நாரதன் எல்லா லோகத்திற்கும் சென்று “ஒவ்வொருவரையும் சந்திக்கின்றான்” – விளக்கம்

Narad muni

இன்று விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தை உருவாக்கி அதிலே எந்தெந்த உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றனரோ அதை வைத்து இயக்குகின்றனர்.

“அப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு” அடுத்துச் செயல்படுத்தும் பொழுது அதிலே பிழைகள் வந்தால் அந்தப் “பிழைகளைத் திருத்தி.., அது எப்படி இருக்க வேண்டும்..,?” என்று மாற்றியமைக்கின்றனர்.

இதைப் போல் தான் உங்கள் உடல்களில் அருள் ஞானிகளின் உணர்வுகளை ஆழப்பதிவு செய்கின்றோம்.

அதைப் பதிவாக்கிவிட்டால் எப்பொழுது துயரம் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா.., என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கவர்வீர்கள் என்றால் அந்த உணர்வுகள் வலுப் பெறும்.

அந்த உணர்வுகள் வீரியமடைந்து.., “தவறு நாம் செய்தோமா..,? அல்லது மற்றவர்கள் தவறு செய்கின்றனரா..,?” என்ற நிலையைச் சிந்தித்து மற்றவர்களுக்கும் நல்வழி காட்டும்.

அப்பொழுது, “நமக்குக் கோபம் வராத நிலையும்.., அல்லது அவர்கள் கோபப்படும் நிலைகளிலிருந்து.., கோபப்படாத நிலையைச் செயல்படுத்தச் செய்யும்” நிலைகளும் வரும்.

ஆகவே, தவறுகள் நமக்குள் வராதபடி அருள்ஞானத்தின் உணர்வின் தன்மை பெறும்.

இதைத்தான் காவியங்களில் ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும் அவன்.., “கலகப்பிரியன்” என்றும் காட்டியிருப்பார்கள்.

மனிதனின் வாழ்க்கையில் இருளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

தீமைகளை ஒடுக்கி இருளை அகற்றி சிந்திக்கச் செய்யும் அந்தச் செயலின் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்திக் கொண்டுள்ள உணர்வினை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினோம் என்றால் நம்மை அறியாமல் பகைமை உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்து சிந்திக்கச் செய்யும் தன்மை நமக்குள் வரும்.

“நாம் ஏன் கோபிக்க வேண்டும்..,?” என்ற நிலையில் உணர்வைச் சமப்படுத்தி அந்தத் தீமையை அடக்கிவிட்டால்.., “பிறர் செய்யும் தீமையான உணர்வுகள்.., நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது”.

இவ்வாறு தடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் அடங்கிவிட்டால் “அவருக்குள்.., சிந்திக்கும் தன்மை வர வேண்டும்” என்ற உணர்வை நாம் ஊட்டிவிட்டால் அவர் செய்யும் தவறான உணர்வுகள் இங்கே வராது.

அதே போன்று நாம் பண்பு கொண்டு பரிவு கொண்டு ஒரு நோயாளியின் உணர்வைப் பாசத்தால் நுகர நேர்ந்து விட்டால் அந்த வேதனை உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலந்து நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆனால், அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தநாளங்களில் கலந்து அந்த உணர்வுகளை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நாம் பெருக்கிய அந்த அருள் உணர்வின் வலுவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து அவர் உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் பண்புள்ள நிலைகள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுகளை நாம் எடுத்து அங்கே அவரிடம் செவி வழி ஓதும் பொழுது நாம் சொல்லும் உணர்வுகள் அந்த உடலில் ஊடுருவுகின்றது.

அப்பொழுது அது அவரின் வேதனைகளை மாற்றி அவரை நல்லவராக்கும் தன்மை வருகின்றது. நமக்குள் அந்த வேதனை புகாதபடி தடுக்கப்பட்டு அவர்கள் நல்லவராக வேண்டும் என்ற நிலையைத்தான் காட்டுகின்றது.

இங்கே நாரதன் கலகப்பிரியனாகின்றான்.., கலகமோ நன்மையில் முடிகின்றது.

இதைத்தான் நாரதன் என்ன செய்கின்றான்? எல்லோரிடத்திலும் செல்கின்றான். எல்லோரையும் சந்திக்கின்றான்.

ஆக, ஒருவருக்கொருவர் சந்தித்து ஒருவரின் உணர்வுகள் ஒருவருக்குள் கல்க்கப்படும் பொழுது அந்தப் பகைமை உணர்வுகள் எப்படி மாறுகின்றது? பகைமைகளிலிருந்து எப்படி ஒன்று சேர்க்கின்றது என்ற நிலையை அங்கே நாரதனாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மனித உடலுக்கும் காரணப் பெயர்களை வைத்து நாராயணன் என்றும் ரிஷி என்றும் நாரதன் என்றும் காட்டுகின்றனர்.

நாரதன் ஒருவருடன் ஒருவர் சந்தித்து மீண்டும் மற்றவருடன் சந்தித்து.., ஏனென்றால் கண்ணனிடமும் செல்வான்.., கண்ணனுக்கும் சில உபாயங்களைச் சொல்வான்…, மற்றவர்களுக்கும் சில உபாயங்களைச் சொல்வான்.

நமது கண் மற்றவர்களுடைய தீமைகளை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகிவிடுகின்றது. மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சியால் அந்த தீமை என்ற நிலைகள் வருகின்றது.

அப்பொழுது கண்ணனிடத்தில் இந்த நாரதன் என்ற உணர்வுகள் சென்று “கண்ணன் மாற்றியமைக்கும் உணர்வுகள் எப்படி..,?” என்று உணர்த்துவதற்குத்தான் காவியப் படைப்புகளைப் படைத்துக் காட்டுகின்றனர்.

கண் கொண்டு அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்தபின் நம் உடலில் எத்தகைய செயல்கள் செயல்படுகின்றது?

இதிலிருந்தெல்லாம் எப்படி விடுபட வேண்டும் என்பதற்குத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்கும் மார்க்கத்தை சாதாரண மக்களுக்கும் உணர்த்தப்பட்டது.

தீமைகள் வந்தால் அதிலிருந்து விடுபட ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர வேண்டும் என்று உணர்த்தினார்கள்.

நமக்குள் ஏற்கனவே அறியாத நிலைகள் இருந்தாலும் நாம் பகைமை உணர்வு கொண்டோரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பகைமை வரும்.

குழந்தை மேல் பாசம் வைத்திருந்தாலும்.., “தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால்.., அவன் மீது வெறுப்பின் உணர்ச்சியே தான் வருகின்றது”.

இதைப் போன்ற நிலைகளைக் கூட்டாதபடி தடுப்பதற்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சிந்திக்கும் தன்மைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று தன் குழந்தை சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படுபவனாக வரவேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டு இந்தச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் செவிகளில் பட்டு அவன் செய்யும் தவறுகளிலிருந்து விடுபடச் செய்யும் இந்த நாரதன் என்ற அருள் உணர்வுகள்.

நாரதன் கலகப்பிரியன்.., கலகமோ நன்மையில் முடியும்.

உயர்ந்த உணர்வின் தன்மை அங்கே சொல்லப்படும் பொழுது அவனுக்குள் தீமையின் உணர்வை நீக்கி தாய் தந்தை சொல்லும் உணர்வைச் சிந்தித்து “அதைச் செயல்படுத்தும் நிலைக்குக் குழந்தை வருகின்றான்.

ஆகையினால் தான் காவியங்களை இவ்வாறு படைத்து உருவங்களை அமைத்துக் கொடுத்து அதன் மூலம் அருவத்தின் செயலைக் காட்டினார்கள் ஞானிகள். உண்மையின் உணர்வைத் தெரியப்படுத்துவதற்காக இப்படி உருவாக்கினார்கள் ஞானிகள்.

இருந்தாலும் அதிலே மாற்றமாகி “நாரதனுக்குச் சக்தி உண்டு.., அதனால் எல்லோரிடத்திலும் செல்கின்றான்..,” என்ற இந்த உணர்வுகளைத்தான் நினைக்கின்றோமே தவிர நாம் ஞானிகள் காட்டிய அருள் வழிகளை அறியவில்லை. அறியவிடாது திசை திருப்பியது இந்த உடல் பற்றுத்தான்.

இனியாவது உயிர் பற்று கொண்டு நாம் அந்த மெய்ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி வாழ்வோம். தீமைகளை வென்று ஒளியின் சரீரம் பெறுவோம். பிறவியில்லா பெரு நிலையை அடைவோம்.

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

maharishi

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

1.நம்முடைய மூச்சலைகள் என்ன செய்கின்றது..?

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது “பிறருடைய கடுமையான உணர்வலைகள்” அவர்களுக்குள் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

அதனால் அவர்கள் நல்ல உணர்வின் எண்ணங்களையும் அது மாற்றி குடும்பத்திற்குள் ஊடுருவி.., வீட்டிற்குள் “தீய வினைகளாக” உண்டாக்கி விடுகின்றது.

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்க்கும் உணர்வுகள் தோன்றுகின்றது.

பின், வெறுப்பான உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது சுவர்களிலும் தரைகளிலும் பதிவாகிவிடுகின்றது. அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருப்பதால் இங்கே நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலும் பதிந்துவிடுகின்றது.

அப்படிப் பதிந்தபின்.., “நம் உடலிலிருந்து வந்த.., இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு” ஒருவருக்கொருவர் கடுகடுப்பாகப் பேசும் நிலைகளையும் அதனால் வெறுப்படையும் எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.

அப்பொழுது நம் காரியங்கள் தடைபடுகின்றது. நாம் எண்ணிய நல்ல காரியங்கள் “இப்படித் தடைபடுகின்றதே..,” என்று வேதனையும் சஞ்சலமும் பட்டுக்கொண்டே இருப்போம்.

ஆக, நாம் எதற்குள் இருக்கின்றோம்?

இப்படி எடுத்துக் கொண்ட தீமையான உணர்வுகளுக்கு மத்தியில் தான் இருக்கின்றோம்.

ஆக, நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வையே.., “மீண்டும் மீண்டும் சுவாசித்து.., நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்”.

பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து.., “நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று” ஆகிவிடுகின்றது.

இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.

2. கூட்டுத் தியானத்தின் மூலம் வீட்டிற்குள் மகிழ்ச்சியான அலைகளைப் பெருக்க முடியும்

இதைப் போன்று நம்மையறியாமலேயே சேரும் தீமையான உணர்வலைகளை நாம் மாற்ற வேண்டும் என்றால் தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.

உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள். வீட்டிலே படரச் செய்யுங்கள்.

உங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்களை எண்ணி “அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் அழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் சக்தியை நாங்கள் பெறவேண்டும்”. இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இணைத்து உங்கள் உடலைத் தியானித்து விட்டு உங்கள் மூச்சலைகளைப் படரவிடுங்கள்.

நாங்கள் குடியிருக்கும் இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். தரைகளிலும்.., சுவர்களிலும்.., மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும்.

எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று “உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்”.

இந்த உணர்வாலே.., “இழுக்கப்பட்ட அந்தச் சக்திகள்” உங்கள் மூச்சலகள் மூலமாக வீட்டிற்குள் பதிவாகின்றது.

அதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் வீட்டையும், உடலையும், ஆன்மாவையும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கொண்டு சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

தினசரி, நாம் நம்மைச் சுத்தப்படுத்துகின்றோம், உடைகளைத் தூய்மைப்படுத்துகின்றோம், வீட்டையும் தூய்மைப்படுத்துகின்றோம். இதுவெல்லாம் “புறத்தால் செய்வது”

ஆனால், “அகத்துக்குள்” வரும் தீமைகளைப் பற்றித் தெரியாமலேயே இருக்கின்றோம். அதை அகற்றவில்லை என்றால் நமக்குள் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அறியாமலேயே தான் இருக்கின்றோம்.

ஆகவே, இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் மிகவும் நல்லது.