நாம் பேசும் பேச்சுக்கள் “தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி” என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

Remote action

நாம் பேசும் பேச்சுக்கள் “தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி” என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

எத்தனையோ பேர் குருநாதரோடு (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) பழகினார்கள்.

அவர் ரசமணி செய்து கொடுத்தால் சக்தி கிடைக்கும். அவரிடம் சித்துகள் பெற்றால் நானும் சக்தி பெறுவேன் என்று அந்த ஆசையில்தான் வந்தார்கள்.

அவர் யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்களெல்லாம் சாமி எங்கள் வீட்டில் தான் படுத்திருந்தார். நான் சோறு போட்டேன் என்று சொல்லுவார்கள்.

அதே சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தால் மலம் இருந்து வைத்து விடுவார். துணியைக் கிழித்து வைத்து விடுவார் என்று சொல்லுகிறவர்களும் உண்டு.

நம் வீட்டிற்கு வந்தாலும் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரில் தவிடை எடுத்துப் போட்டு “அனைத்தும் அசிங்கமாயிடுச்சு”என்று சொல்லி அனைத்தையும் கொட்டிவிடச் சொல்வார்.

குடத்தில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் ஊற்றிவிட்டு “வீடு அசிங்கமாக இருக்கு, அதைக் கழுவுகின்றேன்”என்று சொல்வார். வீட்டிற்குள் சின்ன ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு “எவனோ அசிங்கம் பண்ணி வைத்திருக்கான். அதைக் கழுவ வேண்டும்” என்பார்.

எனது (ஞானகுரு) மாமியார் “பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டு இந்த மாதிரி செய்கின்றான்”என்று சொல்லி என்னைத் திட்டும்.

ஒரு நாள் இங்கே வந்து “இந்தச் சொத்து போய்விடும்.., இந்த வீடு போய்விடும், எல்லாமே போய்விடும்..”என்று குருநாதர் சொல்கிறார்.

இது சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது மாமியார் அருளாட ஆரம்பித்து விட்டது. “உடம்பெல்லாம் எரியுது தண்ணீர் ஊற்று” என்று சொல்கிறது.

குருநாதர், “எனக்குத் தெரியாமல் எப்படி இந்தச் சாமி வருகிறது” என்று சொல்கிறார். “எரியுதா…!” “உனக்கு இன்னும் எரியும் பார்” என்கின்றார். அக்கினியாகின்றது.

“அந்தக் கிழவனை போகச் சொல்”என்கிறது அந்த அம்மா.

என்னிடம்“தண்ணீர் எடுத்து அடி”என்றார், அடித்தவுடன் கீழே விழுந்துவிட்டது. அது உடலில் இருந்த பேய் போய்விட்டது.

கழுவிவிட வேண்டும் என்று சொன்ன நிலைகள்
1.இந்த வீட்டில் “அந்த அம்மா பாதங்களால் பதிவானது”
2.என் மனைவியின் சின்னம்மா அது சாபமிட்ட அலைகள் இங்கு இருக்கின்றது
3.அதனால் தான் தண்ணீரை ஊற்றி கழுவச் சொன்னேன் என்றார் குருநாதர்.

துணியைப் போட்டுத் தேய்க்கின்றார் குருநாதர்.

எல்லாம் போய்விட்டது என்றேன் நான்.

உன் கண்களுக்குத் தெரியவில்லை, நீ முட்டாள்டா என்கிறார். “உற்றுப் பார்…” என்றார்.

“பார்க்கும் பொழுது” அந்தம்மா திட்டியது…, பேசியது…, எல்லாம் டேப் ரிக்கார்டரில் பதிவான மாதிரி.., சுழன்று கொண்டு இருக்கின்றது.

இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

நாம் வீட்டில் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று நினைக்கிறோம். அவர்கள் உடலில் எந்தெந்த எண்ணங்களை வேகமாக எண்ணினார்களோ
1.பூமியில் (தரையில்) இருக்கின்ற காந்தம்
2.அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.

சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுகாரர் என்ன செய்வார்?

குடும்பக் கஷ்டங்களை எல்லாம் உங்களிடம் பேசினால் நிம்மதியாக இருக்கின்றது என்று சொல்லி உட்கார்ந்து இரண்டு பேரும் பேசுவார்கள்.

1.எந்த இடத்தில் உட்கார்ந்து பேசினார்களோ
2.அந்த இடத்தில் பதிவாகிவிடும். அந்த அலைகள் எல்லாம் சேர்ந்து விடும்.
3.அடுத்து நிம்மதியாக இருந்த வீட்டிற்குள் சண்டையும் சச்சரவுமாக வந்து விடும்.
4.நாங்கள் என்ன பாவம் செய்தோமோ… தெரியவில்லையே…! என்பார்கள்.

காரணம் இரண்டு பேரும் கலந்து உறவாடிய உணர்வுகள் தரையிலும் அடுத்து அந்த வீட்டின் சுவரிலும் பதிவாகி விடுகின்றது.

சங்கடமாக இருந்தால் “வேறு எங்கும்” போக மாட்டார்கள்,
1.சங்கடமாக எங்கு பேசினார்களோ..,
2.அங்கு போய்த் தான் உட்காருவார்கள்.

இதே மாதிரி நீங்கள் வெளி இடங்களிலும் பார்க்கலாம்.

சாதரணமாக சுற்றுலா மையங்களில் பார்த்தால் சில பேர் ஒதுங்கித் தனியாகப் போவார்கள். உட்காருவதற்கே இடமிருக்காத அந்த இடங்களில், ஒற்றைக் காலில் நிற்பார்கள்.
1.ஊரில் இருக்கின்ற குறைகளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள்.
2.இவை அனைத்தும் அந்த இடங்களில் பதிவாகும்.

அந்த இடத்திற்கு வந்தவுடனே ஊரில் உள்ள குறைகளைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். குறைகளைப் பேசப் பேச, அவர்கள் தொழில் நலிந்துவிடும்.

1.உலகத்தில் எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள்,
2.ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்
3.நம் தொழில் மட்டும் நலிந்து கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்கள்.

நான் குமாரபாளையத்தில் இருக்கும்பொழுது தலையில் உருமா கட்டிக் கொண்டு சுற்றுலா செல்வார்கள். சின்ன ஒற்றைக் கல்லில் ஒரு காலில் நின்றுகொண்டு பேசுவார்கள். அதைப் போய் பார்க்கச் சொல்வார் குருநாதர்.

அங்கு சென்று பார்த்தால் பேசியது எல்லாம் அங்கு பதிவாகி இருக்கும், அதெல்லாம் டேப் செய்யப்பட்டு இருக்கும், அந்த உணர்வலைகளைக் கவனித்தால் அவர்கள் பேசியதெல்லாம் இருக்கும்.

நமது உயிர் எலெக்ட்ரிக். நாம் நுகர்வதை (சுவாசிப்பதை) எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் கரண்டை உற்பத்தி செய்கின்றது. எடுத்துக் கொண்ட உணர்வை அலைகளாக இயக்குகின்றது.

இந்த உண்மையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலைய வைத்தார். மெய்ஞானியின் உணர்வைப் பெறக்கூடிய நிலைகளை உணர்த்தினார்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வை வளர்த்து அதைப் பெற வேண்டுமென்று அவர்கள் பெற்ற உணர்வை வளர்த்தால் நாம் அங்கே போகலாம்.

நமது எல்லை துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வாழும் சப்தரிஷி மண்டலமாகத்தான் இருக்க வேண்டும். அந்த உணர்வை வளர்த்து அங்கே செல்வதுதான் “மனிதனின் கடைசி எல்லை”.

அந்த எல்லையை அடையும் அருள் வாழ்க்கையை நீங்கள் அனைவரும் வாழ குரு அருளும் எமது அருளும் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply