“கோப உணர்வை” வளர்த்துக் கொண்டால் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

“கோப உணர்வை” வளர்த்துக் கொண்டால் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

 

1.கோபமான உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து

2.அந்த உணர்வின் ஞானமாக அதனின் உணர்ச்சிகள் நமக்குள் செயல்படும் பொழுது

3.கோபமான உணர்வின் அணுக்கள் பெருக்கமாகின்றது.

4.கோபத்தின் அணுக்கள் பெருக்கமானபின் அதனின் ஞானத்தைக் கொண்டு

5.அதையே உணவாக உட்கொள்ளும் ஞானத்தைப் பெருக்குகின்றது.

தன் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கோப உணர்ச்சிகள் வருகின்றது. அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்…!

அதே கோப உணர்ச்சியைத் தூண்டச் செய்து

1.பையனைத் திட்டச் சொல்லும்.

2.நண்பனை வெறுக்கச் சொல்லும்.

3.வியாபாரம் செய்து கொண்டிருந்தோம் என்றால் அதை மறக்கச் செய்யும்.

4.பொருள்களைக் கோபத்தால் வீசி எறியச் செய்யும்.

அந்த உணர்ச்சிகள் உணர்வான பின் அந்தச் சூட்சம உணர்வை எடுத்து அந்த அணுக்கள் விளைந்து இந்தக் கணக்குகள் நமக்குள் கூடினால் அந்த வினைக்கு நாயகனாக “இரத்தக் கொதிப்பாக” உருவாகின்றது.

இரத்தக் கொதிப்பான பின் எல்லோரையும் நாம் வெறுக்கும் நிலையாகி நம் உடலுக்குள்

1.நல்ல குணங்களை வெறுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலற்ற நிலைகள் வரும் பொழுது

2.நம் உடலின் அங்கங்கள் குறுக்கப்படும்.

3.நரம்பு சம்பந்தப்பட்ட (வாத) நோய்கள் வரும்

4.அந்த நிலையான பின் நம்மால் உடலால் நடந்து செல்ல முடியாது.

முடியவில்லை என்றால் ஒருவரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்போம். எதிர்பார்த்தவுடன் வரவில்லை என்றால் அவன் மீது சீறிப் பாயும் நிலைகள் வரும்.

“நம்மால் முடியவில்லை…” என்று அவர் சிரமப்பட்டுக் கொண்டு நமக்காக வந்தாலும்

1.நினைத்த மாத்திரத்தில் வரவில்லை என்றால்

2.வெறி கொண்ட நாயைப் போலத் தாக்கிப் பேசும் உணர்வுகள் தான் வருகின்றது.

நம்மால் முடியவில்லை. ஆனால் கோபத்தின் நிலை வரும். அதுவும் முடியவில்லை என்றால் “அழுகை” வரும்.

முந்தைய வாழ்க்கையும் இன்றைய நிலைகளும் முடியவில்லை என்ற நிலைகள் சேர்ந்து வெகு நேரம் ஆகிவிட்டால் கடைசியில் தேம்பித் தேம்பி அழுகும் நிலை ஆகின்றது.

இப்படி இரத்தக்கொதிப்பாகச் சுருங்கிவிட்டால் நண்பன் என்ற நிலைகள் பழகிய உணர்வு பட்டபின் நண்பனைப் பார்க்கும் பொழுது – என் நிலை இப்படி ஆகிவிட்டது… சொல்லால் பேச முடியவில்லை என்றால்…, “அழுகையால் காட்டும் ஞானம்” வருகின்றது.

கோபம் கோபம் என்று அந்தக் காரமான உணர்வுகளைச் சுவாசித்து கோப உணர்வுகளை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் அந்தக் கணக்கின் பிரகாரம் வினைக்கு நாயகனாக முடிவு இப்படித்தான் ஆகும்.

இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காகத்தான் பார்க்கும் இடங்களில் எல்லாம் விநாயகரை வைத்து நீ எதை உனக்குள் நாயகனாக்கப் போகிறாய் நீ சிந்தித்துப் பார் என்று கேள்விக் குறி போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

நாம் ஞானிகள் சொன்ன முறைப்படி சிந்திக்கின்றோமா…!

விநாயகரைப் பார்த்து “சலாம்…!” போட்டுவிட்டால் அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்றால் எப்படிக் காப்பாற்றுவான்?

விநாயகரை வணங்காமல் சென்றால் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்றால் என்ன அர்த்தம்?

உயிரால் உருவாக்கப்பட்ட உடல் தான் இது. உயிரும் உடலும் சேர்ந்தது தான் இது. உன்னில் நீ பார்…! உன்னில் நீ காண்…! உன்னை நீ அறிவாய்…!” உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளைதான் இது.

நீ யார்…, இந்தப் பிள்ளை யார்…? ஒவ்வொரு நொடிப் பொழுதும் உனக்குள் உள் நின்று கடவுளாக இயங்கிக் கொண்டிருக்கும் உன் உயிரான ஈசனையும் அவனால் உருவாக்கப்பட்ட உன் உடலை ஆலயமாகவும் நீ மதிக்கவில்லை அறியவில்லை என்றால் அதனால் பல ஏதும் இல்லை என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

நமக்குள் இருக்கும் அந்த உயிர் தான் நாம் பார்ப்பதை நுகர்வதை எண்ணுவதை கேட்பதை அனைத்தையும் இயக்கி…, அணுவாக மாற்றி…, உடலாக உருவாக்கிக் கொண்டுள்ளான் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உயிர் வழி நாம் சுவாசித்தால் அந்த ஆற்றல்கள் நம் உடலில் அணுக்களாக விளைந்து வினைக்கு நாயகனாக அது ஆகி இன்றைய செயல் நாளைய சரீரமாக ஒளியின் சரீரம் பெறலாம்.

மிருக உடலிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த மனிதன் அடுத்த நிலையாக ஒளிச் சரீரம் தான் பெறவேண்டும்.

கௌரவத்திற்காகவும் சொத்துக்காகவும் சுகத்திற்காகவும் வாழ்ந்தால் மீண்டும் உடல் பெறும் நிலையாகி மனிதனல்லாத உருவைத்தான் பெற முடியும்.

இந்த உடல் வாழ்க்கையில் வாழும் காலம் என்பது மிகவும் குறுகிய காலமே. அதற்குள் பேரருள் பேரொளி உணர்வுகளைச் சேர்த்து என்றுமே விண்ணிலே வாழும் நிலை பெறலாம்.

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்க வேண்டியது அழியாச் சொத்து தான். நாம் அனுபவிக்கும் அழியக் கூடிய சொத்துக்களால் உயிரான்மாவிற்குப் பலன் இல்லை.

Leave a Reply