உயிரால் உருவாக்கப்பட்ட மனித உடலை “எனது…” என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது

Soul is God உயிரே கடவுள்

உயிரால் உருவாக்கப்பட்ட மனித உடலை “எனது…” என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பான உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து வளர்ந்து வந்தோம்.

அப்படி எடுத்துக் கொண்ட பாதுகாக்கும் உணர்ச்சிக்கொப்ப இந்த உடல்களை அமைத்துக் கொடுத்தது நம் உயிர் தான்,

அந்த உடல்களை அமைத்து எல்லாவற்றையும் பாதுகாக்கும் மனித உருவை உருவாக்கிய உயிருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் அறியும் உணர்வுகளும், தீமையை அகற்றும் உணர்வுகளும், தீமையை அகற்றும் சக்திகளும் தந்த.., “நம் உயிரான ஈசனை” நாம் மதித்தல் வேண்டும்.

அவனால் உருவாக்கப்பட்டு மனித உடலாக உருவாக்கியபின் “இந்த மனித உடலை.., எனது..!” என்று சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது.

ஆக.., “அவனுக்குச் சொந்தமானது தான்.., இந்த உடல்”.

அவனை வைத்தே தான் நாம் வாழ்கின்றோம். “நாம் எதனை விரும்புகின்றோமோ..,” அதனையே தான் செயலாக்குகின்றான் நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் உயிர் என்றுமே அழியாது. ஏனென்றால் உயிர் நட்சத்திரங்களால் உருவானது.

ஆனால், சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உடல்கள் தான் மாறுகின்றது. உயிர் என்றுமே மாறாதது.

இதைத் தெளிவாக அறிந்துணர்ந்த மெய்ஞானிகள் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி “உயிர் வேறல்ல.., நான் வேறல்ல..,” என்ற நிலை எய்தி என்றும் பதினாறு என்ற நிலையில் “பேரொளியாக” வாழ்கின்றார்கள்.

அந்த மெய்ஞானிகளைப் போன்றே நாமும் உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உயிர் எப்படி ஒளியாக அழியாத நிலைகள் கொண்டு இருக்கின்றதோ நாமும் அத்தகைய நிலையை அடைதல் வேண்டும்.

இதுவே மனிதனாக உருவாக்கிய நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்யவேண்டிய சேவை. இதன் பலனாக நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.

அகண்ட அண்டத்திலே என்றுமே அழியாத நிலைகள் கொண்டு பேரானந்தப் பெருவாழ்க்கை வாழலாம்.

மனிதனை முழுமை அடையச் செய்யும் “அகஸ்தியமாமகரிஷியின் செயலாக்கங்கள்”

Image

அகஸ்தியமாமகரிஷி

மனிதனை முழுமை அடையச் செய்யும் “அகஸ்தியமாமகரிஷியின் செயலாக்கங்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே நம் பூமியில்.., “அகஸ்தியன் நடந்து சென்ற பாறைகளிலே” அங்கே சென்று குருநாதர் காட்டுகின்றார்.

அகஸ்தியன் ஒவ்வொரு காலங்களிலும் இன்று நாம் பாபநாசம் என்ற நிலைகளிலும் அங்கே பெரும்பகுதி அகஸ்தியன் சுழன்ற நிலையும் அதே போன்று “காவிரி” என்ற திருநகரில் அங்கேயும் அகஸ்தியனின் சுழற்சி வட்டங்கள் ஜாஸ்தி.

இதைப் போல “இமயமலையிலும்” சில பகுதிகளில் “அவர் பெரும்பகுதி சுழன்ற இடங்கள் உண்டு..,” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டுகின்றார்.

“அந்தந்த இடங்களில்..,” அகஸ்தியர் சுழன்று வந்த உணர்வுகள் “வேகா நிலை” என்று அழிந்திடாத நிலைகளில் இன்றும் உண்டு.

“சாகாக்கலை” என்று மந்திரங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள் இந்தப் பூமியிலே படர்ந்திருந்தாலும் அவைகள் எல்லாம் அழிந்துவிடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலை என்ற நிலைகளால் விஷத் தன்மைகளே படர்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

வேகாக்கலை என்ற நிலையில் அந்த மகரிஷிகள் அவர்கள் பெற்ற உணர்வின் ஆற்றலையும் காட்டுகின்றார்.

எவ்வாறு உயிர் ஒளியின் துடிப்பாக இருக்கின்றதோ அதைப் போல உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக நஞ்சினை அடக்கி அதே சமயம் “வைரம்.., ஒளியின் சுடராக” இருப்பது போல உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியதையும் காட்டுகின்றார் குருநாதர்.

வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் நஞ்சான உணர்வுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும் அந்த ஞானிகள் “விண்ணுலக ஆற்றலை எடுத்து” அதன் மேல்.., “அடுக்கடுக்காகப் பரப்பி” உணர்வின் ஆற்றலை இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை.., “அதை ஒடுக்கியது எவ்வாறு?” என்றும் காட்டுகின்றார்.

நஞ்சினை ஒடுக்கிய உணர்வின் தன்மையை வளர்த்து அந்த உணர்வின் ஒளி அலையாக தன் உயிருடன் அது ஒன்றி இன்றும் துருவத்தைக் கண்டுணர்ந்து துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணை கொண்டு “ஒளியின் சிகரமாக.., இன்று அகஸ்தியன் இருப்பதையும் காட்டுகின்றார்”.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து துருவ உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி “துருவ மகரிஷியாக” ஆனான்.

எந்தத் துருவத்தின் நிலையை அவன் ஈர்ப்பாக எடுத்தானோ பூமிக்குள் வரும் இந்த நஞ்சினை மற்றதை விளையாது அதையே தனக்குள் மாற்றியமைத்து துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக.., இன்றும் சுழன்று கொண்டுள்ளான்” என்பதைக் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அகஸ்தியர் உணர்த்திய அந்த உணர்வின் வழி கொண்டு அவனைப் பின்பற்றியவர்கள் இன்று விண்ணுலகில் “சப்தரிஷி மண்டலம்..,” அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலையையும் காட்டுகின்றார்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் முழுமையான உணர்வின் தன்மை பெறச் செய்து “முழுமையாக்கிய உணர்வின் சத்தை” அது எவ்வாறு அங்கே தனது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்குள் “அழைத்துச் செல்கிறார் அகஸ்தியர்..,” என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் அனைவரும் பெறுவோம்.

நாம் அனைவருமே அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் செல்வோம். நாம் பிறந்த பயனை பலனை அடைவோம். என்றுமே அழியாத நிலைகள் கொண்டு.., “ஒளியாக நிலைத்திருப்போம்”.

அந்த “அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில்” மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.