சுதந்திரம் என்பது எது…? நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

Seetha Kalyanam

சுதந்திரம் என்பது எது…? நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

 

நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

எதற்காகப் போராடிப் போராடிச் சுதந்திரம் பெற வேண்டும் என்று எண்ணினோமோ நாம் எண்ணிய சுதந்திரம் யாருக்குமே கிடைக்கவில்லை.

1.இன்று கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி…
2.அரசி்யலில் முன்னணியில் இருந்தாலும் சரி…
3.அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களாக இருந்தாலும் சரி…
4.நிம்மதியாக இருப்பவர்கள் யாரும் இல்லை…!

உலகம் முழுவதற்கும் அரசியலில் வாழ்க்கை நடத்துவோர் அனைவரும் அவர்கள் நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழ்கின்றார்கள். அவருக்குச் சுதந்திரம் என்ற நிலைகள் இல்லை.

வெளியே வர வேண்டும் என்றால் அவர்களும் அஞ்சுகின்றார்கள். அவர்களுக்கு என்று தனிப் பாதுகாப்புடன் தான் வருகின்றார்கள்.

அதே போல் இன்று நாமும் வெளியே செல்ல வேண்டும் என்றால் பஸ்ஸில் சென்றாலும் சரி… ட்ரெயினில் சென்றாலும் சரி… அல்லது ரோட்டில் நடந்து சென்றாலும் கூடச் சரி… நமக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை.

எவன் பறிப்பானோ…! எவன் அழிப்பானோ…! நம்மை எவன் கொல்வானோ என்ற உணர்வுகள் தான் அது வருகின்றது. சுதந்திரம் என்ற நிலையில் யாருக்கும் வரவில்லை.
1.அரசியலிலும் செல்வத்திலும் அவர்கள் ஓங்கி வளர்ந்திருந்தாலும்
2.இந்த உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை.
3.ஆனால் சுதந்திர வாழ்க்கை வர வேண்டும் என்றால்
4.”காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”

எத்தகைய தீமையும் அவர் தனக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே…!” என்ற உணர்வைத் தன் உடலுக்குள் ஊட்டிக் கொண்டார். அதையே சகோதரத்தத்துவமாக அவருக்குள் வளர்த்துக் கொண்டார்.

இந்தியாவில் மதக் கலவரங்களும் இனக் கலவரங்களும் ஏற்பட்டு மக்கள் மடிவதை
1.அசுர சக்திகள் மக்களை மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை
2.”அசுர சக்தி…” என்றே அவர் எண்ணத்திற்குள் வரவில்லை
3.அனைவரும் ஒன்றென்ற நிலைகளை அவர் அறிந்துணர்ந்தார்
4.அதைப் போன்ற சாந்த நிலைகளே நம்மை வாழ வைக்கும் என்றார்
5.அப்போது தான் இந்த உடலுக்குள் (நமக்கு) சுதந்திரம் கிடைக்கின்றது என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்.

இன்று எடுத்துக் கொண்டால் மனிதன் அழகாக இருப்பான். செல்வமும் இருக்கும். செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரம் இல்லை.

அம்மம்மா…! நான் எல்லோரையும் போல சாப்பிட முடியவில்லையே… படுக்க முடியவில்லையே… தூங்க முடியவில்லை…! என்று
1.தூக்கமின்மையால் அவனுக்குச் சுதந்திரமாகத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை.
2.செல்வம் இருக்கின்றது… சுதந்திர வாழ்க்கை வாழ முடியவில்லை.
3.ஆகவே சுதந்திரம் எது…?

ஒரு நண்பன் “நல்ல உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…” என்று எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவர்கள் வளர வளர அந்த வளர்ச்சி மிகவும் உயர்ந்ததாக நமக்குள்ளும் வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கின்றானே பாவி…!” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமது அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அதே சமயம் அந்தப் பகைமை உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க நம் உடலுக்குள்ளே எதிரியாக வந்து அது நல்ல செயல்களை அழித்துக் கொண்டேயுள்ளது. அப்போது நாம் சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

நல்ல குணங்களைச் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தன் அருகிலே இருக்கக்கூடியவர்கள்… தன் சார்புடையவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். நாம் பார்க்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த அரவணைப்பு இருக்க வேண்டும்.

அதற்குப் பெயர் தான் “கல்யாணராமா”

அதாவது நம்முடைய எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழப்படும் போது தான் நமக்குள் மகிழ்ச்சியான எண்ணங்கள் மலர்கின்றது. அப்பொழுது கல்யாணராமன் ஆகின்றோம்.

கல்யாணராமன் என்றால் எப்படித் திருமணமானால் நாம் மகிழ்ச்சி பெறுகின்றோமோ இதைப்போல எண்ணங்கள் ஒன்று சேர்த்திடும் போது நமக்குள் அந்த மகிழ்ச்சி பொங்குகின்றது.
1.பகைமை அற்ற நிலையாக இருக்கின்றது.
2.மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் அந்த ஆனந்தத்தை நமக்குள் ஊட்டுகின்றது.
3.இதைக் காந்திஜி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். அவர் மடியவில்லை. அவர் உடல் தான் மடிந்தது.

அவருக்குள் விளைய வைத்த அரும் பெரும் சக்தி உலகில் பரவி உள்ளது. அவருடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் உறவாடிய உணர்வுகள் கொண்ட அந்த மக்கள் மத்தியிலும் பதிவாகி உள்ளது.

அவர் உடலில் விளைய வைத்த அந்த உயர்ந்த ஞான வித்தை நாம் வளர்த்துக் கொண்டால் அது நமக்குள் பெரும் சக்தியாக மாறும்.

நாம் சுதந்திரமாக வாழ முடியும்…!

Leave a Reply