மனித வாழ்க்கைப் பயணத்தின் திசை எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்…?

both dippers

மனித வாழ்க்கைப் பயணத்தின் திசை எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்…?

 

ஆறாவது அறிவின் தன்மையில் மனிதன் என்ற நிலைகளில் நமக்குள் தீமையின் நிலைகள் பொங்கிடாது அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து மகாமகமாக எல்லா இடத்திலும் பிணிகளை நீக்கும் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்வதே “மகாமகம்…!” என்பது.

மாசி மாதம் தான் மகாமகத்தின் ஆற்றல் மிக்க சக்தியினை சாதாரண மக்களும் பெறும் வண்ணம் அருள் ஞானிகள் இதைக் கூட்டினார்.

மாசியில் தான் “உத்தராயணம்…” என்ற நிலைகளும் வருகின்றது. அதாவது
1.இந்த மனித வாழ்க்கையில் உடல் பெறும் நிலையை மாற்றிவிட்டு – திசையை மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று
3.அடிக்கடி நாம் தியானிப்பது தான் உண்மையான தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று உங்களால் எத்தனை தடவை எண்ண முடியுமோ எண்ணுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்ட பின்
1.எங்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்,
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெறவேண்டும்,
3.எங்கள் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்,
3.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும்,
4.எங்கள் தொழில்கள் அனைத்தும் சீராக வேண்டும்,
5.எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும்,
6.எங்களுக்குள் ஒற்றுமை ஓங்கி வளரவேண்டும்,
7.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அமைதி பெறவேண்டும் என்று
8.இந்த உணர்வினை நீங்கள் எடுத்து செல்லுங்கள்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்தால் மகிழ்ச்சி பெறும் நிலையாக “உத்தராணயம்…!” உங்கள் திசை மாறி அந்த மெய் ஞானி உணர்வுடன் செல்லத் தொடங்கும்.

நாம் இது வரையில் அறியாத நிலைகள் கொண்டு வளர்ந்து வந்திருந்தாலும்
1.இனிமேல் நமக்குள் தீமைகள் வளராது
2.மீண்டும் உடலுடன் உடல் பற்று கொண்டு புவியின் ஈர்ப்புக்குள் வராது
3.புவியைக் கடந்து சென்று உத்தராணயம் – ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக நாம் அந்த மகரிஷியுடன் ஒன்றி வாழும் நிலையாக
4.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

முழுமையின் நிலையாக உத்தராணயம் என்ற நிலையை நாம் பெறுவோம் என்று இதை எல்லோரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வயலைப் பன்படுத்தி நல்ல வித்தினை விதைத்து நீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை இட்டு வந்தால் அதனுடைய ராசிகளை நாம் பார்க்க முடிகின்றது.

மனிதனின் வாழ்கையில் நாம் கேட்டறிந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் பொறாமை கோபம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் தீய வினைகளாக நம்மை அறியாமலே வந்து சேர்ந்து விடுகிறது.

அந்தத் தீயவினைகளை (களைகளை) அகற்றிட ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பல முறை செலுத்துங்கள்.

அதிகாலையில் கண விழித்ததும் (சூரிய உதயம் ஆவதற்கு முன்) உங்களால் முடிந்த மட்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

இது உங்களுக்குள் கூடக் கூட உங்கள் வாழ்கையில் வந்த தீமைகளை அது அகற்றி விட்டு திசை மாறி ஞானியின் உணர்வு கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் செல்லும்.

இவ்வாறு நீங்கள் ஜெபித்து வந்தீர்கள் என்றால்
1.உங்களை அறியாது சேர்ந்த நோய்கள் போகும்,
2.உங்கள் அறியாது வந்த தீயவினைகள் மறையும்
3.உங்களை அறியாது உட்புகுந்த சாப வினைகள் நீங்கும்
4.உங்கள் அறியாது வந்த பூர்வ புண்ணியத்தால் அமைந்த தீமைகளும் அகலும்.

மெய் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக என்றுமே நாம் முழுமையின் நிலை அடைய முடியும்.

“நினைவு நாள்” அன்று எதை நினைக்க வேண்டும்…?

auspicious day

“நினைவு நாள்” அன்று எதை நினைக்க வேண்டும்…? 

 

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் வருடா வருடம் நினைவு நாள் வைத்து வணங்குகிறோம். ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் அதைச் செய்கின்றோமா…?

நினைவு நாள் அன்றைக்கு அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தோ மற்ற அவர்களுக்கு விருப்பமானவற்றைப் படைத்து வைத்து அவர்களைக் கூப்பிடுகின்றோம்.

அப்படிக் கூப்பிட்டுக் கவர்ந்தோம் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் நம் உடலில் தான் வந்து சேரும்.
2.அவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் உடலில் அனுபவித்த நோய்களும் நமக்குள் வந்து சேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று ஏகோபித்த நிலையில் விண்ணிலே உந்தித் தள்ள வேண்டும்.

இப்படி எல்லோரும் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை அந்த சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் உந்தித் தள்ளினால் அவர் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கு கரைக்கப்படுகின்றது. அவர் அங்கே ஒளி உடல் பெறுகின்றார். இது தான் ஞானிகள் காட்டிய வழி.

1.அவர் ஆன்மா ஒளி உடல் பெற்று சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து வந்தாலும்
2.வருடா வருடம் நாம் நினைவு நாள் கொண்டாடினாலும் இதே முறைப்படித்தான் செய்ய வேண்டும்.

ஏன்…?

அவருடன் நாம் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ வகையான வேதனைகள் வெறுப்புகள் இருக்கும். அதே சமயத்தில் கடைசி நிமிடத்தில் அவர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நேரத்திலும் கடும் விஷத் தன்மையாகி மடிந்தபின்தான் அந்த ஆன்மா வெளியேறுகின்றது.
1.இதை எல்லாம் நமக்குள் அவர் உணர்வாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா…!
2.அவருடைய நினைவு நாள் என்று அவரை எண்ணி ஏங்கும் பொழுது
3.அவரின் உணர்வுகள் நம் உடலுக்குள் இருப்பதற்கு மீண்டும் ஜீவன் கிடைத்து
4.அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கும்.

பின் அவர் எப்படி சிரமப்பட்டு நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வேதனையுடன் பிரிந்தாரோ அதே நிலை தான் நமக்கும் ஏற்படும்

மாறாக நாம் நினைவு நாள் அன்று கூட்டுத் தியானங்களை அமைத்து
1.அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த அந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது
2.அது நம் இரத்த நாளங்களில் கலந்து
3.நம் உடலில் அவர் உடலில் சேர்த்த தீய வினைகள் நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அவர்கள் உணர்வுடன் பழகிய அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் இருந்தால்
1அந்தப் பேரருள் என்ற அந்த ஒளியான உணர்வினை
2.நம் உடலுக்குள் இருக்கும் அவரின் உணர்வு அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றோம்.

திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம்…!

முதலிலே… அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இந்த நஞ்சின் உணர்வைக் கரைத்து விட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக உருவாக்கி விடுகின்றோம். நாம் தியானித்த உணர்வின் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் சப்தரிஷி மண்டலங்களாக ஆகிவிடுகின்றனர்.

பின் அவர்களும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வருவதை உணவாக உட்கொண்டு அந்த உணர்வினை அவர்களுக்குள் வளர்த்து அழியாத ஒளி உடலாக அவர்கள் வாழ்ந்து வரத் தொடங்குகின்றர்கள்.

அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வினை நாம் குரு காட்டிய வழியில் நாம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கும் போது அவர் ஒளியின் உடல் பெற்ற அந்த உணர்வுகளை நுகர்கின்றோம்.

அவருடன் வாழ்ந்த காலங்களில் வெறுப்போ வேதனையோ சலிப்போ நோயோ இதைப் போன்ற உணர்வுகள் அவருடைய உணர்வு நமக்குள் இருப்பதனால் அந்தப் பேரருள் என்ற ஒளிச் சரீரம் பெற்ற அவருடைய உணர்வை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது தீமைகளை நீக்கிடும் உணர்வின் உணர்வாக நாம் பெறுகின்றோம்.
1.அது தான் நினைவு நாள் என்பது.
2.நினைவு நாள் அவருக்காக அல்ல.
3.நமக்குள் இருக்கும் அவர் உணர்வின் அணுக்கள் ஒளியாக மாற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலங்களில் அவர் ஒளியாக வாழ்வது போல் நாமும் பேரொளியாக வேண்டும்
5.இந்த உடலுக்குப் பின் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்பதற்குத்தான்.

ஆகவே உடல் பெறும் உணர்வுகளை அது உணவாகக் கொடுக்கும் போது நோய்களாக வருகின்றது. ஒளியாக மாற்றிய உணர்வுகளை உணவாகக் கொடுக்கும் பொழுது பேரொளியாகின்றது. அழியாத நிலைகள் அவர்களும் பெறுகின்றார்கள். நாமும் பெறுகின்றோம்.

மெய் வழிச் சாலை…!

Final destination

விண் செல்ல வேண்டிய மெய் வழிச் சாலை…!

 

ஒவ்வொரு நாளும் அதிகாலை துருவ தியானம் இருந்து முடிந்த பின் நம் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

இதற்கு முன்னாடி நாம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் விண் செல்ல வேண்டும் என்ற உணர்வை இணைத்து நமக்குள் வளர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வழியில் வந்தவர்கள் நாம். அவர்கள் உணர்வுகள் நம் உடலாக இருக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து நமக்குள் வலுவைச் சேர்த்துக் கொண்டபின் முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மா இணைய வேண்டும் என்று
1.அவர்களுடன் உறவாடிய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதன் துணை கொண்டு
2.அவர்கள் முகப்பிலே (உயிரிலே) சப்தரிஷி மண்டல உணர்வை இணைத்து எளிதில் விண்ணுக்குச் செலுத்தலாம்.

விஞ்ஞானிகள் இன்று கம்ப்யூட்டர் அலை வரிசையில் வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் உணர்கிறார்கள் கவர்கிறார்கள்.

முதலில் படம் எடுக்கும் கருவியை ராக்கெட் மூலமாக அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஒவ்வொரு கோளின் திசையையும் எடுத்து அருகில் இருந்து அவைகளின் செயலாக்கங்களை உணர்கின்றார்கள்.

அதைக் கம்ப்யூட்டரில் அதைப் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் இந்த உணர்வின் துணை கொண்டு ஒரு செயற்கைக் கோளை அங்கே அனுப்புகிறார்கள்.

முதலில் அந்தக் கோளின் உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். மாற்றிய அந்த உணர்வை இணைத்துச் செயற்கைக் கோளை அங்கே கொண்டு போகின்றார்கள்.

1.கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலை கொண்டு
2.அங்கே மோதலில் தன் இனமான உணர்வுகள் வந்தவுடனே
3.செயற்கைக் கோளைத் திசை திருப்பி அந்த கோளுக்கு அழைத்துச் செல்லுகின்றது.

கோளுக்கு அழைத்துச் செல்லும் போது அந்த வட்டப் பாதையை நிர்ணயிக்கின்றார்கள். கோளுக்குள் விழுந்து விடாதபடி அந்த சுழற்சியின் வட்டப் பாதையில் ஈர்க்கும் தன்மை வரும் போது இதைச் சுழலும்படி செய்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதை எல்லாம் இங்கே தரையில் இருந்து விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகிறார்கள்.

அதே போல் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் உந்திச் செலுத்தும் பொழுது நேராகச் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது.

அங்கே இணைந்த பின் உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகிறது.. பொசுக்கி விடுகிறது. ஏனென்றால் சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கியவர்கள்.

அப்பொழுது உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி ஒளி வட்டத்தில் சுழல ஆரம்பித்து விடுகிறார்கள்.

உதாரணமாக கணவனைப் பிரிந்த மனைவியின் உயிரான்மாவை கூட்டுத் தியானத்தின் மூலமாக எல்லோரும் சேர்ந்து அங்கே விண் செலுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் தன் மனைவியின் உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும். அப்பொழுது மனைவியின் ஆன்மா அங்கே செல்கிறது.

மனைவி சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணையும் போது அடுத்து கணவனும் உடலை விட்டுப் பிரியும் சமயம் சப்தரிஷி மண்டலத்தை எண்ணினால் தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே இழுத்துக் கொண்டு போய்விடும்.

இந்த உணர்வை எல்லாம் பெருக்குவதற்கு அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் நாம் அங்கே அனுப்பவும் முடியாது. நாம் விண் செல்லவும் முடியாது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி செய்தால் உடலை விட்டுப் பிரிந்தால் தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் போய் இணையும்.

(ஏனென்றால் ஒரு நண்பனிடத்தில் மிகுந்த பாசமாக இருக்கிறோம். எனக்கு இப்படி நன்மை செய்தான். அவனை விட்டு விட்டுப் போகிறோமே என்று எண்ணினால் வேறு எங்கேயும் அந்த ஆன்மா போகாது. நேராக நம் உடலுகுள் தான் வரும். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்)

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தவில்லை. அந்தப் பழக்கத்தை விட்டு விட்டோம். இப்போது குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகள் கண்ட வழியை உங்களிடம் தொடரச் செய்கிறோம்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று பொருள். சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் எத்தனையோ கோடி உண்டு.
1.ஏனென்றால் அவர்கள் ஒளியின் சரீரமாகி
2.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து பல நூறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது,

இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற மண்டலங்களுடன் இணைந்து அதில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றதால் “என்றுமே… எங்கேயுமே… அழியாத நிலைகள் கொண்டு வாழ்கிறார்கள்…!

அவர்கள் வாழும் எல்லைக்கு நாம் இப்போது பலரை அனுப்புகிறோம். அடுத்து நாம் இந்த உடலை விட்டுப் போனவுடனே யாருடைய தயவும் தேவையில்லை. அங்கே போய்விடுகிறது.

ஆகவே தினசரி காலைத் துருவ தியானத்தில் நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

இருண்ட நிலைகளைப் பேரொளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானத்தின் தத்துவம்…!

Fore most God

இருண்ட நிலைகளைப் பேரொளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானத்தின் தத்துவம்…!

 

இந்த உடல் வாழ்க்கையில் மீறி மீறிப் போனால் நாம் எதைக் கொண்டு போகப்போகிறோம்…? ஒன்றுமே இல்லை…! இந்த உடலையே கொண்டு போக முடிவதில்லை…!

அழகான ஆடையைத் தைப்போம். அழகான வீட்டைக் கட்டுவோம். ஆனால் தலை வலி… மேல் வலி… காய்ச்சல்…! என்று உடல் சுருங்கும் போது என்ன செய்கிறோம்…?
1.நல்ல சட்டையைப் போடுங்கள்…
2.நல்ல உணவை உட்கொள்ளுங்கள்…
3.அந்த இடத்திற்குப் போகலாம்… இங்கே போகலாம்…! என்று உங்களிடம் யாராவது சொன்னால் என்ன சொல்வீர்கள்…?

என்னை என்ன கிண்டல் செய்கிறீர்களா..? என்று தான் கோபப்படுவீர்கள். நல்ல ஆடையைப் போட வேண்டும்… நல்ல உணவை உட்கொள்ள வேண்டும்…! என்று நினைத்தாலும் அப்பொழுது அது முடிவதில்லை,

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களும் அகண்ட அண்டத்திலிருந்து பெற்று அந்தச் சூரிய குடும்பங்கள் வளர்ந்து அது கவர்ந்த உணர்வின் சக்தியை நமது பிரபஞ்சம் கவர்ந்து நமது பிரபஞ்சத்தில் உயிரின் தன்மையை உருவாக்குகின்றது.

அகண்ட அண்டத்தின் உணர்வின் தன்மை மனிதனுக்குள் சிந்தனையை உருவாக்கி இருளை அகற்றிடும் உணர்வைத் தனக்குள் பெற்று அந்தப் பேரருள் பெறச் செய்த நமது பிரபஞ்சத்தைப் போற்றுதல் வேண்டும்.

அகண்ட அண்டத்திலிருந்து முதல் அவதாரமாக சூரியன் நாராயணனாக உருவாகிறது, மறு அவதாரம் உணர்வின் அணுக்களாக மாற்றும் திறன் பெற்றது நமது உயிர் விஷ்ணு.

சூரியன் தன்னுடைய சுழற்சியால் வெப்பமானாலும் உயிரின் துடிப்பினால் இரண்டவதாக ஏற்படும் வெப்பம் விஷ்ணு. நம் உயிர் விஷ்ணுவாக இருப்பினும் உயிரால் கவரப்பட்ட உணர்வுகள் அதை நுகர்ப்படும் பொழுது உயிரைப் போன்று எந்தக் குணத்தின் மணத்தைச் சுவாசித்தோமோ அதன் மறு அவதாரமாக சீதாராமனாக எண்ணங்கள் தோன்றுகிறது.

எந்த உணர்வின் தன்மை அணுவானதோ அந்த விஷ்ணுவின் மறு அவதாரமாகச் சீதா ராமனாகத் தோன்றி அதாவது
1.நுகர்ந்து கொண்ட சத்தின் தன்மை உயிரிலே பட்ட பின்
2.அதற்குத் தக்க உணர்ச்சிகளக எண்ணங்களாக இயக்குகிறது
3.அதாவது மூன்றாவது நிலை கொண்டு எண்ணத்தால் உருவாக்கும் நிலைகள்.

நாராயணன் சூரியனாக இருந்தாலும் அது விஷ்ணுவின் தன்மையாக வரப்போகும் பொழுது உணர்வின் அணுக்களை ஒளியின் சிகரமாக மாற்றும் மனித உடலில் பெற்ற பின் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வை மாற்றும் திறன் பெற்றது. ஆகவே முழு முதற் கடவுள்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பகைமையை நீக்கி உணர்வை ஒன்றாக்கி ஒளியின் உடல் பெற்று மகிழச் செய்யும் உணர்வை நமக்குள் எடுக்கும் போது உடலுக்குள் அது விளையத் தொடங்குகிறது.

1.அப்படி விளையும் பொழுது அந்த இயக்கம் “ஈசன்” என்றும்
2.அதிலே ஏற்படும் வெப்பம் “விஷ்ணு” என்றும் ஈர்க்கும் காந்தம் “லட்சுமி” என்ற நிலையில்
3.எல்லோருக்கும் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் “பிரம்மமாகின்றது…!”

பிரம்மவின் மனைவி ஞானம் சக்தி – சரஸ்வதி. அந்த உணர்வின் தன்மை வரும் போது நம் உடலுக்குள் அனைத்தையும் ஐக்கியமாக்கும் உணர்வின் தன்மை பெறுகின்றது.

நமது சொல்லின் தன்மை நாம் வெளிப்படுத்தும் போது இருளை அகற்றிடும் நிலையும் அனைவரையும் ஒளிமயமாக மாற்றும் நிலையும் அறிவின் தன்மையை நமக்குள் வளர்க்கும் தன்மை வருகிறது.

ஆகையினால் கடவுளின் அவதாரம் என்றாலும் மறு அவதாரம் விஷ்ணு (உயிரின் நிலைகள்) என்று தான் இதிலே முக்கியமாகின்றது, நாம் சொல்லும் (சுவாசிக்கும்) உணர்வுகள் நம் உயிரிலே (விஷ்ணு) மோதும் பொழுது அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது. உணர்ச்சிகள் நம் உடலிலே படர்கின்றது. எந்த உணர்வோ அதன் வழி நம்மை வழி நடத்துகின்றது உயிர்.

நம்மை வழி நடத்தும் அந்த உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு அருள் ஒளியை எவர் நுகர்கின்றரோ அவருக்குள் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வுகள் பெறச் செய்யும்.

1.ஆதியிலே இருண்ட நிலையாகத்தான் எங்குமே இருந்தது. (சூனியப் பிரதேசம்)
2.இருண்ட நிலைக்குள் விஷத்தின் தன்மை (DARK MATTER) தான் கலந்திருந்தது.
3.ஆங்காங்கு இருக்கும் அந்த விஷத்தின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் உணர்வுகள் வரப்போகும் போது சிறிது வெப்பம் உருவாகின்றது.
4.வெப்பமான பின் ஆவியாகின்றது.
5.ஆவி என்ற நிலைகள் வரப்போகும் போது இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு உணர்வின் வேகத் துடிப்பாகி நெருப்பாகின்றது.
6.நெருப்பாகும் பொழுது நகர்ந்து சென்று ஒன்றை உருவாக்கும் நிலை பெறுகின்றது,

நகர்ந்து செல்லும் நிலையில் அந்த ஈர்க்கும் சக்தி காந்தமாகவும்… விஷம் இயக்கச் சக்தியாகவும்… வெப்பம் உருவாகும் சக்தியாகவும்… காந்தம் அரவணைக்கும் சக்தியாகப் பெறுகின்றது.

காந்தம் அரவணைத்துத் தன்னுடன் மோதப்படும் போது மோதிய உணர்வின் சத்து எதுவோ அதன் வழி “பிரம்மம்…!” உருவாக்கும் சக்தி பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
1.எதன் உணர்வு பெற்றதோ அந்த உணர்ச்சிக்கொப்ப
2.உருவாக்கும் அதன் இயக்க சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
3.அதனால் தான் மனிதனான பின் இந்த இருளை அகற்றி எதனையுமே தன் எண்ணத்தால் உருவாக்கும் நிலைகள்.
4.மற்றது சந்தர்ப்பத்தால் மோதும் தன்மைகள் தான்…!

சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வு நம் வாழ்க்கையை அமைத்து விடுகிறது. ஆனால் அதைப் போன்ற சந்தர்ப்பத்தை மாற்றி அருள் உணர்வு என்ற நிலையைப் பெற்று அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

சந்தர்ப்பத்தால் தீமைகளை நுகரும் போது அதன் வழிக்கே அது நம்மை அழைத்துச் சொல்லாதபடி அடக்கும் உணர்வாக நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி அந்த அகஸ்தியன் தீமைய மாற்றிய அதே உணர்வைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

நம் உடல் சாப்பிடும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றும் வலிமை கொண்டது போல்
1.கார்த்திகேயா என்ற நிலையில் அந்தத் தெரிந்து செயல்படும் வலிமையான உணர்வு கொண்டு
2.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் உள் செலுத்தி தீமைகளை அடக்கிப் பழகுதல் வேண்டும்.
3.அப்பொழுது நம் உடலில் உள்ள தீமையான அணுக்களை நாம் ஒளியாக மாற்றுகின்றோம்.

இப்படி வாழ்க்கையில் வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குதல் வேண்டும் என்பதற்குத் தான் இப்போது உங்களுக்கு இதைத் தெளிவாக்கியது. ஆகவே அருள் ஞானத்தை வளர்த்து கொள்வோம்.

குரு அருளைப் பெறுவோம். பேரருளை நமக்குள் பெறுவோம். உலக இருளை நீக்குவோம் என்ற உணர்வுடன் நாம் உறுதி கொள்வோம்.

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் “ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்க வேண்டும்”

spiritual-lights-third-eye

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் “ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்க வேண்டும்”

 

நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் நூலம்படையை உருவாக்குகின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கிவிட்டால் தன் ஊசி போன்ற மூக்கால் ஈ உடலுக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சி உடலை அமிலமாக மாற்றி அதை உணவாக உட்கொண்டு விடுகின்றது.
1.ஈ முழுமையாக இருக்கும்.
2.ஆனால் அதனுடைய தசைகள் இருக்காது.

அதே போல் வலைக்குள் சிக்கும் இன்னொரு ஈயை இந்த நூலாம்படைப் பூச்சி என்ன செய்கிறது? தனக்குள் விளைந்த விஷத்தின் தன்மையை அந்த ஈயின் உடலுக்குள் பாய்ச்சி விடுகின்றது.

பாய்ச்சிய பின் ஈயின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சியை உருவாக்கும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
1.அப்படி மாறிய பின் அந்த ஈயின் ரூபங்கள் மறைந்து விடுகின்றது.
2.அந்த அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சிகளாக மாறி விடுகின்றது

அதாவது ஈயின் உடலில் இந்த நூலாம்படைப் பூச்சிகள் உருவாகி “பல ஆயிரம் நூலாம்படைப் பூச்சிகளாக…” வெளி வருகின்றது. (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

ஒரு குளவி என்ன செய்கிறது? ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி கூட்டுக்குள் அடைத்துப் புழுவைத் தன் இனமாகக் குளவியாக மாற்றுகின்றது.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் போது அதிலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் ஜீவ அணுக்களாக மாற்றும் போது
1.நூலாம்படைப் பூச்சியின் உருவாகக் கொச கொச என்று
2.பல அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

நூலம்படைப் பூச்சி தன் இனத்தை உருவாக்குவதற்கும் குளவி தன் இனத்தை உருவாக்குவதற்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.

நீங்கள் இதையெல்லாம் ஆர அமர்ந்து நிதானமாகக் கேட்கின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) இதைத் தெரிந்து கொள்வதற்கு அந்தப் பூச்சியகள் கருவாகி உருவாகும் நிலையை அதை அறியும் வரையில் எனக்குச் சாப்பாடு கிடையாது.

ஒரு நிமிடம் வேறு பக்கம் என் நினைவு திரும்பினால் குருநாதர் என்ன செய்வார்…?
1.உன்னை எதற்காகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்…?
2.நீ எங்கே பார்க்கின்றாய்…? என்பார்.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் கூர்மையாகப் பாய்ச்சிய உணர்வின் தன்மையால் அது எப்படி உருமாறுகின்றது…? அதன் உணர்ச்சியின் தன்மை துடிப்பின் நிலைகள் எவ்வாறு வருகின்றது…?

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ அலைகளையும் டி.வி. அலைகளையும் ஒலி/ஒளிபரப்புகின்றார்கள். வீட்டில் இருக்கும் ரேடியோ டி.வி இவைகளைத் திருப்பி வைக்கும் பொழுது
1.ஒலி/ஒளிபரப்பாகி வரும் அந்த அலைகளைக் கவர்ந்து
2.அந்த அலைகளுக்குத் தக்க உருவமாகவும் ஒலியாகவும் நமக்குக் காட்டுகின்றது.

அதைப்போல நூலாம்படைப் பூச்சி பாய்ச்சிய உணர்வலைகள் அந்த உயிரின் (ஈயின்) துடிப்பால் ஈர்க்கப்பட்டு அந்த உணர்வுகள் நூலாம்படையின் ரூபமாக மாற்றுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இவை அனைத்தும் எந்த உயிரானாலும் எதன் நிலைகள் கொண்டாலும் ஆண் பெண் என்ற நிலைகளில் தான் இணைகின்றது.

ஒரு ஆண் நூலாம்படைப் பூச்சி தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மையை ஈயைத் தாக்கப்படும் போது ஒரு பெண் நூலாம்படைப் பூச்சியும் அதே போல அங்கே ஈக்குள் உமிழ் நீரைச் சுரக்கச் செய்கின்றது.

அப்படிச் சுரந்த பின்தான் ஈயின் உடலில் அமிலங்கள் மாறி அதன் ரூபமாக மாற்றுகின்றது. ஆண் பூச்சி மட்டும் அது தாக்குவதில்லை.

ஆனால் குளவியில் இருக்கக்கூடிய நிலையோ
1.உயிரின் இயக்கம் கொண்டு குளவி ஆண் என்ற நிலைகள் அடைந்த பின்
2,குளவிடமிருந்து சுரக்கும் உணர்வுகள் புழுவின் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.அது பெண் என்ற நிலைகள் அடைகின்றது.

அப்பொழுது புழு உடலுக்குள் உருவாகும் கருவின் தன்மையை குளவியின் ரூபமாக எவ்வாறு உருமாற்றுகின்றது..? என்று காட்டுகின்றார்.

நூலாம்படைப் பூச்சி ஆண் பெண் என்ற நிலைகள் அமைகின்றது. ஆனால் குளவி ஆண் பெண் என்ற நிலைகளில் வருவதில்லை. தன் விஷத்தின் தன்மையைப் புழு உடலில் பாய்ச்சப்படும் போது இந்த உடலிலுள்ள அணுக்களின் தன்மை பெண்பாலாக மாறிவிடுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு இயற்கையின் செயல்கள் எப்படி உரு பெறுகின்றது…! உடல்கள் எப்படி மாறுகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குளவி ஒரு புழுவைக் கொட்டி ஒரு புழுவாக மாற்றும் நிலையையும் நூலாம்படைப் பூச்சி ஒரு ஈயை பல நூற்றுக்கணக்கான நூலாம்படைப் பூச்சிகளாக மாற்றும் நிலைகளையும் குருநாதர் தெளிவாக்கினார்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். ஏனென்றால்
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
3.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
4.ஒளியான அணுக்களாக உருவாக்கி அழியா ஒளிச் சரீரம் நாம் பெற வேண்டும்.

இந்தச் சதமற்ற உடலுக்காக வேதனைப்பட்டு “நாம் பெற வேண்டிய நல்லதை இழந்து விடக் கூடாது…”

immortal-bliss

இந்தச் சதமற்ற உடலுக்காக வேதனைப்பட்டு “நாம் பெற வேண்டிய நல்லதை இழந்து விடக் கூடாது…”

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

“நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா… …?”
என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் கடுமையான குளிரில் வைத்து எம்மை (ஞானகுரு) இப்படிக் கேட்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் அவர் எமக்குப் பல அரும் பெரும் சக்திகளைக் கொடுத்தாலும் நான் வீட்டிலுள்ள என் பெண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு அவர் சொன்ன வழிகளில் போகப்படும் பொழுது ஒவ்வொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் என் எண்ணங்கள் மாறுகின்றது.

நம் குடும்பம் பிள்ளை குட்டிகள் எல்லாம் எப்படி இருக்கின்றதோ…? நாம் இங்கே இந்தப் பனிப்பாறையில் இறந்து விட்டால் அவர்களை யார் காப்பாற்றுவது…? என்று வேதனைப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றேன்.

அப்பொழுது அவர்களுக்கு அதைச் செய்ய வேண்டுமே இதைச் செய்ய வேண்டுமே என்ற எண்ணங்களில் இந்த ஆசை தான் எனக்குள் வருகிறதே தவிர… குருநாதர் சொன்னதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

1.உனக்குள் பெற வேண்டியதை மறந்து…
2.நீ பெற வேண்டியதை இழந்து இப்படித் தவிக்கின்றாய்…!
3.ஆகவே எது உனக்குச் சதம்..?
4.உன் உயிர் உன்னை விட்டுச் சென்று விட்டால் சதமற்ற இந்த உடலுக்காகச் சதம் என்று நீ ஏன் வாதம் செய்து கொண்டிருக்கின்றாய்…? என்ற பொருள்படப் பேசினார் குருநாதர்

அன்று அகஸ்தியன் காட்டிய மெய் வழிப்படி என்றுமே சதமாக இருக்கும் உயிரான ஈசனுடன் நீ அவனிடம் ஒன்றி அவனின் நிலைகளாகப் போகும் போது அவனின் உணர்வாக நீ சதமாக ஒளியாக இருக்க முடியும்…!

இதை உணர்த்துவதற்காகத்தான் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். அவர் சொன்னதை மனதில் வைத்து நம் உயிரான ஈசனுடன் என்றுமே ஒன்றி வாழ வேண்டிய நிலையே அது.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமாமோ…?
ஆகவே இந்த மாய வாழ்வில் மண்ணுடன் மண்ணாய் மறைவதைப் பாராய்….! என்று தெளிவுற எடுத்துரைத்தார் குருநாதர்.

மனித உணர்வின் இச்சை கொண்ட நிலையில்
1,அந்தச் சதமற்ற உணர்வுக்கு
2.இந்தச் சதமற்ற உன் உடலுக்கு
3,நீ ஏன் இத்தனை வாதிடுகின்றாய்…? என்று சொல்லி விட்டு
4,உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் நிலையைக் குருநாதர் எனக்குள் தெளிவாக எடுத்துரைத்தார்.

நீங்களும் அதை அறிந்து கொள்ள வேண்டும்..! உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியாக ஏகாந்தமாக வாழ வேண்டும்…! என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

நம்முடைய முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் – ஏன்…! எப்படி…?

big heaven

நம்முடைய முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் – ஏன்…! எப்படி…?

நம் மூதாதையர்களுடைய உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுத் தியானத்தின் மூலமாக உந்தித் தள்ளும் போது உங்கள் மூதாதையர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வு தான் உங்கள் உடலாக உருவாகி உள்ளது. அதை எண்ணி நீங்கள் செயல்படுத்தப் போகும் போது
1.முன்னோர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில்
2.உங்களை அறியாது அவர்களுக்கு ஒரு நன்மையைச் செய்கின்றீர்கள்.

“சிறு துளி பெரு வெள்ளம்…” போல் நாம் அனைவரும் ஒன்று சேர்த்து மூதாதையருடைய உயிராத்மாக்கள் விண் செல்ல வேண்டும் என்று எண்ணும் போது
1.அவர்கள் சூட்சம நிலைகள் பெற்றவர்கள் – அதாவது எடையற்றவர்கள்
2.அதனால் (எடை இல்லாததால்) நம் உணர்வால் சப்தரிஷி மண்டலத்திற்குள் அவர்களை எளிதில் உந்தித் தள்ள முடியும்.

மழை பெய்து அது வெள்ளமாகப் பாயும் போது எதுவாக இருந்தாலும் செத்தை குப்பை எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு கடலில் சேர்க்கின்றது.

அதைப்போல நம் எல்லோருடைய எண்ணங்களையும் குவித்து ஏக காலத்தில் மூதாதையருடைய உயிராத்மாக்கள் விண் செல்ல வேண்டும் என்று உந்திச் செலுத்தும் போது
1.அலுங்காமல் ஒரு ரிமோட் கண்ட்ரோல் போல்
2.அவர்களை அங்கே விண்ணிலே சேர்த்து விடுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த எந்த மனிதனும் உடனடியாக அடுத்த உடலுக்குள் அதிகமாகப் போவதில்லை. அப்படியே உடலுக்குள் போனாலும் அந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் வெளியிலே வருகின்றது.

ஏனென்றால் இன்னொரு மனித உடலுக்குள் போய் அங்கே வியாதியை உருவாக்கி அந்த உடலும் இறந்து வெளியிலே வந்தாலும்
1.முதலில் இறந்தவரின் உயிராத்மா இந்த (இரண்டாவது) உடலில் வளர்த்த உணர்விற்குத் தக்கவாறு
2.அடுத்த உடலின் ஈர்ப்புக்குள் போவதற்கு வெகு நாளாகும்.

அப்படி வெளியிலே வந்த பின் அவர்கள் அடுத்த உடலைப் பெறுவதற்குள் அவர்களுடைய தொடர்பு கொண்ட நாம் இதைப் போன்று தியானித்து விட்டு அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் அவர்கள் பிறவியே இல்லாத நிலைகள் பெறுகின்றனர்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்படிப்பவர்கள் உங்கள் குடும்பத்தில் யாராவது மூதாதையர்கள் இறந்து விட்டால் அவர்கள் அடுத்த உடலுக்குள் அவர்கள் போவதற்கு முன்னாடி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளி இணைத்து விடுங்கள்.

இது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாகின்றது…!

உடலை விட்டுப் பிரிகின்றோம் என்று சொன்னாலும் எங்கே போகிறோம்…? என்று தெரிகிறதா…!

Full moon meditation

உடலை விட்டுப் பிரிகின்றோம் என்று சொன்னாலும் எங்கே போகிறோம்…? என்று தெரிகிறதா…!

மனிதன் இறந்தபின் இன்னொரு உடலுக்குள் போய்த் தான் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

மனிதனாக வாழும்போது கோபக்காரனாக இருந்தால் இறந்த பிற்பாடு எங்கே போவோம். அதே போல ஒரு கோபக்காரனுடைய உணர்வுகள் உடலுடன் இருந்தால் அந்த உடலுக்குள் நம் உயிரான்மா சேரும்.

ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான எண்ணங்களை எண்ணி “எனக்கு இப்படித் துரோகம் செய்தான்… பாவி…!” என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.
1.சாகும் போது அதே எண்ணத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்
2.அடுத்து அதே உணர்வுடன் இருக்கக்கூடிய உடலுக்குள் வந்து விடும்.

எந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வளர்ந்ததோ அதே போன்ற இன்னொரு உடலுக்குள் போய் அங்கே வெறுப்பை ஊட்டிப் பல தீய விளைவுகளை உண்டாக்கச் செய்யும்.

கடைசியில் வேதனையான உணர்வைச் சுவாசித்து அந்த உடலுக்குள்ளும் வேதனையை உருவாக்கி மிகவும் நஞ்சு கொண்ட உயிரான்மாவாகத்தான் மீண்டும் வெளியிலே வர நேரும்.

இதைப் போல நாம் பல உடலுக்குள் சென்றாலும் மனிதனால் இயக்கப்படக்கூடிய இந்தச் சக்தி பிறருடைய உடலுக்குள் சென்று தீய விளைவுகளை உருவாக்கி விட்டு சிந்தனையற்ற நிலைகளில் வெளியில் வந்து
1.ஆடாகவோ மாடாகவோ அல்லது மற்ற உயிரினங்களாகவோ பிறந்து
2.மீண்டும் மனிதன் கையில் வளர்க்கப்பட்டு அல்லது மனிதனால் அடித்துக் கொல்லப்படும் போது
3.அந்த உயிராத்மா மனித சுவாசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றது.
4.மனித உடலுக்குள் வந்து கருவாகி மீண்டும் மனிதனாகப் பிறக்க நேரிடுகின்றது.

இப்படித்தான் மனிதன் மீண்டும் மனிதனாக வர முடியும். ஆனாலு எத்தனை முறை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறோம்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இதற்குத் தான் பரமபதத்தைக் காட்டினார்கள் ஞானிகள். ஒவ்வொரு நிலைகளிலும் நாம் முன்னேறி வரும் போது முதலில் சிறு பாம்பு கடிக்கின்றது. பின்னாடி மேலே போகப் போக ஒவ்வொரு விஷத்தின் தன்மை வரும்போது
1.நாம் எவ்வளவு உயர்ந்து போனாலும்
2.நாம் உயர்ந்த சக்திகளை எடுத்தாலும் என்ன ஆகின்றது…?

ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் பட்டாலும் அது விஷம் தான், ஒரு குடம் பாலில் அந்த துளி விஷம் பட்டாலும் அது விஷம் தான்.

இதைப் போன்று தான் வேதனை என்ற சத்தை அதிகமாக இந்த மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் மனித சிந்தனையை முழுமையாக அழித்து விடுகின்றது.

அது போன்று சிந்தனையை அழிக்கச் செய்யும் உணர்வின் தன்மைகளை மாற்றுவதற்குத்தான் உங்களுக்கு பௌர்ணமி தியானத்தில் மெய் ஞானிகளின் அருள் சக்தியை அதிக அளவில் பெறக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

வானை நோக்கி உங்கள் நினைவலைகளைச் செலுத்தும் பொழுது உங்கள் எண்ணங்களுக்குள் செருகேற்றி சப்தரிஷி மண்டலத்துடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு (HIGH FREQUENCY LINK) ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்தும் பொழுது அறியாது சேர்ந்த எத்தகைய விஷத்தையும் மாற்ற வல்ல சக்தி கிடைக்கின்றது.

அத்தகைய ஒளியான உணர்வுகள் உங்கள் உடலுக்குள் விளைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராக மாறும். உடலை விட்டுப் பிரிந்தால் இந்தப் பூமியில் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் இணைய முடியும். பிறவா நிலை பெறலாம்.

அதற்காகத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் எல்லோரையும் விண் செலுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளவர் ஈஸ்வரபட்டர்

Ultimate destination - ursa major

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் எல்லோரையும் விண் செலுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளவர் ஈஸ்வரபட்டர்

நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் என்று சொல்கிறோமே அவருடைய உயிராத்மா இதற்கு முன் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்று சப்தரிஷி மண்டலங்களை அடைந்தது.

1.அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் இங்கே வரும் பொழுது தான்
2.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனின் உணர்வுக்குள்ளும் அது பட்டு
3.அந்த உணர்வின் தன்மை மெய் ஒளிகளாக வளர்ந்து அதன் வழியாகப் (இன்றும்) பரப்பிக் கொண்டுள்ளது,

பல பாகங்களில் (வேறு பிரபஞ்சத்தில்) பரவினாலும் நம் பூமிக்குள்ளும் அந்த மெய் உணர்வுகள் பலவாறு பரவிக் கொண்டிருக்கின்றது என்ற நிலைகளை அவர் உணர்த்தினார்.

அதாவது பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் அவர் சென்றிருந்தாலும் அந்தந்தக் காலத்தில் அவரிடமிருந்து வந்த ஒளி அணு மற்ற மனிதர்களுக்குள் ஈர்க்கப்பட்டு அவர்கள் மூலம் உணர்த்தி வந்தார்.
1.ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில்
2.இப்பொழுது தற்சமயம் வெளிப்படுத்தியதும் அதைப் போன்ற நிலைகள் தான்.

மனிதர்கள் உடலை விட்டுச் சென்ற பின் பூமியின் பிடிப்பில் இருக்கும் அந்த உயிராத்மாக்களை எப்பொழுது… எவ்வாறு… விண் செலுத்த வேண்டும்..? என்ற உணர்வின் தன்மையை அந்த உடலிலிருந்து உணர்த்திச் சென்றார்.

தாய் தந்தையர் அவர்கள் எண்ணத்தால் கருவாகி நம்மை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கினாலும் அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அந்த ஆன்மாக்களை எப்படி விண் செலுத்த வேண்டும்…? என்றும் அந்த மார்க்கத்தைக் காட்டினார்.

தாய் தந்தையரை நாம் எண்ணி எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “உடலுடன் உள்ள நாம்.. உந்தித் தள்ள வேண்டும்…!”

அவ்வாறு அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க சக்திகளை
1.அவர்களுக்கு உணவாக ஊட்டச் செய்து
2.அந்த உணர்வின் சத்து கொண்டு ஒளியின் சரீரமாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்.

அவ்வாறு வளர்க்கச் செய்யும் பொழுது தான் நம் உணர்வின் அலைகள் விண்ணை நோக்கிச் செல்லும்…! என்ற இந்த உண்மையின் நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

அதாவது நம் முன்னோர்களை விண் செலுத்தினால் தான் நாமும் அவர்கள் வழியில் விண் செல்ல முடியும். இனம் இனத்தை வளர்க்கும் என்ற நிலையைக் காட்டினார்.

ஈஸ்வரபட்டரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா 1971வது வருடம் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று விண் சென்றது. அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்தது.

1.சப்தரிஷிகளாக ஆவதற்கு முன் – அவர்கள்
2.தன் மனித உடலிலிருந்து எவ்வாறு அந்த ஆற்றல்கள் பெற்றார்கள்…? என்றும்
3.எவ்வாறு சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்…! என்ற நிலையையும்
4.விண் சென்ற பின் முதல் நிலையாக – ஈஸ்வரபட்டர் அந்தப் பேருண்மைகளை எமக்கு (ஞானகுரு) வழிகாட்டினார்.

குருநாதர் எப்படி எனக்குக் காட்டினாரோ அவர் காட்டிய வழிகள் கொண்டு தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலேயும் உங்களுக்கு இந்த உபதேசத்தின் வழி கொண்டு அதை யாம் ஊட்டுகின்றோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும்… அவர்கள் வழியில் நாமும் விண் செல்ல வேண்டும்… என்ற இந்த ஆசையை ஊட்டியதே அந்தக் குருநாதரின் உணர்வின் இயக்கம் தான்…!

அருள் ஒளியின் சுடரை நமக்குள் ஏற்றி “மோட்சத்திற்கு வழி காட்டுகின்றார்கள் ஞானிகள்…!”

deepa oli lights

அருள் ஒளியின் சுடரை நமக்குள் ஏற்றி “மோட்சத்திற்கு வழி காட்டுகின்றார்கள் ஞானிகள்…!”

ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் தன் அருகிலே இருக்கக்கூடிய மற்ற பொருள்களைக் காணச் செய்கிறது.

இதைப் போல நமது உயிர் ஒளியாக இருக்கின்றது.
1.நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் குணத்தையும்… மணத்தையும்…
2.நமக்குள் உயிர் ஒளியாக (வெளிச்சமாக) நின்று
3.உணர்வின் வழியில் மனத்தின் வழியில் நமக்கு உணர்த்துகின்றது அறியச் செய்கின்றது.

அதாவது உயிர் நமக்குள் தீபமாக இருந்து சுடராக இருந்து
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அப்பொருளை
2.நுகர்ந்த உணர்வின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஊட்டி
3.உணர்வால் நம்மை அறியச் செய்கின்றது.
4.மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

நமது ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிய வேண்டும் என்று நினைவுபடுத்தும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

உலகில் அசுரன் தோன்றி கொடிய செயல் கொண்டு மக்களைக் கொன்று குவித்துக் கொண்டுள்ளான். அவனை வதம் செய்யக் கிருஷ்ண பரமாத்மா கண்ணன் ரூபமாகப் பூலோகத்திலே தோன்றினான். அந்த நரகாசுரனைக் கண்ணன் வென்றான் என்று ஒரு சாரார் காட்டுகின்றார்கள்.

முருகன் வழியில் எடுத்துக் கொண்டால் முருகன் உலகில் தோன்றிய அசுர சக்திகளை அகற்றி அதைக் கொன்று குவித்தான் என்று கூறும் காவியங்களும் உண்டு.

அத்தகைய காவியங்களில் தப்பில்லை. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள மூலக் கருத்தைத் தான் நாம் பிழையாக அறிந்து கொண்டு செயல்பட்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கெட்டதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உடலாக நம்மை அமைத்துக் கொடுத்தது நமது கண்கள் தான்…!

தன்னைத் தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட “பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்ற நிலையில் கூர்மையாக உற்றுப் பார்த்து தன்னை மீட்டிடும் உணர்வுகள் வளர்ந்து… வளர்ந்து… கூர்மையாகி…! நாம் வலுவாக ஆனதற்குக் காரணமும் இந்தக் கண்கள் தான்…!

தன்னை மீட்டிக் கொள்ளும் உணர்வுகள் கூர்மையான பின் அதனின்று வலுவான நாற்றத்தைப் பிளந்து நல்ல சக்தியை நுகரும் வராகனாகின்றது.

தீமைகளைப் பிரித்து நல்லதை நுகரும் சக்தியாக வலுவான நிலைகள் கொண்டு உயிர் நம்மை மனித உடலாக உருவாக்கினாலும் அத்தகைய இருள் சூழா நிலைகள் பெற ஒவ்வொரு நிமிடமும் நமக்கு வழி காட்டியது இந்தக் கண்கள் தான்…!

இப்படியெல்லாம் நம்மை நமது கண்கள் காத்து வளர்ந்து வந்த நிலையில் மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் அசுர உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
1.தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றஅந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்
2.நம் “கண்ணின் நினைவாற்றலை…” விண்ணிலே கூர்மையாகச் செலுத்தி
3.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் வலிமையாக்கி வாழ்க்கையில் வந்த அசுர சக்திகளைக் கொன்று
4..ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்தத் தீமையும் நமக்குள் இயங்காதபடி அடிமைப்படுத்திட முடியும்.

அதாவது
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் அரவணைத்தோம் என்றால் அந்தப் பேரருள் உணர்வுகள்
2.தீபத்தின் ஒளியின் இருள் விலகுவது போல் ஒளியின் சுடராக நம் ஆன்மாவில் பெருகி
3.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் பேரொளியாகி
4.என்றும் நிலையான ஒளிச் சரீரத்தை ஒவ்வொருவரும் பெற முடியும்.