நம் வாழ்க்கையில் வரும் அலைகள்… சுழல்கள்… சூறாவளிகளிலிருந்து மீளும் அனுபவம்

Tsunami - Polaris

நம் வாழ்க்கையில் வரும் அலைகள்… சுழல்கள்… சூறாவளிகளிலிருந்து மீளும் அனுபவம் 

உதாரணமாகக் கடலுக்குள் படகில் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

எத்தனையோ சிற்றலைகள் வருகின்றது. அப்புறம் பெரிய அலைகள் வந்து மோதுகின்றது. அதில் துடுப்பை நாம் ஒழுங்காகத் தள்ளவில்லை என்றால் என்ன செய்யும்…? படகு கவிழ்ந்துவிடும்.

ஒரு பெரிய அலை அலை வருகின்றது என்றால் அதற்குத் தகுந்த மாதிரித் திருப்பி வைக்க வேண்டும். திருப்பாமல் அப்படியே போய்க் கொண்டிருந்தால் படகை ஒரு பிரட்டுப் பிரட்டி விடும்.

அந்த அலைகள் மோதினால் எதிர்த்து இப்படி நிற்க வேண்டும். அப்பொழுது வேகமாகத் தள்ளி கொண்டு போகும். அப்போது அது தள்ளி விட்டுப் போனவுடனே வேகமாக முன்னாடி போவோம். ஆனால்
1.அந்த அலைகள் பிந்தியவுடனே திருப்பி என்ன செய்யும்…?
2.எவ்வளவு தூரம் தள்ளி விட்டதோ திருப்பி அதே அலை இழுக்கும்.
3.இந்த அலைகள் மீண்டும் இழுத்து ஓடுவதற்கு முன்னாடித் திருப்பி இங்கே கொண்டு போக வேண்டும்.

இந்த அனுபவத்தை நேரடியாகப் பெறச் செய்வதற்குக் குருநாதர் என்னைத் (ஞானகுரு) திருச்செந்தூரில் கடலில் இறங்கச் சொன்னார்.

எனக்குச் சாதாரணமான நீச்சல் தான் தெரியும். ஆனால் திருச்செந்தூரில் கடலில் போய் மிதக்க வைத்தார் குருநாதர்

அவர் சொன்னபடி ஆசனத்தைப் போட்டேன். படுத்துத் தலையணை மாதிரிக் கைகளை வைடா…! என்றார் குருநாதர். வைத்தேன்.

இங்கே இப்படிப் படுடா…! என்றார் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் கடலில் “மிதக்க ஆரம்பித்து விட்டேன்…!”

மிதந்து கொண்டு இருக்கும் போதே அலைகள் வருகின்றது. இரண்டு பெரிய அலை வந்தது. அவ்வளவு தான்…! என்னை நடுக் கடலுக்கே கொண்டு போய்விட்டது.

நடுக்கடலில் போனவுடனே அவர் எடுக்கச் சொன்ன ஜெபம் எப்படி இருக்கும்…!

இங்கே படுடா என்றார். படுத்தேன். அது உள்ளே கொண்டு விட்டு போய்விட்டது. நடுக்கடலுக்குச் சென்றவுடன் அந்த இடத்தில் என் ஆசைகள் எல்லாம் எங்கெங்கோ போகின்றது…!

அப்போது எத்தனையோ எண்ணிக் கொண்டு இருக்கின்றேன். திடீரென்று முதலை வந்து விழுங்கி விடுமோ…? அல்லது பெரிய மீன் வந்து விழுங்கி விடுமோ…! என்ற இந்த எண்ணம் தான் எனக்கு வருகின்றது.

அந்த கடலின் அலைகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் பொழுது இப்படிப்பட்ட எண்ணம் தான் தோன்றுகின்றது.

இப்படி இருந்தால் நீ கரை சேர்வது எங்கே என்று கேட்கிறார் குருநாதர்…?

அவர் சொல்லிக் கொடுத்த ஆசனத்தை விட்டு விட்டோம் என்றால் என்னால் மிதக்க முடியவில்லை. தண்ணீர் என்னை இழுக்கின்றது.

காலைக் கழற்றியவுடனே “லபக்…” என்று கடலுக்கடியில் இழுக்கின்றது. இழுத்தவுடனே இந்த அலைகள் மோதி உள்ளே அப்படியே அமுக்குகின்றது. எங்கே தப்பிக்கிறது…?

தண்ணீரைக் குடித்து விட்டேன். புரை ஓடியது. அப்பறம் என்ன செய்வது…! மறுபடியும் இந்த ஆசனத்தைப் போட்டுப் படுத்து புரையை நிவர்த்தி செய்தேன்.

அந்தக் குறுகிய நேரத்தில்
1.நீ எண்ணிய எண்ணங்கள் என்ன?
2.நீ எதைப் பெற வேண்டும்?
2.நீ இங்கே கடலுக்குள் வந்துவிட்டாய் என்றால் மறுபடியும் மீண்டு கரை சேர வேண்டுமல்லவா…!
4.அதற்குண்டான முயற்சியை எடுத்தயா…? என்கிறார்.

இதெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையாக எனக்கு அனுபவத்தில் கொடுத்தது.

கடல் அலைகள் இப்படி இருக்கிறது…! அப்படி இருக்கின்றது….! என்று கரையில் உட்கார்ந்து கொண்டு சும்மா வாயில் பேசுவது அல்ல. அனுபவமாகப் பெற்றதைத்தான் உங்களிடத்தில் சொல்கிறேன்.

உள்ளே இழுத்துக் கொண்டு போனவுடனே
1.என்ன தான் சக்தி கொடுத்தாலும் உன் நினைவு எப்படி வருகின்றது?
2.அப்போது உடல் பலவீனமாகும் போது உன்னை எப்படிக் கீழே இழுக்கின்றது?
3.கீழே இழுத்தவுடனே அந்தப் பெரு மூச்சாகித் தண்ணீர் உள்ளுக்குள் எப்படிப் போகின்றது?
4.எப்படிப் புரையேறுகின்றது…? அப்போது நீ எங்கே தப்பிப்பது…? என்று கேட்கிறார் குருநாதர்.

எவ்வளவு பெரிய திறமையான நீச்சல்காரரும் திடீரென்று கொஞ்சம் பயமாகி “ஆ…!” என்றால் போதும். குபுக்… என்று தண்ணீர் உள்ளுக்குள் போய்விடும். அப்புறம் நீச்சல் எல்லாம் “தத்தக்கா தான்…!”

அந்த மாதிரி இடைவெளியில் விட்டு என்னை அப்படியே தவிக்க வைக்கின்றார் குருநாதர்.

1.கடலுக்குள் சிற்றலைகள் எப்படி வருகின்றது?
2.பெரும் அலைகள் எப்படிப் போகின்றது?
3.உள்ளுக்குள் தூக்கி முங்கியவுடனே அலைகள் எப்படி மேலே போகின்றது.
4.இது போனவுடனே உள்ளுக்குள் (கடலுக்கடியில்) ஒன்று எப்படி இழுத்துக் கொண்டு போகின்றது.

நான் மிதந்து கொண்டு இருக்கும் போது உள்ளுக்குள் கூடி ஒன்று “கிர்…!” என்று போகின்றது. என்னையும் இழுத்துக் கொண்டு போகிறது.

எழுந்து பார்த்தால் வெகு தூரத்திற்கு அப்பால் போயிருக்கின்றேன். எங்கே தப்பிப்பது? அப்பறம் ஆசனத்தைச் சரி செய்து படுத்துப் பார்க்கின்றேன்.

இப்படி எல்லாம் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

இதெல்லாம் உங்களிடம் சொன்னால் லேசாகத் தெரியும். சாமி இவ்வளவு கஷ்டப்பட்டார்…! நாம் என்றைக்குக் கஷ்டப்பட்டு இதை எப்படி வாங்கப் போகின்றோம்…? என்று தான் நினைப்பு வரும்.

இது எதற்காகச் சொல்கிறோம் என்றால் இப்படித்தான் சிற்றலைகள்… பெரும் அலைகள்… சுழல்கள்… என்று நம் வாழ்க்கையில் மாறி மாறித் திடீரென்று வருகின்றது.

நீங்கள் எல்லோரும் நன்றாக இருப்பீர்கள். ஒரு ஒன்றுக்கும் ஆகாதவன் வருகின்றான். வந்தவுடன் “நீ பெரிய… என்னை என்னய்யா செய்து விடுவாய்…?” என்று நம்மை மிரட்டுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த அலை தாக்கியவுடனே நாம் என்ன செய்வோம்…? இவனைத் தொலைத்துக்கட்டி விடவேண்டும் என்ற எண்ணம் தான் வரும்.

இவன் செய்யும் குசும்பைப் பார்…! என்னை மிரட்டுவதற்கு இவன் யார்…? என்ற இந்த அகம் என்ற அலைகளில் நாம் சிக்கி இவனை அழித்தே விட வேண்டும் என்று நினைப்பு தான் வரும்.

அதற்குண்டான முயற்சி எல்லாம் எடுத்துக் கொண்டிருப்போம். அவனை அழித்திடும் எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்து விடும். நாம் சம்பாரித்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்து விடும்.

அப்போது இது என்ன செய்கின்றது?

செல்வத்தைச் சம்பாரித்து வளர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இப்படிச் சண்டையாகிப் பிரச்னை ஆன பின் கோர்ட்டு கேசு இதற்கெல்லாம் போய்ப் பணமெல்லாம் கரையத் தொடங்கும்.

இவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் அதற்கு வேண்டிய உதவி (SUPPORT) செய்வார்கள். அடுத்துப் பணத்தைக் கொடுத்து விட்டு “என்றைக்குத்தான் இதிலிருந்து விடுபட போகின்றோமோ தெரியவில்லை…!” என்று சொல்வார்கள்.

ஆகவே இந்த அலைகளில் சிக்கினால் பணமெல்லாம் காணமால் போய்விடும்.

அதே மாதிரி குடும்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பார்கள். வீட்டில் பையன் ஏதாவது சொன்னபடி கேட்கவில்லை… தவறான வழிகளில் போகிறான் என்றால்… தாய் தகப்பனார் “இவனை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்” என்று எண்ணுவார்கள்.

அவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது என்று மனதில் பதிய வைத்து விடுவார்கள். எங்கேயோ போடா…! உனக்கு ஒரு காசும் கிடையாது என்பார்கள். இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள்.

பையன் மேல் பாசம் அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பு அலை வந்து விட்டது என்றால் இதில் இப்படி மூழ்கி விடுகின்றோம்.

இவனை எண்ணி அந்த வெறுப்பிலே மூழ்கும் போதே மற்ற பிள்ளைகளிடமும் இதைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருப்போம்.

“டேய்…! அவனை மாதிரி எல்லாம் யாரும் ஆகி விடாதீர்கள்…! என்று இந்த அலை அங்கே மற்ற பிள்ளைகளிடமும் போய் மோதுகின்றது.

என்னடா இது…? எப்போது பார்த்தாலும் என் அப்பா அவனை வைத்துக் கொண்டு நம்மையும் சும்மா ஜாடையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றார் என்று அங்கேயும் அது வருகின்றது.

அந்த வெறுப்பு அலையில் சிக்கி விட்டால் அதிலே மூழ்கி அதனின் இயக்கமாக இயக்கத் தொடங்குகின்றது.

எப்படி எப்படியோ சம்பாதிக்கின்றோம்…! பிள்ளைகள் எல்லாம் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமே. அவர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்களாக வர வேண்டுமே…! எல்லோரும் என்னைக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்..! என்ற இந்த எண்ணத்தில் இந்த அலையில் போய் சிக்கி கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டு இருப்பார்கள்.

என்ன சம்பாரித்து என்ன செய்வது…? என் பிள்ளைகளை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…! இப்படித்தான் எண்ணுவார்கள்.

வருகின்றவர்களிடம் எல்லாம் இந்தக் கதையைச் சொல்வார்கள். இப்படி இந்த அலைகளில் தான் மூழ்கி கொண்டு இருப்பார்களே தவிர மீட்க வழியே இருக்காது.

நிறையக் குடும்பங்களில் பாருங்கள். இந்த மாதிரித்தான் இருக்கும்.

அதே மாதிரி பெண் குழந்தைகளைப் பாசமாக வளர்த்துக் கொண்டு இருக்கும் போது திருமணத்திற்காக மாப்பிள்ளை வந்து வந்து போவார்கள்.

ஐயோ…! மாப்பிள்ளை வந்து விட்டு வந்து விட்டுப் போய்க் கொண்டு இருக்கின்றார்களே. என் பிள்ளையின் எதிர்காலம் இப்படி ஆகி விட்டதே, அது எதிர் காலம் என்ன ஆகுமோ… வயதாகி விட்டதே..! என்று இந்த பாச அலையில் சிக்கிக் கொள்வார்கள்

அந்தப் பிள்ளையை நினைக்கும் போதெல்லாம் கவலை… வேதனை. இந்த அலையில் சிக்கிக் கொண்ட பின் குடும்பத் தொழிலும் போய்விடுகின்றது. யாரிடம் சொன்னாலும் சோகம் தான்.

இந்த ஜோசியக்காரன்… அந்த நாடிக்காரன்… அங்கே… இங்கே… என்று போய்… “ஏதாவது வழி வராதா…!” என்று தான் நாம் சுற்றப் பழகியிருக்கின்றோமே தவிர மகரிஷிகள் காட்டிய வழியை எண்ணிப் பார்க்கவே இல்லை.

ஏனென்றால் இந்த அலைகள் அடித்துக் கொண்டு இருக்கும் போது இங்கே இப்படி இருக்கின்றதே… அந்தப் பிள்ளை இப்படி இருக்கின்றதே… என்ற இந்தச் சங்கடம் வரப்போகும் போது சொந்தத்திற்குள்ளேயும் பகைமை வரும்.

என்னப்பா…! நீ வருகிற மாப்பிள்ளை எல்லாம் இந்த மாதிரி சொல்லிச் கொண்டு இருக்கின்றாய் என்று அவர்கள் சொல்வார்கள். இந்த அலைகள் என்ன செய்யும்?

எல்லா இடத்திலயும் மோதி நம்மை அந்தச் சுழலில் கொண்டு போய்ச் சிக்க வைத்து விடும்.
1.ஒன்றுக்கொன்று மோதினால் என்ன செய்யும்?
2.சுழலில் சிக்கித் தவித்து கொண்டு இருக்க வேண்டியது தான்
3.பிறகு எங்கிருந்து தப்பிப்பது…!
4.சொந்தக்காரர்கள் மேல் வெறுப்பு வந்துவிடுகின்றது.

அவர்கள் என்ன சொல்வார்கள்? ஏதோ நல்லதைச் செய்யலாம் என்று போனால் நம்மிடம் சீறிச் சீறி விழுகின்றான் ஐயா. “அறிவு கெட்டதனமாகச் செய்து கொண்டு இருக்கின்றான்…!” என்று சொல்வார்கள்.

இந்த அலைகள் இப்படி வந்து உங்களைச் சுற்றி கொண்டு இருக்கும். உங்கள் குடும்பத்தில் பார்க்கலாம். ஆனால் நாம் யாரும் தவறே செய்யவில்லை.

இதைப் போன்ற அலைகளில் சிக்கி
1.அந்தக் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை.
2.நம்மையும் நம் நல்ல குணத்தையும் காப்பாற்ற முடியவில்லை.
3.கஷ்டப்பட்டுக் சம்பாதித்த சொத்தையும் காப்பாற்ற முடியவில்லை.
4.எல்லோரிடமும் நல்ல நிலையில் பழகினோம் இதையும் காப்பாற்ற முடியவில்லை.
5.இந்த சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்போம்.

இந்த மாதிரி அலைகளில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

என் பிள்ளை அது எப்படியும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஓங்கி இந்த எண்ணத்தைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து மன பலத்தைக் கொண்டு வர வேண்டும்.

மகரிஷிகள் உண்ர்வின் வலு கொண்டு நமக்குள் அந்த அருள் ஞான வித்தை வளர்த்து
1.குழந்தையைப் பார்த்து எப்போதும் நீ நன்றாக இருப்பாய் என்று சொல்லி
2.அந்த மன வலுவைப் பெற்று விட்டோம் என்றால் அந்த அலையில் நாம் சிக்க மாட்டோம்.

பெண்ணைப் பார்க்க வருகின்றவர்கள் என்ன செய்வார்கள்…? பார்த்தவுடனே பிடித்துக் கொள்ளும்.

இதை அப்படியே அனுபவமாக திருச்செந்தூர் கடலில் என்னை வழி நடத்தி கடலுக்குள் வைத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

கடலில் பெரிய அலைகள் வரப்போகும் போது ஒவ்வொரு சமயத்திலும் முங்கி அடிக்கும் போது மூக்கில் தண்ணீர் ஏறிவிடும். சில நேரங்களில் படுத்துக் கொண்டு இருக்கும் போது வாயில் தண்ணீர் ஏறிவிடும்.

இப்படிச் சிக்கப்போகும் போது நாம் மறுபடி தப்பித்துப் போவோமா…! என்ற இந்த எண்ணங்கள் தான் வருகிறது.

அந்த நேரத்தில் இதிலிருந்து நீ மீள வேண்டும் என்று எண்ணத்தை “நீ எப்போது கூட்டினாய்…?” என்று மறுபடியும் வினா எழுப்புகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு நிமிடத்திலும் உள்ளே இழுத்துக் கொண்டே போகிறது. கலைத்துப் போய்விடுகின்றேன். மீண்டும் முயற்சி செய்து நீச்சலடித்து வெளியில் வர வேண்டும் என்றாலும் அது இழுத்துக் கொண்டு மறுபடியும் உள்ளுக்குள் போகின்றது.

மனிதன் வாழ்க்கையில் பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை அன்பு அலை கோப அலை எல்லாம் எப்படி மோதுகின்றது..? சுவாசித்தவுடனே நம்மை எப்படியெல்லாம் திசை திருப்புகின்றது..? என்று அலைகள் வரிசையில் இது தெள்ளத் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் போதும்.

உங்களுக்குத் துருவ நட்சத்திரம் என்ற துடுப்பைக் கொடுக்கின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் அலைகளை எல்லாம் பிளந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக இணைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு அதைத் தான் காட்டினார்…!

Leave a Reply