தலையிலிருந்து கால் வரை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் தியானத்தில் கொடுக்க வேண்டிய சக்தி

real-meditation

தலையிலிருந்து கால் வரை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் தியானத்தில் கொடுக்க வேண்டிய சக்தி 

1. துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க வேண்டிய முறை:-
எங்கள் அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் அவர் துருவனான நிலையும் துருவ நட்சத்திரமான அந்த பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவு அனைத்தையும் இப்போது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அதனின்று வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்துங்கள். உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.
1.உங்கள் கண்ணின் நினைவினை உயிரில் இணைக்கும் போது
2.அந்த உயிரான காந்தத்தின் வழி துருவ நட்சத்திரத்துடன் இணைக்கப்படும் போது
3.அதனின்று வரும் பேரருளைக் கவர்கின்றது.

இப்போது உங்கள் உயிரில் அது ஈர்க்கப்படும் போது துருவ நட்சத்திரத்திலிருந்து பேரருளும் அந்த பேரொளியும் உங்கள் உயிர் ஈர்க்கப்படும் போது
1.புருவ மத்தியிலே வெளிச்சம் வரும்.
2.சிலருக்கு அரிப்பு ஏற்படும்.
3.சிலருக்கு இந்த வலி ஏற்படும்.
4.சிலருக்குக் காட்சியாகவும் தெரியும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதைச் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலமும் உங்களுக்குத் தெரியும். அதாவது இன்று பிரபஞ்சத்தில் மற்ற நட்சத்திரத்தின் கூட்டத்தில் தனித்து வாழும் இந்த உணர்வுகளை நீங்கள் பார்க்கலாம்.

2. நம் உடலிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்த வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்த நாளங்களிலே செலுத்துங்கள்.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை
1.நாம் பார்க்க நேர்கின்றது நுகர நேர்கின்றது.
2.இந்த உணர்வுகள் அனைத்தும் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
3.அப்பொழுது தீய உணர்வுகள் நம் இரத்தமாக மாறுகின்றது.
4.இந்த உணர்வின் இயக்கங்கள் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிப் பின் அணுக்களாக மாறுகின்றது.

இப்படி அணுக்களாக மாறிவிட்டால் நம் இரத்தத்தில் கோபம் அதிகமானால் இரத்தக் கொதிப்பும் வேதனை அதிகமானால் அதற்குத்தக்க வாத நோயோ சரவாங்கி நோயோ போன்ற வாதங்கள் 48ம் உருவாகின்றது.

ஆகவே அந்தந்த அணுக்களுக்குத் தக்க நம் உடலில் இரத்தங்கள் உருவாகி இந்த இரத்தங்கள் உடல் முழுவதும் படர்ந்து நமது உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இதனின்று ஆகாரம் செல்கின்றது.

தீய உணர்வின் அணுக்கள் இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் பரவப்படும் போது உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் தீய அணுக்கள் உருவாகி அந்தந்த உறுப்புகளில் நோயாகின்றது… வேதனையாகின்றது…!

கடும் நோயான பின் உடலை விட்டு உயிர் பிரியும் தன்மை வருகின்றது.
1.உடலை விட்டுப் உயிர் பிரியும் போது
2.எந்தெந்த உறுப்புகளில் எதனெதன் நிலைகள் பாழானதோ
3.அந்த உறுப்புகள் குறைவான நிலையில் உயிரான்மா வெளியேறும்.

உறுப்புகள் குறையும் பொழுது அதற்குத்தக்க மனிதனல்லாத உறுப்புகள் குறைவாக உள்ள உடலின் (உயிரினங்களின்) ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று விஷம் கொண்ட உடலை அடுத்து உருவாக்கிவிடும்.

ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் நாம் கேட்டு பார்த்து நுகர்ந்து அறிந்து உணர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஈஸ்வரலோகத்தின் (உயிரின்) இயக்கமாகவும் நம் இரத்தத்தில் அணுத்தன்மை கருவாகும் இந்திரலோகமாகவும் அடைந்து விடுகின்றது.

ஆகவே நம் உடல் உறுப்புகளைச் சீராக்க வேண்டுமென்றால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வினை உமிழ் நீராக மாற்றி நல்ல இரத்தமாக உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி இந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அணுக்களை நம் இரத்தத்தில் உருவாக்கும் நிலைக்கே இந்தப் பயிற்சி.

3. நுரையீரலுக்குச் செய்ய வேண்டிய தியானம்:-
சலிப்பு சஞ்சலம் வெறுப்பு என்ற உணர்வுகள் நுரையீரலில் அணுக்களாக ஆனபின் ஆஸ்துமா போன்ற நோய்களும் வேதனை என்ற கடுமையான நிலைகளை எடுத்தால் T.B. என்ற நோய்களும் வருகின்றது.

இதைப் போன்ற அணுக்களை மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலில் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்.

4. இருதயத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீய உணர்வுகள் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்குள் செல்லப்படும் போது அங்கே அது எதிர்நிலையாகி இரத்தங்கள் உறையும் தன்மையாகின்றது.

அதே சமயத்தில் விஷத்தன்மை படர்ந்த பின் அந்த இருதயத்தை இயக்கும் அந்த நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து மூச்சுத் திணறலும் நெஞ்சு வலியும் ஏற்படுகின்றது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தில் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் நினைவு அனைத்தும் இந்த இருதயத்திற்குள் செலுத்தி அந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

5. கல்லீரலுக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
அசுத்த இரத்தங்கள் கல்லீரலுக்குள் சென்றால் அது வீக்கம் ஆகும், அதிலேயும் மூச்சுத் திணறலும் வரும். சில நேரங்களில் வலியும் எரிச்சலும் வரும்.

கல்லீரலை அதை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினை கல்லீரலுக்குள் செலுத்துங்கள்.

6. கணையங்களைச் சீராக இயக்கத் தியானிக்கும் முறை:-
சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற நிலைகளை மாற்றியமைக்கும் திறன் கொண்ட கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பலவீனமானால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து உருவாகும். இரத்தக் கொதிப்பும் உருவாகும்.

அந்த மூன்றையும் சீராக்க கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கணையங்களுக்குள் நினைவினைச் செலுத்துங்கள்.

7. கிட்னிக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீமையான உணர்வுகள் இரத்ததில் அதிகமாகி அந்த கிட்னிக்கு வந்தால் அது சீராக இயங்கும் தன்மை மாறி மயக்கடைந்து இரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மைகள் இழந்துவிடுகின்றது.

அதனால் அசுத்தமான இரத்தங்கள் உடல் முழுவதும் சென்று உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்கக் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

8. சிறு குடல் பெரும் குடலுக்குத் தியானிக்கும் முறை:-
உங்கள் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரரளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்தி அந்த அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

9. ஆற்றல்மிக்க சக்திகளை உடலுக்குள் நேரடியாகச் செலுத்தும் பயிற்சி:-
இன்று மருத்துவ ரீதியில் ஊசி மூலமாக மருந்தினை இரத்தத்தில் செலுத்தும் பொழுது மருந்து உடனடியாக உடல் முழுவதும் பரவி உடலில் நிவாரணம் ஏற்படுகின்றது. உடல் வலியோ வேதனையோ உடனே குறைகின்றது.

அதே போலத்தான் உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதன் உணர்வைக் கவர்ந்து கண்ணின் நினைவு கொண்டு உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்தப் பயிற்சி.

நேரடியாக அந்தந்த உறுப்புகளுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலுள்ள அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டித் தீமைகளை நீக்கும் அணுக்களாக ஒளியாக மாற்றுகின்றது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டால் உங்கள் எலும்புகளில் உள்ள ஊன்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அந்த வித்தின் தன்மை வளர்ந்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நேரடியாகக் கவர்ந்து
1.நோய்களை நீக்கும் தன்மையும்
2.சிந்திக்கும் ஆற்றலும் மனவலிமை பெறும் தன்மையும்
3.அருளைப் பெருக்கும் தன்மையும்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் சக்தியும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

10. கண்களில் உள்ள கண்மணிகளைத் தூய்மையாக்கும் பயிற்சி:-
வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை கண்மணி வழியாக அதிகமாகக் கவர்ந்தால் வேதனையைக் கவரும் சக்தியாக மாறிக் கண் பார்வை குறைந்து விடுகின்றது. அல்லது பார்வையே கூட இழந்து விடுகின்றது.

இதை மாற்றக் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதிலுள்ள விஷத் தன்மைகள் அனைத்தும் அகன்று அருள் ஞான சக்தியைக் கவரும் கண்மணிகளாக மாற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

பேரொளியான உணர்வுகளையும் பேரருளான நிலைகளையும் பெறும் அருள் கண்மணிகளாக வளரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

11. நரம்புகளை வலுவாக்கும் பயிற்சி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானித்து கண்ணின் நினைவினை அதிலே செலுத்துங்கள்.

இந்தப் பயிற்சியைச் சீராகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நினைவாற்றல் தீமைகளை நீக்கும். அருளைப் பெருக்கும். வாழ்வில் நலம் பெறச் செய்யும். ஆனந்தப்படச் செய்யும்.

12. எலும்புக்குள் உருவாகும் ஊனை மாற்றத் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவினை எலும்பு மண்டலத்தில் செலுத்தி எங்கள் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் எதையெல்லாம் கண்மணி வழியாகப் பார்க்கின்றோமோ அது நம் எலும்புக்குள் இருக்கும் அந்த ஊனுக்குள் வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அந்த வித்தின் உணர்வு உயிரின் துடிப்பால் அந்த உணர்வின் இயக்கங்களாகும் பொழுது அது அணுவாகி அணுவின் மலமாக நம் எலும்புக்குள் உருவாகின்றது.
1.எதனெதன் உணர்வுகள் அது உருவாகின்றதோ
2.அதனதன் உணர்வுகளைக் கவரும் சக்தி பெறுகின்றது.

இவை அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் சக்தியாக மாற்ற உங்கள் கண்ணின் நினைவினை எலும்புக்குள் ஊனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களில் செலுத்துங்கள்.

இவ்வாறு எண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் ஊனுக்குள் பதிவாகின்றது. எலும்புக்குள் ஏற்கனவே ஊனை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்யும் போது அருள் சக்தியைக் கவரும் ஊனாக உருவாக்க முடியும்.

13. தசைகளுக்கும் தோலுக்கும் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

14. குடும்பத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
இவ்வாறு நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தது போன்று எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

திருமணமானவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவர்/மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடக்கும் ஆற்றலும் சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிப் பேரருள் பெற்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாழ்ந்து வளர்ந்து தொழில் வளம் பெருகி செல்வம் பெருகி செல்வாக்கு பெருகி அருள் ஞானம் பெருகி அருள் குடும்பமாக வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

15. தவமிருக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் விவசாய நிலம் முழுவதும் படர்ந்து எங்கள் விவசாய நிலத்தில் பயிரிடும் பயிரினங்கள் அனைத்தும் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து உலகில் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகன்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் மனதார எண்ணி உங்கள் நினைவினை மேகங்களில் படரச் செய்து மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய உங்கள் நினைவாற்றலைப் பாய்ச்சுங்கள்.

இவ்வாறு பாய்ச்சினால் உங்கள் உணர்வு அந்த மேகத்துடன் கூடி மழை நீராகப் பெய்கின்றது. எல்லா நலமும் பெற வேண்டும் என்ற உணர்வு கலந்திருப்பதனால் மழை பெய்தால் தாவர இனங்களில் நல்ல அணுக்கள் உருவாகி அதனுடைய மலம் தாவர இனங்களுக்கு நல்ல உரமாகும்.

வாழும் மக்கள் வேதனை வெறுப்புடன் எண்ணினால் விஷக் கிருமிகளாகித் தாவர இனங்களை அது பாழாக்கி விடும்.

அதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியானப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
1.ஞானிகள் வாழ்ந்த அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்.
2.மெய் ஞானம் பெறுவீர்கள்.
3.மெய் உலகை அடைவீர்கள்.

எமது அருளாசிகள்.

Leave a Reply