நன்மைகளைச் செய்யும் மன வலிமையும் நன்மைகளைப் பெற வேண்டிய பக்குவ முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்

நன்மைகளைச் செய்யும் மன வலிமையையும் நன்மைகளைப் பெற வேண்டிய பக்குவ முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் – உதவி செய்வதும் உதவி பெறுவதும் எப்படி?

 

நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். நாமும் உதவி செய்கிறோம்.

 

உதவி எப்படிச் செய்ய வேண்டும்? உதவி நாம் எப்படிப் பெற வேண்டும்? உதவி செய்த பின்… உதவி செய்தவரும் உதவி பெற்றவரும் எப்படி மகிழ்ச்சி அடைவது? என்பதை நாம் அதிகமாகச் சிந்திப்பதில்லை.

 

அது எந்த வகையான உதவி செய்தாலும் கூட கடைசியில் எத்தனையோ பேர்களுக்கு நான் உதவி செய்தேன் ஆனால்

1.அவர்கள் என்னை மதிக்கவில்லை

2.ஆண்டவன் என்னை ஏனோ சோதிக்கின்றான்

3.நல்லதுக்குக் காலம் இல்லை இந்த உலகம் சரியில்லை

4.நல்லது செய்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று

பின்னாட்களில் இந்தச் சோக கீதம் பாடத் தொடங்கிவிடுவார்கள்.

 

அதே போல் உதவி பெறுபவர்களோ எவ்வளவு உதவிகளைப் பெற்றாலும்

1.”என் தலைவிதி இப்படி…” என்று இருக்கிறது அதற்கு நான் என்ன செய்வது?

2.எனக்கு உதவி செய்தவர்கள் என்னத்தைப் பெரிதாக அப்படிச் செய்துவிட்டார்கள்…!

3.எவ்வளவோ வைத்திருக்கிறார்கள் கேட்டால் ஒன்றும் இல்லை என்கிறார்கள்

4.போகும் பொழுது எல்லாவற்றையும் கொண்டு செல்லப் போகின்றார்களா…? என்று

உதவி செய்தவர்களைப் பழிக்கும் நிலையில் தான் அவர்கள் செயல் இருக்கின்றது.

 

ஆக மொத்தம் சொந்தத்திலே வியாபாரத்திலோ பக்கத்து வீட்டுகளிலோ வேலை பார்க்கும் இடங்களிலிலோ இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டு அதனால் மன நிம்மதி இல்லாத நிலை ஏற்படுகிறது.

 

ஒருவருக்கு உதவி செய்து மற்றவருக்குச் செய்யவில்லை என்றால் பெரிய கௌரவச் சிக்கலாகக் கூட வந்துவிடுகின்றது. உடனே பகைமையாக்கி விடுவார்கள்.

 

பணம் வசதி உடல் நலம் எல்லாம் இருந்தாலும் மனதில் அமைதி இருப்பதில்லை. ஒரே போராட்டமாகத்தான் இருக்கும்.

 

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் ஒரே வழி தான்.

 

ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்திகளை வலுவாகச் சேர்த்துக் கொண்டு உதவி செய்பவர்கள் பணமோ பொருளோ ஒரு சேவையோ எதைச் செய்தாலும்

1.உதவி பெறுபவருக்கு அதைக் கொடுக்கும் பொழுது

2.நம்மைக் காட்டிலும் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்

3.தொழிலில் உயர்ந்த நிலை அடைய வேண்டும்

4.குடும்பத்தில் மிக உயர்ந்த நிலை அடைய வேண்டும்

5.அவர்கள் செயலெல்லாம் உலகமே போற்றும் வண்ணம் வர வேண்டும்

6.உலகுக்கே எடுத்துக்காட்டாக உயர்ந்த ஞானியாக வேண்டும் என்ற எண்ணைத்துடன்

உதவி செய்ய வேண்டும்.

 

இந்த உயர்ந்த உணர்வுகளைச் சொல்லி அழுத்தமாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் தரித்திரங்களையும் குறைகளையும் நோய்களையும் நமக்குள் பதிவாக்கக் கூடாது. அதைப் பற்றி அறிய முற்படக் கூடாது.

 

அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற இந்த உணர்வு தான் நமக்குள் எஞ்சி இருக்க வேண்டும்.

 

இந்த உணர்வு இந்த மணம் இந்த அலைகள் நம் ஆன்மாவில் அதிகரித்துவிட்டால் சாதாரண நிலையில் எவரும் உங்களிடம் கெட்ட எண்ணத்தில் உதவிக்கு வர மாட்டார்கள்.

 

உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்பவர்கள் மட்டும் தான் அணுகி வர முடியும். செய்து பாருங்கள்.

 

உதவி பெறுபவர்கள் அதே மாதிரி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால்

1.என்னை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் இருள்களிலிருந்து விடுபவேண்டும்

2.உதவி செய்தவர் எந்த உயர்ந்த உணர்வுடன் செய்தாரோ அந்த உயர்ந்த நிலை என்னிலே வளர வேண்டும்

3.அவரைப் போன்று நானும் பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உயர்ந்த நிலை பெறவேண்டும்

4.நான் படும் இந்தத் துயரங்களோ துன்பங்களோ நோய்களோ வேதனைகளோ வேறு யாருக்கும் வரக் கூடாது

5.எல்லோரையும் இன்புற்று மகிழ்ந்து வாழச் செய்யும் அந்தப் பேராற்றல்கள் என்னிலே வளர வேண்டும் என்று

6.இப்படி எண்ணினால் எதனால் நமக்குத் தொல்லைகள் வந்தது என்று அறியும் ஞானம் வரும்.

 

மேலும் இதை மாற்றி உயர்ந்த நிலை பெற என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்ற யுக்திகளும் உபாயங்களும் வழி முறைகளும் தோன்றும்.

 

அதன்படி ஒவ்வொன்றாகச் செய்யச் செய்ய மனதில் உற்சாகம் வரும். துன்பங்களும் துயரங்களும் மறையும். நம் நினைவுக்கு அது வராது.

 

தன்னம்பிக்கை பெருகும். அமைதியும் மகிழ்ச்சியும் தன்னாலே பெருகும். தொழில் சீராகும். உடல் நோய்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும்.

 

மகிழ்ச்சி தன்னாலே வரும். அதற்குப் பின் கிடைத்த இந்த அனுபவத்தால் எல்லோருக்கும் உயர்ந்த நிலைகள் கிடைக்கக்கூடிய உதவியாக நாமும் செய்ய முடியும்.

 

மகரிஷிகள் உணர்த்திய நிலையில் அனுபவபூர்வமாகக் கண்டுனர்ந்த உண்மை இது.

Leave a Reply