தான் படும் சிரமங்களை நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ சொல்லிவிட்டால் மனதில் உள்ள பாரம் குறையுமா…? 

Burden.jpg

தான் படும் சிரமங்களை நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ சொல்லிவிட்டால் மனதில் உள்ள பாரம் குறையுமா…? 

இப்பொழுது பக்தி மார்க்கங்களில் வழக்கில் நாம் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாலும் ஒருவரிடம் க்ஷேமம் விசாரிக்கப்படும் பொழுது எப்படிக் கேட்கின்றோம்?

நண்பரைப் பார்த்தவுடனே, “குடும்பத்தில் எதுவும் கஷ்டமா..? எதுவும் பிரச்னையா…! ஒரு வாரமாக நீங்கள் வரவில்லையே…, ஏன்?” என்று கேட்பார்.

அதை ஏன் கேட்கின்றீர்கள்…? பையன் இப்படிப் பேசுகின்றான்… நான் அதை அப்படி நினைத்தேன்…, கடைசியில் வேறு மாதிரி ஆகிப் போய்விட்டது. மனதுக்கு ரொம்பவும் வேதனையாகப் போய்விட்டது.

அதனால் எனக்குக் கை கால் குடைச்சலாகிவிட்டது, மனதிலும் வலி.., உடலிலும் வலி.., என்று நண்பரிடத்தில் இப்படிச் சொல்வார். இதையெல்லாம்

1.நான் யாரிடம் சொல்லி இந்த மூட்டையை இறக்கி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
2.நல்ல வேளை நீ வந்தாய்.
3.உன்னிடம் சொல்லிவிட்டேன்.
4.இப்பொழுது எனக்கு மனது கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றது

நண்பர் என்ற நிலையில் அவரும் இவர் கொடுத்த மூட்டையை வாங்கிக் கொள்கின்றார்.

பின் அவர் கேட்பார். “உனக்குக் கூட இப்படி வந்துவிட்டதா…? நீ எத்தனை பேருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாய்…! உனக்குமா இப்படி…,” என்பார்.

கஷ்டங்களை மூட்டையாக இறக்கி வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் வேதனைப்படும் நிலையாக “ஒருவர் சுமையை ஒருவர் தாங்கும் நிலையாகத்தான்” இன்று வாழ்கின்றோம்.

ஆனால் கஷ்டங்களைக் கேட்ட பின் “உனக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று எண்ணினால் நாமும் அதுவாகிவிடுகின்றோம்.

கந்த புராணத்தில் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் “கந்தா.., கடம்பா.., கார்த்திகேயா..,” என்று காட்டப்பட்டிருக்கின்றது.

நண்பர் சொல்வதையெல்லாம் கேட்டறிகின்றோம். கேட்டறிந்த பின் “கந்தா..,” கந்தா என்றால் ஒவ்வொரு நிலையும் அறிந்து கொண்டவன் என்று பொருள்.

“கடம்பா..,” கடம்பா என்றால் உருவாக்க வேண்டும் என்று பொருள். ஆக எதை உருவாக்க வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். உடல் முழுவதும் அது படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த இருளைப் போக்கிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நமக்குள் தெளிந்திடும் நிலையாக ஒளியின் சுடராக அதை உருவாக்க வேண்டும்.

கார்த்தி – “கார்த்திகேயா” என்றால் வெளிச்சம்.., இருளைப் போக்கும் நிலை.

அதே சமயத்தில் வேதனைப்பட்டோருக்கு நாம் எவ்வாறு எதை உருவாக்க வேண்டும்?

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் விலகும்.
3.உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவார்கள்.
4.உங்களை அறியாது புகுந்த வேதனைகள் அனைத்தும் நீங்கும்.
5.நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள் என்று இதை நாம் உருவாக்க வேண்டும்.

இதையெல்லாம் நமக்குள் எண்ணி வளர்த்து அவரிடம் வாக்காகச் சொல்ல வேண்டும்.

செவி வழி அவர் இதைக் கேட்கும் பொழுது நாம் சொன்ன நிலைகள் அந்த உணர்ச்சிகள் அவரை இயக்கும். அதைப் பெறவேண்டும் என்று அவரும் எண்ணினால் அவருடைய இருளைப் போக்கி அவருக்குள்ளும் தெளிந்த நிலைகள் கார்த்திகேயா என்று உருவாக்கும்.

“அப்பொழுது நாம் அதுவாகின்றோம்”. கீதையிலே இதைத்தான் தெளிவாகச் சொன்னார்கள். ஆகவே

1.அந்தக் காவியங்களில் காட்டப்பட்டுள்ள நெறிகளை நாம் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும்?
2.தீமைகளிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்?
3.ஆறாவது அறிவினை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதைத்தான் நம் காவியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

நமது காவியங்களில் தவறில்லை. காவியங்களைக் கதைகளாகத் தான் எண்ணுகின்றோம். அதனின் கருத்தையும் அதற்குள் இருக்கும் மூலங்களையும் நாம் எண்ணுகின்றோமா..,? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Leave a Reply