருந்து சக்திகள் வருகின்றதோ
2.அதையே அகஸ்தியன் நேரடியாக உணவாக உட்கொண்டு
3.அதனின்று வரும் நஞ்சினை அடக்கித் தனக்குள் அந்த அகத்தின் தன்மையைச் சீர்படுத்தி
4.தன் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய அனைத்து அணுக்களையும்
5.உயிரைப் போன்றே உணர்வின் அறிவின் ஒளியாக உருவாக்கினான்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. உடல் மட்டும் தான் கருகுகின்றது.

ஆக அழியாத நிலைகள் கொண்ட அந்த உயிரைப் போன்றே தன் உணர்வின் அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஓர் ஒளியின் தன்மையாக மாற்றி ஒளியான உடல் பெற்றவன் அகஸ்தியன்.

மனிதனாக இருக்கும் பொழுது கணவனும் மனைவியும் சேர்ந்து தன் இனக் குழந்தைகளை உருவாக்குகின்றனர்

அதைப் போல அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக்கப்படும் போது உயிரைப் போன்றே ஒளியின் உணர்வை உருவாக்கும் திறன் பெறுகின்றனர்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும் என்ற உணர்வுகள் இயக்கி இணை பிரியாத நிலைகளில் வாழ்ந்ததனால் இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

காரணம் துருவத்தின் வழியாகப் பூமி நுகரும் உணர்வுகளை அதிலுள்ள நஞ்சை நீக்கிய அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த விஷத்தையே ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டனர்.
1.அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரமும்
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலமும்.
3.அது தான் கல்கி யுகம்.

மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவருமே அவர்களைப் போன்றே ஒளியின் தன்மை பெற்று அந்தக் கல்கி யுகத்திற்குச் செல்ல வேண்டும்.